full screen background image

99/66 – சினிமா விமர்சனம்

99/66 – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :-

முதல் கதாநாயகன் சபரி (குணா )

இரண்டாவது நாயகன் ரோகிந்த் (கரண்)

முதல் நாயகி ரக்சிதா மகாலட்சுமி (சங்கீதா)

இரண்டாவது நாயகி ஸ்வேதா (ரஞ்சிதா)

தயாரிப்பாளர் இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி)

பவன்கிருஷ்ணா (விக்கி)

கே.ஆர்.விஜயா (துர்கா தேவி அன்னையார்)

கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம்,

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு  சேவிலோ ராஜா (எம்டன் மகன்)

படத்தொகுப்பு மீனாட்சி சுந்தரம்

கலை இயக்குநர் ஜெயமுருகன் .

நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் அக்ஷயா ஆனந்த்

ஸ்டண்ட் –  பயர் கார்த்திக்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு மஹேந்திரன்

கிரியேட்டிவ் டைரக்டர்  ரவி பார்கவன்

தயாரிப்பு நிறுவனம் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இணை தயாரிப்பு சுஜாதா மூர்த்தி

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி

பத்திரிக்கை தொடர்பு புவன் செல்வராஜ்

இந்த வாரத்திய பேய் கதை இதுதான். மர்டர், சஸ்பென்ஸ், திகில், திரில்லர் என்று அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திரைப்படம்.

ஒரு மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட் அந்த அபார்ட்மெண்ட்டில்  இருந்த ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அவளுடைய ஆவி அவள் வாழ்ந்து வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே அபார்ட்மெண்டில் இன்னொரு வீட்டுக்கு வரும் ஒரு பெண்ணுக்கும், இறந்து போன பெண்ணின் ஆன்மாவுக்கும் இடையில் நட்பு வளர ஆரம்பிக்க இறந்து போன பரிதாபத்திற்குரிய அந்த ஆன்மா தன்னுடைய நண்பியுடன் இணைந்து என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் இந்தப் படம்.

அடுக்கு மாடி குடியிருப்பில் ரக்ஷிதா மகாலட்சுமி சபரி தம்பதியினர் 66 என்ற டோர் நம்பர் உள்ள வீட்டை வாங்கி குடியேறுகின்றனர். இதே குடியிருப்பில் 99-வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும் மகாலட்சுமிக்கும் இடையில் நட்பு உருவாகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். தங்களது குடும்பப் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.

அந்த அடுக்கு  மாடி குடியிருப்பின்  சங்கத்தின் தலைவரான எம்.எஸ்.மூர்த்தி பல இரவு நேரங்களில் அந்த காம்பவுண்ட்டைவிட்டு வெளியே செல்ல முயலும் பொழுதெல்லாம் ஒரு ஆந்தை அவரைக் கண்டு வெளியில் வராத அளவுக்கு அவரை விரட்டுகிறது.

இந்த சம்பவம் தொடர்ந்து பல நாட்கள் அங்கே நடந்து கொண்டு இருக்க எம்.எஸ்.மூர்த்தியை ஆந்தை ஏன் தடுக்கிறது என்கின்ற கேள்வி பார்வையாளர்களுக்குள் வளர்த்து கொண்டே இருக்கிறது.

ரக்சிதாவின் கணவர் திடீரென்று டிராக் மாறி ரக்சிதாவிடம் இருக்கும் பணத்திற்காக அவரை கொலை செய்ய முயல்கிறார். ரக்சிதாவும் தெரிந்தோ, தெரியாமலோ தப்பித்துக் கொண்டே போகிறார்.

திடீரென்று ஒரு நாள் சபரி ஸ்வேதாவை கொலை செய்ய முயல்வதை நேரில் பார்க்கிறார் ரக்ஷிதா. அதிர்ச்சி அடைந்த அவர் அத்தனை குடியிருப்புவாசிகளையும் வரவழைத்துவிட பலரும் ஓடி வந்து ரக்சிதாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

அப்போதுதான் ரக்சிதாவுக்கே தெரிய வருகிறது அந்த 99 என்ற டோர் நம்பர் வீட்டில் யாருமே குடியிருக்கவில்லை என்பது.. அந்த வீட்டில் குடியிருப்பதாக சொன்ன ஸ்வேதா அந்த வீட்டில் ஏற்கனவே இருந்தவர். அந்த வீட்டிலேயே இறந்து விட்டார் என்பதையும் தெரிந்து கொள்கிறார் ரக்சிதா!

இப்போது தனக்கு மட்டும் ஸ்வேதா காட்சியளிப்பது ஏன் எதற்கு என்ற கேள்வி ரக்சிதாவுக்கு எழுகிறது. அதேபோல் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி ஏன் இந்த காம்பவுண்ட்டைவிட்டு வெளியில் போக முடியாமல் தத்தளிக்கிறார் என்ற கேள்வியும் அனைவருக்கும் எழுகிறது.

