full screen background image

முஸ்தபா முஸ்தபா – சினிமா விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், ஜாவா சுந்தரேசன், லிவிங்ஸ்டன், உமா, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, மற்றும் சாணக்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்: பிரவீன் சரவணன்,​ தயாரிப்பு: பிரதீப் மகாதேவன், தமிழ்நாடு விநியோகஸ்தர்: சக்தி பிலிம் பேக்டரி, சக்திவேலன் பி, பேனர்: தி மாபோகோஸ் கம்பெனி, இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு: கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ, படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ் பத்திரிக்கை தொடர்பு: டிஒன், சுரேஷ் சந்திரா, .அப்துல் நாசர்.

நகைச்சுவை நடிகரான சதீஷ் இதற்கு முன்பு மூன்று திரைப்படங்களில் நாயனாகவும் நடித்துவிட்டார். இப்போது இவருடைய ஹீரோ நடிப்பில் வெளிவந்திருக்கும் நான்காவது படம் இது.

தொலைக்காட்சி சேனலில் வேலை செய்து வரும் சதீஷ் முழு வேலையாக தன்னுடைய காதலியான மருத்துவர் மோனிகாவை காதலித்து வருகிறார். பகுதி நேர வேலையாக சம்பளம் தரும் சேனலுக்காகவும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நெருங்கிய நண்பர் சுரேஷ் ரவி. சதீஷுக்கும் அவருடைய காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது மணமக்களுக்கான ஆடைகளை வாங்குவதற்காக அனைவரும் பிஸியாக இருந்த அந்த சூழலில் திடீரென்று ஒரு வீடியோ சதீசுக்கு வருகிறது. அதில் வேறொரு பெண்ணுடன் அவர் படுக்கையில் படுத்திருப்பது போன்ற அந்தரங்கமான வீடியோவாக அது காட்சியளிக்கிறது.

தன்னுடைய காதலியான மோனிகாவுக்கு பொய் சொன்னாலே பிடிக்காது என்ற மனநிலையை இருப்பவர். ஏற்கனவே ஒரு சின்ன பொய்யை சொன்னதற்காக பிரேக் அப் என்று சொல்லிவிட்டு ஓடியவர் என்பதால் இந்த விஷயத்தை காதலியின் காதுகளுக்கும், கண்களுக்கும் போகாதவாறு பார்த்துக் கொள்ள நினைக்கிறார் சதீஷ்.

இந்தப் பிரச்சனையில் தனக்கு உதவ கருணாகரனையும் பிடித்து இழுக்கிறார் சதீஷ். இந்த மூன்று பேர் கூட்டணியும் ஒன்று சேர்ந்து அந்த வீடியோ எங்கிருந்து வந்தது யார் அதை அப்லோட் செய்தது எதற்காக அப்லோடு செய்தார்கள் அதை எப்படி நீக்குவது என்றெல்லாம் யோசனை செய்து படம் முழுவதும் போராடுகிறார்கள்.

அவர்களுடைய இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இந்த முஸ்தபா முஸ்தபா என்ற திரைப்படம்.

முழு நீள காமெடி திரைப்படம் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் லாஜிக் எல்லாம் எதுவும் பார்க்காமல் ஒரு ரீல் விட்டு அடுத்த ரிலீல் சிரிப்பு என்பதாக சிரிப்பை கொஞ்சமாக வைத்திருந்தாலும் படம் ரசிக்கும்படியான திரைக்கதையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேடை நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் சதீஷ் என்பதால் அவருடைய ஒன் லைன் காமெடி இந்தப் படத்தில் அதிகமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தன்னுடைய காதலியிடம் இருந்து அவர் தப்பிப்பதற்காக அவர் பொய் மேல் பொய் சொல்கின்ற பல காட்சிகள் நமக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது.

இந்த வீடியோவை அப்பா, அம்மா, காதலி, தன்னுடைய குடும்பத்தினர் உட்பட யாருமே பார்க்க கூடாது என்பதற்காக சதீஷ் செய்கின்ற பல ட்ராமாக்கலும் நமக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறது.

நண்பனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, சதீசுக்கு விட்டுகளை எடுத்துக் கொடுப்பதற்காகவே படம் முழுவதும் வலம் வருகிறார். கருணாகரன் அவரும் தன் பங்குக்கு சில டைமிங் சென்சான காமெடிகளை வீச மூன்று பேர் கூட்டணியும் தியேட்டரை கொஞ்சம் கலகலக்க வைத்திருக்கிறது.

சதீஷ் ஜோடியாக நடித்திருக்கும் காதலி மோனிகா சில காட்சிகளில் மட்டுமே வலம் வந்திருக்கிறார். ஆனாலும், அவருடைய கோபமும் செல்ல சண்டையும்.. சதீஷூக்கு மட்டுமல்ல நமக்கும் கொஞ்சம் ஜாலியாகத்தான் இருக்கிறது.

சுரேஷ் ரவிக்கு காதலியாக நடித்த மானசா சாவித்திரிக்கும் அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் இருந்த காட்சிகளில் நம்மை கவர்கிறார்.

சதீஷின் அப்பாவாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டனும், அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன் மேலும் படத்தில் இருந்த அத்தனை நடிகர்களுமே காமெடி படத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள். இவர்களை அழகாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ படம் முழுவதையும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். எந்த இடத்திலும் படத்தின் ஒளிப்பதிவின் தரம் குறையவே இல்லை. முதல் கட்சியிலிருந்து கடைசிவரையில் ஒரே மாதிரியாகவே இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் ரூபனின் பாடல்கள் மிக எளிய இசையில் பாடல் வரிகளும் நம் காதில் விழுகின்றபடி அமைத்து தன் வேலையை சரியாகவே செய்திருக்கிறார். பின்னணி இசையிலும் சிரிப்பை தூண்டி விடும்படியாக இசையை அமைத்து இயக்குநருக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

படத் தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் இதுவொரு காமெடி திரைப்படம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு கத்தரி போட்டு கொடுத்திருக்கிறார்.

கதை எழுதி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரவீன் சரவணன் இது தன்னுடைய முதல் படம் என்பதால் எப்படியாவது ஜெயித்தாக வேண்டுமே என்பதற்காக கடும் போராட்டத்தை இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார்.

சீரியஸ் படங்களைவிடவும் காமெடி படங்களை இயக்குவது கடினம் என்பதால் கண்டிப்பாக இந்த அளவுக்கு கடைசிவரையிலும் பார்க்கத் தகுந்த வகையில் இந்தப் படத்தை திரைக்கதை அமைத்திருப்பதால் அவரையும் நாம் பாராட்ட வேண்டும். இன்னமும் கொஞ்சம் காமெடி வரும்படியாக காட்சி அமைப்புகள் இருந்திருந்தால் படம் நிச்சயமாக மிகப் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

ஒரே ஒரு வீடியோவை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் இருப்பது போல திரைக்கதையை வடிவமைத்து கொடுத்து ஓரளவுக்கு சிறப்பான வழியில் இயக்கம் செய்திருக்கும் இயக்குநர் பிரவீன் சரவணனை மனதாரப் பாராட்டுகிறோம்.

கொஞ்சம் ஜாலியா படம் பாக்கணும் நினைத்தால் அவசியம் இந்தப் படத்தைப் பார்த்து சிரித்து மகிழுங்கள்!

RATING : 3.5 / 5

 

Our Score