குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்க்ரிஏஜி பிலிம்ஸ், பாவனா – ஆதித் பிரசனாகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ‘அனோமி’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரியாஸ் மராத்.
இதில் பாவனா – ஜாரா பிலிப், ரகுமான் – ஏசிபி முகமது ஜிப்ரான், ஷெபின் பென்சன் – ஜியான் பிலிப், விஷ்ணு அகஸ்தியா – பிரசாத் ஈஸ்வர், பினு பப்பு – டாக்டர். ஷண்முகம், அர்ஜுன் லால் – டாக்டர்.அல்பீ, திரிஷ்யா ரகுநாத் மற்றும் சுமித் நாவல் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இணை தயாரிப்பாளர்: ராம் மிற்சண்டனி, ராஜேஷ் மேனன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அபினவ் மெஹரோட்ரா, ஒளிப்பதிவாளர்: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர், படத்தொகுப்பு: கிரியன் தாஸ், கலரிஸ்ட் : ஜயதேவ் திருவெய்பதி, டிஐ ஸ்டுடியோ : போயட்டிக் ஸ்டுடியோ, தயாரிப்பு மேற்பார்வை : அருண் ஜாக்ஸ், ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா, ரீ ரெகார்டிங் : ஃபசல் ஏ பேக்கர், மேக்கப் கலைஞர்: அமல் சந்திரன், காஸ்டியும் : சமீரா சனீஷ், முதன்மை இணை இயக்குநர்: அருண் தேவ், ஸ்டில்ஸ் : ஸ்ரீஜித் செட்டிபடி, விஎஃப்எக்ஸ்: எக் வைட் ரூ டிஜிப்ரிக்ஸ், தயாரிப்பு மேற்பார்வையாளர்: ராகுல் அனீஷ், மார்க்கெட்டிங் தலைவர்: பாத்திமா நாக்ரீ , ஆடியோ நிறுவனம் : டி-சீரிஸ் மியூசிக், பத்திரிக்கை தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்.
இதுவும் ஒரு மர்டர், மிஸ்டரி கதைதான். காவல்துறையின் தடயவியல் பிரிவில் அதிகாரியாக இருக்கிறார் ஹீரோயின் ஜாரா பிலிப் என்ற பாவனா.
பாவனாவின் குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபொழுது ஏற்பட்ட விபத்தில் அவருடைய அப்பாவும், அம்மாவும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர் அந்த கோரக் காட்சியை பார்த்த நிமிடத்தில் இருந்து பாவனாவின் தம்பியான ஜியான் பிலிப் சற்று மன நிலை பிறழ்ந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளையும் பாவனாதான் செய்து வருகிறார். தன்னுடைய தம்பி மீது அளவுக்கு அதிகமாக பாசத்தையும் வைத்திருக்கிறார் பாவனா.
இந்த நேரத்தில் சென்னையின் ஒதுக்கப்புறங்களில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. இந்த இரண்டு கொலை சம்பவங்களில் பாவனாதான் தடயத்தை தேடும் குழுவுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
அந்தப் பகுதியின் அடிஷனல் போலீஸ் கமிஷனரான முகம்மது ஜிப்ரான் என்ற ரகுமான்தான் இந்த வழக்கை விசாரிக்கிறார் ஆனால் மிகவும் டீப்பாக இந்த வழக்கிற்குள் போகாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று அலட்சியமாகவே சொல்கிறார் ரகுமான்.
மேலிட பிரஷரும், அரசியல்வாதிகளின் உருட்டல் பிரட்டலும்… இந்த கேஸை தீவிரமாக விசாரிக்க வேண்டிய கட்டாயத்தை ரகுமானுக்கு ஏற்படுத்துகிறது.
இந்த நேரத்தில்தான் திடீரென்று பாவனாவின் தம்பி காணாமல் போகிறார். போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய உடல் கிடைக்கிறது. கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய தம்பியை பார்த்து அதிர்ச்சியாகிறார் பாவனா.
தாங்க முடியாத சோகத்தில் இருந்தாலும் காவல் துறையின் மெத்தன போக்குதான் தன்னுடைய தம்பியின் சாவுக்கு காரணம் என்று நினைக்கும் பாவனா தானே தன்னந்தனியாக இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் ரகுமானும் டிபார்ட்மெண்டில் மேல் அதிகாரிகளிடம் இருந்து வரும் பிரஷரை தாங்க முடியாமல் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க இறங்குகிறார். தனித் தனி டீம்களை அமைத்து சிக்கி இருக்கும் தடயங்களை வைத்து குற்றவாளியை நெருங்குகிறார்.
இறுதியில் என்ன நடந்தது பாவனா, ரகுமான் இருவரில் யார் குற்றவாளியைப் பிடித்தது? அந்தக் குற்றவாளி யார்? ஏன்.. எதற்காக.. இந்தக் கொலைகள் நடந்தது? இதற்கெல்லாம் விடைதான் இந்த ‘அனோமி’ என்ற திரைப்படம்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு முகம் காட்டி இருக்கும் பாவனா ஒரு அழகான அழுத்தமான நடிப்பை படத்தில் காண்பித்து இருக்கிறார். தன்னுடைய தம்பி மீது அவர் காட்டுகின்ற பாசம்… தம்பியைக் காணவில்லை என்றவுடன் அவர் படுகின்ற துயரமும் ஒன்றாகவே நமக்குத் தெரிகிறது.