ஸ்வேதா யார்..? அவர் எப்படி இறந்தார்..? அவருடைய ஆன்மா ஏன் இங்கேயே சுற்றுகிறது?.. என்கிற கேள்விகளுக்கெல்லாம் கிடைக்கும் பதில்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சின்னத்திரையிலேயே ரக்சிதாவுக்கு மிகப் பெரிய அளவுக்கு ரசிகர்கள் உண்டு அதேபோல் இப்பொழுது வெள்ளித் திரையிலும் அவருக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே போகிறார்கள். அவருடைய அந்த அழகான வட்டமான முகமும், உடல் தோற்றமும் பலருக்கும் பிடித்துப் போக ரக்சிதாவுக்கு ஒரு சிறந்த இயக்குநரும், கதையும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் அவர் இருக்கிறார். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ரக்சிதாவின் நடிப்பாக சாதாரணமாக இருக்கும் பொழுது அவர் பேசுகின்ற பேச்சு இயல்பாகவே தோன்றுகிறது. ஆனால் ஸ்வேதாவின் ஆவி அவருக்குள் புகுந்த பிறகு அவர் காட்டுகின்ற அந்த ஆக்ரோஷமான நடிப்பு அப்பா என்ற நம்மை பிரமிக்க வைக்கிறது. அதேபோல் தன்னுடைய கணவரிடம் காதலை வெளிப்படுத்தும்விதமும், ரசிகர்களை கொஞ்சமாக கவர்ந்திருக்கிறது. ரக்சிதாவை இன்னமும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். ஏனெனில், இந்தப் படத்தின் மிகப் பெரிய பிசினஸே அவர் மட்டும்தான்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டவர். யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என்ற கொள்கை உடையவர். அவ்வளவு நல்லவரான அவருக்கு ஏற்பட்ட அந்த முடிவு நமக்கு கொஞ்சம் அவர் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த உணர்வு நமக்கு ஏற்படவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். இயக்குநர் இன்னமும் கொஞ்சம் சிறப்பாக இயக்கம் செய்திருக்கலாம்.

ரக்சிதாவின் கணவராக நடித்த சபரி, ஸ்வேதாவின் கணவராக நடித்த ரோகித் இருவரும் வெள்ளித்திரையில் புதுமுக நடிகர்கள் என்றாலும் சிரித்துப் பேசியே வில்லத்தனத்தை காட்டும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களும் இல்லாமல் ஒரு தனி ட்ராக்கில் காமெடி செய்வதற்காகவே சிங்கம் புலி, முல்லை, கோதண்டம், சான்ஸ் என்று சிறந்த காமெடி வீரர்களை இறக்கிவிட்டிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இவர்களின் காமெடி ஈடுபடவில்லை என்பது சோகமான விஷயம்.

சிறப்பு தோற்றத்தில் கே.ஆர்.விஜயா அம்மாவும் படத்தில் இருக்கிறார். படத்தின் இயக்குநரான எம்.எஸ்.மூர்த்தியும் திரைக்கதையை நகர்த்த உதவி இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பைவிடவும், தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இது பேய் படம் திகில் படம் என்பதால்தான்!

சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு ட்ரோன் ஷாட்களில் அந்தக் குடியிருப்பை அவ்வப்போது அழகாக காட்டியிருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்பின் வடிவமைப்பை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டி இருக்கலாம். ஆனாலும் வசனக் காட்சிகளில் கேமராவை வெவ்வேறு இடங்களில் புதிய கோணங்களில் வைத்து ஓரளவு நம்மை காப்பாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பாடல்கள் இசை, பின்னனி இசையை சேர்த்து செய்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி எதற்காக அத்தனை கிராப்ட்டுகளையும் இவர் ஒருவரே கையில் எடுத்தார் என்று தெரியவில்லை. பாடல்களில் ஒரு கவன ஈர்ப்பும் வரவில்லை என்பதும் பின்னணி இசையும் அழுத்தமாக இல்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

படத் தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரம் நம்மை கொஞ்சம் பயமுறுத்துவதுபோல கத்திரி போட்டு காட்சிகளை ஒன்றுபடுத்தி இருக்கிறார். அதிலும் ரக்சிதாவுக்குப் பேய் பிடித்த உடன் அவர் முகம் காட்டுகின்ற அந்த கோரத்தையும் அதை பார்த்து பயப்படும் மற்றவர்களின் ஆக்சன்களையும் அழகாகத் தொகுத்து இருப்பதால் அந்த காட்சிகளில் மட்டும் நாம் கொஞ்சம் ரசிக்க முடிந்து இருக்கிறது.

ஒரு வீட்டில் ஒரு பெண் இறந்து போனால் அதுவும் பரிதாபமான முறையில் அவருடைய மரணம் நிகழ்ந்தால் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு வெளியில் போகாது என்பார்கள். இதை ஆன்மாவை திருத்தும் வல்லமை படைத்த பூசாரிகள், ஐயர்கள், நம்பூதிரிகள் என்று பலரும் கதை கட்டிவிட்டதா? இல்லையா? என்று நாம் இப்போதுவரையிலும் உணர முடியவில்லை. ஆனால் அதுதான் பல மொழி திரைப்படங்களிலும் தயாரிப்பாளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு கதையை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கும் இயக்குனர் பெண்களுக்கு எதிரான வன்முறையையும் அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் கண்டித்து அந்தக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மற்ற திரைப்படங்களைப் போலவே ஒரு சமூகக் கருத்தை கடைசியாக சொல்லியிருக்கிறார்.

இந்த சாதி என்ற கருமத்தை நாம் எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டே அலைய வேண்டாம். அதை சமாதி கட்டிவிடலாம் என்றும் புத்தர் சொன்னதைப்போல அனைத்து உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்புதான் இந்த உலகத்தையே இயக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று ஒரு கதாசிரியராக நல்லதொரு கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி.

இந்த கருத்தை சொன்னதற்காகவே இப்படத்தை நம் வரவேற்போம்! ரக்சிதாவின் ரசிகர்கள் நிச்சயமாக அவரை தரிசிக்கவாவது தியேட்டருக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.

RATING : 3.5 / 5

Our Score