full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1) 12.10.2025 முதல் 26.09.2026 வரை நடந்த செயற்குழு கூட்டங்களில் செயற்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

2) 2025-2026 ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கைக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

3) 2026–2027-ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சங்க சட்ட ஆலோசகராக திரு.கிருஷ்ணா ரவீந்திரன் அவர்களை நியமிக்க பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4) 2026–2027-ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சங்க கணக்குத் தணிக்கையாளராக திரு.ஸ்ரீராம்சுந்தர், SRNR & அசோசியேட்ஸ் அவர்களை நியமிக்க பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5) பாரம்பரியம் மிக்க நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர் நலனுக்காகவும் ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் நமது சங்க உறுப்பினரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.C.ஜோசப் விஜய் அவர்களுக்கும்,

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. இராஜ்மோகன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு செயலாளர்களுக்கும், அரசுத்துறை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

6) கடந்த 67-வது சங்கப் பொதுக்குழுவில் புதிய சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிக்காக வங்கியிலிந்து ரூ.40 கோடி வரை கடன் தொகை பெறுவதற்கு பேரவையின் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து கடன் தொகை ரூ.25 கோடிக்கு மட்டும் பெறப்பட்டு, அந்த தொகைக்கான அசல் மற்றும் வட்டி நிலுவையின்றி செலுத்தப்பட்டு வருகிறது.

அதற்கான வங்கி வைப்புத் தொகையான ரூ.11.50 கோடியிலிருந்து 90% வரை கடன் பெற்றுள்ளோம்.

மேலும் 69-வது பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்ற தீர்மானத்தின்படி கூடுதலாக ரூ.10 கோடிவரை கடன் பெற இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு வங்கியிலிருந்து கடன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அது தொடர்பான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

7) தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தின் பதவிக் காலத்தை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என

08.09.2024 தேதியன்று நிகழ்ந்த 68-வது சங்க பொதுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் சார்பாக உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்ட தீர்மானம்,

பேரவை உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் ஏகமனதாக பொதுக் குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதற்கு கூடுதலாக அரசு அங்கீகாரமும் பெற, சங்கங்களுக்கான தென்சென்னை மாவட்ட பதிவாளர் அவர்களிடம் மனு ஒன்று முறையாக சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட சார்பதிவாளர் அவர்கள் அது தொடர்பான விபரங்களை தீர ஆய்வு செய்து,

சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கம் மற்றும் காரணங்கள் ஏற்புடையதாக தோன்றுவதாலும்

20.03.2025 முதல் 19.03.2028 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு தற்போதைய சங்க நிர்வாகமே தொடர்ந்து நீடிக்க,

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப் பிரிவு 15 (4)-ன்படி பிரிவு 54-ன் கீழ் விலக்களித்து, 14.10.2025 தேதியிட்ட அரசு ஆணை எண்.311-ஐ வெளியிட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்காணும் அரச ஆணையின்படியும், முன்னரே நிறைவேற்றப்பட்ட 68-ஆம் ஆண்டு பொதுக்குழு தீர்மான எண்.10-ன் படியும் தற்போதைய நமது சங்க நிர்வாகமே 2025 முதல் 2028- ஆண்டு வரையிலும் மூன்றாண்டு காலத்திற்கு தொடர்ந்து நீடித்திருக்க….

முன்னரே நிறைவேற்றப்பட்ட பொதுக் குழு தீர்மானத்தை மறு உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை இந்த பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

8) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கு இடையே போடப்பட்ட 26.07.2007 தேதியிட்ட உடன்பாட்டின் விதிகளின்படி,

இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த அம்சமான, மேற்காணும் இரு சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் மட்டுமே கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பது குறித்தும்,

உறுப்பினர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய உடன்படிக்கையில் மேலும் காலதாமதமின்றி கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தவும்,

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அன்புடனும், பணிவுடனும் வலியுறுத்தும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

9) தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ்த் திரைப்படத் தயார்ப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே முன்பே ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில்,

திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் துணை நடிகர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகித வாய்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு வழங்கப்படவேண்டும் என 26.07.2007 தேதியிட்ட ஒப்பந்தம் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு

தொடர்ந்து திரு.கேயார் அவர்கள், திரு.கலைப்புலி எஸ் தாணு அவர்கள், திரு விஷால் அவர்கள், திரு.முரளி ராமசாமி அவர்கள் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த கால தலைவர்கள் அனைவராலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில்,

கடந்த சில வருடங்களாக அது பின்பற்றப்படாமல் இருப்பதற்கும், அதை தடுக்கும்விதமாக செயல்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

10) திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் நமது சங்க உறுப்பினர்கள் இனி தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வதை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

11) தயாரிப்பு நிறுவனங்களோடு ஊதியம் சார்ந்த மற்றும் பிற புகார்களை நமது சங்கத்தில் வழங்கும்போது,

பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் உரிய ஒப்பந்த நகலையும் இணைத்து வழங்கினால் மட்டுமே (இது இனி முற்றிலும் புதிதாக பங்குக்கொள்ளும் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்)

அந்தப் புகார் குறித்த நடவடிக்கை விசாரணைக்கு எடுக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

12) திரைப்படப் படப்பிடிப்புகளில் காட்சிப்படுத்தும் பின்னணி மற்றும் கூட்டத்தில் பொது மக்களாக பணியாற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு,

படப்பிடிப்பு நடந்த ஒரு வார காலத்திற்குள் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

அவ்வாறு ஊதியம் வழங்கத் தவறினால், ஊதியம் வழங்கப்படும் வரையில் தொடர்புடைய தயாரிப்பு நிறுவனத்துடன் நமது சங்க உறுப்பினர்கள் வேலை ஒத்துழைப்பு அளிக்காமல் தவிர்க்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

13) சமூக வலைத்தள ஊடகங்களில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன்

பிரபலமான நடிகர் / நடிகையர்களை குறித்து அவதூறாக, ஆபாசமாக, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன் வைத்தும், முகாந்திரமற்ற தங்களது கற்பனை கருத்துக்களை முன் வைத்தும் பரப்புபவர்கள்,

நமது சங்க உறுப்பினர்களாக இருந்தாலும்கூட, அவர்கள் மீது நமது சங்கம் மூலமாக காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்பூர்வமாக கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம், பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

14) இன்றைய பேரவையில் நமது சங்க உறுப்பினர்கள் சார்பாக ராஜ் பி (எ) டெலிஃபோன் ராஜ் (உறுப்பினர் எண்: 8351) அவர்கள்,

சங்க விதி எண்கள் 26 & 27-ன் அடைப்படையில், சுமார் 550-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை முன்னரே சங்க அலுவலகத்தில் சமர்ப்பித்து,

பேரவையில் பேச முன் அனுமதி பெற்று 550-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சார்பாக கொண்டு வந்த உறுப்பினர் தரப்பு தீர்மானமான,

உறுப்பினர் திரு.நம்பிராஜன் – உறுப்பினர் எண் – 8182 – அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சங்க நீக்கம் செய்ய வேண்டுமென்ற தீர்மானம் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

15) நமது சங்கம் மற்றும் சங்க அறக்கட்டளை சார்ந்த நிர்வாக செயல்பாடுகள், கட்டுமானம் / வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,

நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை சார்ந்த வழக்குகள் சம்பந்தமான முடிவு எடுத்தல்,

சங்க உரிமை மற்றும் மாண்பை பாதுகாப்பதற்காக நீதிமன்ற ஆவணங்களில் கையொப்பமிட்டு பிரதிநிதியாக செயல்படுதல்,

சட்ட விதிகளின்படி சங்கம் மற்றும் அறக்கட்டளையில் விதி திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்,

மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் அவசியமான பிற அமைப்புகளோடு உடன்படிக்கைகள் செய்து கொள்ளுதல்,

உட்பட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் நிர்வாகக் குழு அவ்வப்போது பொருத்தமான முடிவெடுத்து செயலாற்றுவதற்கு சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Our Score