வழக்கு என்ன ஆனது என்று கேட்டு ரகுமானிடம் சீறும்பொழுதும், தன்னுடைய தம்பியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடித்து இறங்கியவர் தம்பி மரணமானவுடன் கொலையாளியை கண்டுபிடித்து தீர வேண்டும் என்று வெறித்தனமாக அவர் அந்த வழக்கில் காட்டுகின்ற முனைப்பு… “ஒரு அக்கா என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நமக்கு தோன்றும் அளவுக்கு நடித்திருக்கிறார் பாவனா.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமான் மேலதிகாரிகளால் அவமானப்படும்போது தன்னுடைய உணர்வை கோபமாக காட்டும்போது நமது பரிதாபத்தை பெற்றுக் கொள்கிறார்.
அதே நேரம் இந்த வழக்கில் உள்ளே இறங்கிய பின்பு ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்த்து கொண்டே போகும்படி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையில் தன்னுடைய பயணத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இறுதிக் காட்சிகள் வில்லனோடு அவர் நடத்தும் சண்டை காட்சியும் கடைசியாக எல்லாத்தையும் முடித்துவிட்டு பாவனாவை அவர் பார்க்கின்ற அந்த ஒற்றை பார்வையே… கை தட்ட வைத்துவிட்டது.
பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் ஷெப்பின் பென்சன் ஒரு நோயாளி என்பதையும் தாண்டி அக்காவின் தம்பியாக மிக அழகாக நடித்திருக்கிறார். பாவனாவின் காதலனாக நடித்திருக்கும் அர்ஜுன் லால் இன்னொரு பக்கம் பாவனாவை மடை மாற்றுவதற்காகவே பாவனாவுடன் இருந்திருக்கிறார் என்பது தெரியும்போது அடப்பாவி மனுஷா என்று திட்டத் தோன்றியது. மேலும் விஷ்ணு, அகஸ்தியா, பினு பப்பு என்று மற்ற சின்ன கேரக்டரில் நடித்தவர்கள்கூட சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது போன்ற படங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைய வேண்டியது தொழில் நுட்பக் கலைஞர்கள்தான். இந்தப் படத்தில் அது கச்சிதமாக நடந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் முதல் காட்சியில் இருந்து இறுதி வரையிலும் கேமராவும் ஒரு நடிகராக இருக்கிறது என்பதை காட்டுவிதமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களை பல்வேறு கோணங்களில் காட்டும்போது நமக்கே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. இறுதிக் காட்சியில் நடக்கும் யுத்தத்தில் வில்லனை பிடிக்க முயலும்பொழுதும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரின் கிளைமாக்ஸை சொல்வது போல கேமிராமேன் உழைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்த்தன் ராமேஸ்வரன் இசையில் பாடல்களையும் தாண்டி பின்னணி இசை அழகோ அழகு. படம் மர்டர், மிஸ்டரி, திரில்லர் என்பதால் அந்தந்த காட்சிகளின் மூடுகளுக்கு ஏற்ப பின்னணி இசையை அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் துரத்தலும், ஓடுவதுமாக இருக்கும் அந்த உணர்வை நமக்கும் காட்டி நம்மையும் படபடப்பாக வைத்திருக்கிறார் ஹர்ஸவர்த்தன்.
சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் திரைக்கதை ஓட்டத்தில் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று நம்மை முதல் கட்சியிலேயே நினைக்க வைத்து வேண்டும். அப்படி ஒரு திரைக்கதையை கொஞ்சமும் நம் கவனத்தை சிதறாத வண்ணம் நம் கவனம் முழுவதும் திரையிலையே இருக்கும்படியாகவும் இறுக்கமான வகையில் படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கிரியன்தாஸ்.
அதிலும் இந்தப் படத்தின் முதல் பாதி என்ன வேகத்தில் பறந்தது என்று தெரியவில்லை. உடனே இடைவேளை வந்துவிட்டது. இடைவேளைக்கு பின்பும் கிளைமாக்ஸ்வரையிலும் அப்படி ஒரு அபாரமான ஓட்டத்தை கொடுத்திருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. இதை எழுதியிருக்கும் இயக்குநர் ரியாஸ் மரத்துக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
மர்டர், சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் என்பதோடு சைக்கோ திரில்லரின் கதை என்பதால் கொலைக்கான காரணத்தை நாம் நம்ப வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட உண்மைக்கு மிக நெருக்கமான கதையாக இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
இதற்கு மேலும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களுக்குத் தெரிந்த பல வித்தைகளையும் இந்த படத்தில் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர். அதனாலேயே இந்தப் படம் இவ்வளவு ஸ்பீடா ஓடி முடிந்துவிட்டதே.. என்று நாமே பாராட்டும் அளவுக்கு அமைந்துள்ளது.
இதுவரையிலுமான சைக்கோ கொலைகளை மையப்படுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக வேறொரு கதைக் களத்தைக் காட்டி இருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் உங்களை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் செய்யாது என்பதால் இந்தப் படத்தை தியேட்டர்களில் பார்த்து ஒரு புதிய அனுபவத்தை பெறுங்கள்.
RATING : 4 / 5









