full screen background image

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை முன்னிட்டு மார்ச்-20-ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை முன்னிட்டு மார்ச்-20-ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20-ம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.

நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இந்த நிலையில் அனைத்து நடிகர், நடிகையரும் இந்த பொதுக்குழுவில் பங்கேற்கும் வசதியாக அன்றைய தினத்தில் படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் நடிகர் சங்கம் வேண்டுகோள் வைத்தது.

இந்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து வரும் மார்ச் 20-ம் தேதியன்று அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் ‘நடிக பூபதி’ அமரர் பி.யூ.சின்னப்பாவின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல்.. அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படும். அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரி மற்றும் ‘இணையதளம்’ வெளியிடூம் நடைபெறவுள்ளது.

மேலும், தங்களது வாழ்கையை நாடகத் துறைக்கு அர்ப்பணித்த பழம் பெரும் கலைஞர்களை கௌரவித்து சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

துணை தலைவர் கருணாஸ் வரவேற்புரையாற்ற.. 2014 – 2015-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை பொருளாளர் கார்த்தி சமர்ப்பிப்பார். சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், சங்கத்தின் எதிர்கால நலத் திட்டங்களை குறித்தும் பொதுச் செயலாளர் விஷால் விளக்கி உரையாற்ற, துனண தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

உறுபினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று நடிகர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Our Score