full screen background image

‘புஷ்பா 2: தி ரூல்’ – சினிமா விமர்சனம்

‘புஷ்பா 2: தி ரூல்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

படத்தில் ஐகான் ஸ்டார்அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் ஃபஹத் பாசில், ராவ் ரமேஷ். அனுசுயா பரத்வாஜ், சுனில் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – சுகுமார், இசை – தேவி ஸ்ரீபிரசாத், பின்னணி இசை – சாம் சி.எஸ்., தமன், ஒளிப்பதிவு – மிரோஷ்லவ் புரோன்ஷெக், படத்தொகுப்பு – நவீன் நூலி, பாடல்கள் – சந்திரபோஸ், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின், டிராகன் பிரகாஷ்.

முதல் பாகத்தைப் போலவே பக்கா கமர்ஷியல் டைப்பில் தெறிக்கவிடும் ஆக்சன் காட்சிகள்,  ஹீரோ அல்லு அர்ஜூனின் மாஸான ஹீரோயிஸ காட்சிகள், துள்ளலான இசை, அசத்தலான ஆட்டம்.. படம் நெடுகிலும் அவ்வப்போது வந்து விழும் சிச்சுவேஷன் காமெடி, காட்சிகளின் பிரம்மாண்டம், எல்லாவற்றையும் இணைத்து அட்டகாசமான இயக்கம் என்று வெற்றிப் படமாகவே வந்திருக்கிறது இந்த ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படம்.

சென்ற முதல் பாகத்தில் இறுதியில் செம்மரக் கடத்தல்காரர்களின் கூட்டமைப்பின் தலைவராக ஹீரோ புஷ்பராஜ் தேர்வு செய்யப்படுவதாக படம் முடிவடைந்திருந்த்து. இப்போது அதன் தொடர்ச்சியாய் நிகழ்பவைகள்தான் இந்த 2-ம் பாகத்தின் கதை.

கடத்தல்காரர்களின் சிண்டிகேட் தலைவனான பின்பு புஷ்பாவின் கடத்தல் வேகம் சூறாவளியாகிறது. ஜப்பான் வரையிலும் இந்தக் கடத்தல் பிஸினஸ் கொடி கட்டிப் பறக்கிறது. உள்ளூரில் பணம் தராவிட்டால் தலையையே வெட்டிவிடும் புஷ்பா தனக்குப் பணம் தராத ஜப்பான் பார்ட்டியை ஜப்பானுக்கே சென்று கவனித்து தன் கணக்கை செட்டில் செய்ய வைக்கிறார்.

ஆனால் உள்ளூரில் இருக்கும் அவரது பரம வைரியான மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷெகாவத் என்ற பகத் பாசில் மேலும், மேலும் புஷ்பாவுக்குக் குடைச்சல் கொடுக்கிறார். அந்தக் குடைச்சலையெல்லாம் தன்னுடைய பணத்தை வைத்து முறியடிக்கிறார் புஷ்பா.

பகத் பாசிலை டிரான்ஸ்பர் செய்ய முயன்றும் முடியாமல் போக முதலமைச்சரை சந்தித்து ஒரு வாழ்த்துப்பாடி தனது மனைவியின் விருப்பத்திற்கேற்ப புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க விரும்புகிறார் புஷ்பா.

முதலமைச்சர் நரேனோ கட்சிக்கு டொனேஷன் குடு. என்ன வேண்ணாலும் செஞ்சுக்கா. நான் கண்டுக்க மாட்டேன். ஆனா இந்த போட்டோல்லாம் வேண்டாம் என்று புஷ்பாவின் முகத்துக்கு நேராகவே சொல்லி மறுக்கிறார்.

இதனால் லோக்கல் எம்.பியான ராவ் ரமேஷூக்கு கொம்பு சீவி விடுகிறார் புஷ்பா. 1000 கோடி செலவழித்தாவது உன்னை நான் முதலமைச்சராக்குறேன் என்று ராவ் ரமேஷிடம் சவால் விடுகிறார் புஷ்பா. இதற்காக எப்போதும் இல்லாத அளவுக்கு 2000 கோடி அளவுக்கு கட்டைகளை கடத்த்த் திட்டமிடுகிறார்.

இதையறியும் பகத் பாசில் புஷ்பாவின் இந்த மெகா கடத்தலைத் தடுக்கத் திட்டமிடுகிறார். அவரால் அதை செய்ய முடிந்த்தா.. கடத்தல் திட்டமிட்டபடி நடந்த்தா.. ராவ் ரமேஷ் முதல்வரானாரா என்பதுதான் இந்த 2-ம் பாகத்தின் கதைச் சுருக்கம்..!

முதல் பாகத்தைப் போலவே மாஸ், செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து மசாலாக்களையும் அளவாக கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தைப் போலவே நாயகன் புஷ்பா என்ற அல்லு அர்ஜுன் தனது வித்தியாசமான உடல் மொழியுடன் கலக்கியிருக்கிறார். ஒரு சைடாக சாய்ந்து நடப்பது, எப்போதும் வாயைக் குதப்புவதுபோலவே பேசுவது.. திமிர், கோபம், ஆத்திரம் என்பதை கலந்து தன் நடிப்பில் காட்டுவது, மனைவியை கொஞ்சுவது.. நேரம் கெட்ட நேரத்தில் படுக்கைக்கு அழைக்கும் மனைவியிடம் தப்பிக்க நினைத்து பின்பு வேண்டுமென்றே மாட்டிக் கொள்வது… மகள் சென்டிமெண்ட்டில் மீட்டர் கெடாமல் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பது என்று தனது நடிப்புத் திறமையாலேயே இந்தப் படத்தின் ரசிகர்களை இந்தியா முழுமைக்குமாக ஈர்த்திருக்கிறார்.

