full screen background image

‘மனிதன்’ என்கிற வார்த்தை தமிழ் இல்லையாம் – அதனால் வரிவிலக்கு இல்லையாம்..!

‘மனிதன்’ என்கிற வார்த்தை தமிழ் இல்லையாம் – அதனால் வரிவிலக்கு இல்லையாம்..!

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயநலத்திற்காக சட்டத்தை மதிக்காமல் மனம் போன போக்கில் ஆட்சி நடத்துகிறார்கள் என்பதற்கு மிகச் சிறிய உதாரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படங்களுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு தர மறுப்பதுதான்..!

இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’,  ‘நண்பேன்டா’ ஆகிய படங்களுக்கு சட்ட விரோதமாக கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்பட்டது. இப்போது சமீபத்தில் வெளியான ‘மனிதன்’ படத்திற்கும் இதேபோல் வரி விலக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதற்கான விளக்கமாக அவர்கள் கொடுத்திருப்பதுதான் மிகப் பெரிய காமெடி. ‘மனிதன்’ என்பது தமிழ்ச் சொல் இல்லையாம்.. சமஸ்கிருதச் சொல்லாம். ‘மாந்தன்’, ‘மாந்தர்’ என்றுதான் இருந்திருக்க வேண்டுமாம். என்ன வேடிக்கை இது..?

‘மனிதன்’ என்கிற சொல் இன்றைக்கும் பல்வேறு வகுப்புகளின் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் சொல். இதுவே தமிழ் இல்லையென்றால் பாடப் புத்தகங்களில் வைத்து மாணவர்களுக்கு சொல்லித் தருவது மட்டும் நியாயமா..?

manithan-tax free-2

இப்படியொரு அதிசய விளக்கத்தை அள்ளித் தெளித்திருக்கும் அதிகாரி ம.சி.தியாகராஜன். இவர் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் துணை இயக்குநராக இருக்கிறாராம். கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் கமிட்டியில் இவரும் ஒரு உறுப்பினர். இவர்தான் இப்படியொரு அதிசயத்தை கண்டறிந்த படித்த அறிவாளித் திலகம்..! வாங்குற சம்பளத்துக்கு நல்லாவே வேலை பார்க்குறாங்க இந்த அதிகார வர்க்கம்..!

இதில் இன்னொரு வேடிக்கையைப் பாருங்கள்..!

manithan-tax free-1

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘மனிதன்’ திரைப்படம் 1987-ம் ஆண்டு வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை மறுபடியும் திரையிடும்போது வரிவிலக்கு வேண்டும் என்று கேட்டு 2000-ம் ஆண்டில் விண்ணப்பத்திருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அப்போது இந்த ‘மனிதன்’ என்கிற தலைப்பு தமிழ் வார்த்தைதான் என்று அப்போதைய தமிழக அரசு சான்றிதழ் அளித்துள்ளது.

‘16 ஆண்டுகளுக்குள் இந்த மனிதன் என்கிற வார்த்தை தமிழ் வார்த்தையல்ல’ என்பதை நமது அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது விந்தையிலும் விந்தை..!

இப்படி ஆட்சியாளர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதை சுப்ரீம் கோர்ட் ‘ஏழாம் அறிவு’ வழக்கில் தலையில் குட்டு வைத்து சொன்ன பிறகும் இப்போதைய தமிழக ஆட்சியாளர்கள் எதற்கும் பயப்படாமல் மறுபடியும் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் பேரன், தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்கிற ஒரே காரணத்துக்காக ‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு அளிக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதே நேரம், இந்த அதிகார துஷ்பிரயோகத்தை.. சட்ட விரோதமான செயலை சினிமாவில் எந்தவொரு அமைப்புகளும், சங்கங்களும் கண்டிக்க முன் வராதது இதைவிட கொடுமை..!

சகல செல்வாக்கும் கொண்ட, தமிழ்ச் சினிமாவின் மூத்த உறுப்பினரான கருணாநிதியின் குடும்பத்து பேரனுக்கே தமிழ்ச் சினிமாவில் இவ்வளவுதான் மரியாதை என்றால் மற்றவர்களையெல்லாம் நினைத்தால்..?

ம்ஹூம்.. இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகத்தான் போகப் போகிறார்கள்..!

Our Score