தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடந்து வரும் V4 Entertainment நிறுவனத்தின் எம்.ஜி.ஆர்., சிவாஜி திரையுலக விருது வழங்கும் விழா, இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்கு எம்.ஆர்.சி., நகரில் உள்ள இமேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பங்களிப்பினை வழங்கியிருந்த பல கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
சென்ற 2016-ம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதினை ‘மாலைமுரசு’ நாளிதழின் செய்தியாளரான ராம்குமார் பெற்றார். மூத்த பத்திரிகையாளரான இராவணன் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.
பி.ஆர்.ஓ.க்கள் ஆர்.எஸ்.அந்தணன், சக்திவேல் இருவரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளர் விருதினை பெற்றனர்.
‘காஷ்மோரா’ படத்திற்காக விவேக், ‘வீர சிவாஜி’ படத்திற்காக விக்ரம் பிரபு, ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்திற்காக பிரபு, ‘அச்சமின்றி’ படத்திற்காக விஜய் வசந்த், ‘ரெமோ’ படத்திற்காக சிவகார்த்திகேயன், ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்காக யோகி பாபு, ‘குற்றமே தண்டனை’ படத்தில் நடித்த விதார்த், ‘பறந்து செல்ல வா’ படத்திற்காக லுத்புதீன், ‘மெட்ரோ’ படத்தில் நடித்தமைக்காக நடிகர் ஷிரிஷ், பல படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருக்கும் மனோபாலா, ‘ஜோக்கர்’ படத்திற்காக குரு சோமசுந்தரம், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், குணச்சித்திர நடிகர்களான தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் மணிகண்டன், மற்றும் சிறந்த வில்லன் நடிகராக ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர். ‘கொடி’ படத்தில் சிறப்பாக நடித்திருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கான விருதினை அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் பெற்றுக் கொண்டார்.
‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் நடித்ததற்காக தான்யா, ‘கபாலி’ படத்தில் நடித்தமைக்காக தன்ஷிகா, ‘பலே வெள்ளையத்தேவா’ படத்திற்காக கோவை சரளா, ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், ‘அச்சமின்றி’ படத்திற்காக சரண்யா பொன்வண்ணன், ‘கபாலி’ படத்தில் நடித்த ரித்விகா, பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த ஆர்த்தி ஆகியோரும் விருதினை பெற்றார்கள்.
‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தின் தயாரி்ப்பாளர் துஷ்யந்த், ‘அச்சமின்றி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத், ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், ‘அரண்மனை-2’ படத்தின் தயாரிப்பாளர் குஷ்பூ ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
அச்சமின்றி படத்தின் இயக்குநர் ராஜபாண்டி, ஜோக்கர் படத்தின் இயக்குநர் ராஜூ முருகன், தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, அம்மணி படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் இயக்குநர் எழில், இது நம்ம ஆளு படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.
‘ரெமோ’ படத்தின் சிறந்த ஒளிப்பதிவிற்காக பி.சி.ஸ்ரீராமும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம், பாடகர் வேல்முருகனும், ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருதினை பத்திரிகையாளர் அருள்செழியனும் விருதினைப் பெற்றார்கள்.
இந்த விழாவில் மூத்தப் பத்திரிகையாளர் நெல்லை பாரதி தொகுத்து வழங்கிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களைப் பற்றிய புத்தகத்தை இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா வெளியிட, இயக்குநர் சீனு ராமசாமி பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாண்டியராஜன், நடிகர் பிரபு, தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், இயக்குநர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி, எஸ்.ஆர்.பிரபாகர், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, நடிகர் சாந்தனு பாக்யராஜ், இசையமைப்பாளர் டி.இமான், ஆகியோரும் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளைக் கொடுத்து கவுரவித்தனர்.