அதிலும் பாடல் காட்சிகளில் அவர் ஆடியிருக்கும் ஆட்டம் கண்ணைப் பறிக்கிறது. பெண் வேடமிட்டு ஆக்ரோஷமாய் அல்லு விடும் ஆட்டம் அவருடைய ரசிகர்களிடையே அல்லு சிரிக்க வைத்திருக்கிறது.

மொத்தமாய் ஸ்டைல், மாஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என அனைத்து ஏரியாவிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்து படத்தைக் கரை சேர்த்திருக்கிறார் அல்லு அர்ஜூன்.

படம் முழுவதும் கணவன் புஷ்பாவை சாமி, சாமி என்று பாசத்தோடு அழைக்கும் மனைவியான ராஷ்மிகா மந்தனாவின் எளிய கிராமத்து முகம்தான் அவருடைய மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். அல்லு அர்ஜூனுடன் இவர் போடும் கெட்ட ஆட்டம் படு ஜோர். அந்த டூயட் பாடலின் இவரது நடன அசைவுகள் முதல் பாகம் போலவே செம மாஸ் ஹிட்டாகியுள்ளது. ரிப்பீர்ட்டட் ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரப் போவது அந்தப் பாடல் காட்சிதான்.

முதல் பாகத்தைப் போலவே இதிலும் தனது தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் அதகளம் செய்திருக்கிறார் பகத் பாசில். புஷ்பாவை ஒழிக்க அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தனது நடிப்பால் நியாயம் சேர்ப்பிக்கிறார். தன்னை அவமானப்படுத்திவிட்ட அந்தக் கோபத்தில் எழுந்திருக்கும் ஈகோ உணர்வை மிகச் சரியாகக் காண்பித்திருக்கிறார் பகத் பாசில்.

புஷ்பா தன்னிடம் மன்னிப்பு கேட்கத் தயார் என்பதை அறிந்தவுடன் அவர் அடையும் சந்தோஷமும், மன்னிப்பு கேட்டவுடன் அதை டேப் செய்து வைத்துக் கொண்டு பலரிடம் அதைப் போட்டுக் காண்பித்து சந்தோஷப்படும் அந்த்த் தருணத்திலும் பகத்தின் நடிப்பு மின்னலாய் ஜொலிக்கிறது..!

அரசியல்வாதியான ராவ் ரமேஷ் புஷ்பாவுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகச் சொல்லும் காட்சியில் அரசியல்வாதிகளின் ஒட்டு மொத்தக் கலரையும் காட்டிவிட்டார்.

புஷ்பாவை வீழ்த்த நினைக்கும் வில்லன் சுனிலும், அவரது மனைவி அனுஷ்யா பரத்வாஜூம் டெம்பை ஏற்றுவதற்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். சில காட்சிகள் என்றாலும் முதல்வர் பதவியைப் பறி கொடுத்துவிட்டு நரேன் புலம்பும் காட்சியில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. புஷ்பாவின் அண்ணனாக நடித்தவரின் கடைசி நேர மனம் திருந்திய நடிப்பு சென்டிமெண்ட் போர்ஷனை நிரப்பியிருக்கிறது.

ஸ்ரீலீலாவின் அந்த ஒத்த பாட்டு என்ட்ரி, அந்த நேரத்தில் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ரிலாக்ஸ்..! பாட்டும், நடனமும் அசத்தல்தான்..!

ஒளிப்பதிவாளர் மிரொஸ்லவ் பிரோசெக்கின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு பலம். இத்தனை காட்சிகளையும், ஷாட்டுக்களையும் குறி தப்பாமல், கலர் மாறாமல் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கிரேட் சல்யூட்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்னின் கடின உழைப்பு நன்கு தெரிகிறது. அதிலும் கடைசி சண்டை காட்சி அதிரி.. புதிரி.. கண்கட்டுவித்தை போல லாஜிக் கிலோ என்ன விலையென்று கேட்பதுபோல இருந்தாலும் படமாக்கியவிதமும், தொகுத்தளித்தவிதமும் நம்மை கட்டிப் போட்டு பார்க்க வைத்திருக்கிறது.

டிரம்ஸ் பிரியர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. 2 பாடல்கள் உலகளவில் ஆட வைக்கப் போகிறது. பின்னணி இசையிலும் சாம் சி.எஸ். அடித்து ஆடியிருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் அடக்கத்தைக் கொடுத்து நம் மனதைத் திசை திரும்பாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நடன அமைப்பாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய ஷொட்டு. முதல் பாகத்திலேயே பாடல்களை இந்திய அளவுக்குக் கொண்டு போய்விட்டது பாடலின் நடன அசைவுகள்தான். இந்தப் பாகத்திலும் அனைத்துப் பாடல்களுமே டான்ஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது.

படத்தைத் தொகுத்தளித்தவர் டேபிளுக்கு வந்த அனைத்து நல்லவைகளையும் மிகச் சிறப்பாக கத்தரித்துத் தொகுத்தளித்திருக்கிறார். அந்த இரவு நேர கடத்தல் சம்பவத்தை கச்சிதமாக நறுக்கியிருப்பதால் நமக்கும் டென்ஷனை ஏற்றி சுவாரஸ்யத்தைக் கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள். இருந்தாலும் 3 மணி நேரம் 20 நிமிடம் என்ற படத்தின் அதிகப்படியான நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அயிட்டங்களும் பக்காவாக இந்தப் படத்தில் அமைந்திருக்கிறது. இதுவே இந்தப் படத்தின் மெகா வெற்றிக்குக் காரணமாகியுள்ளது.

புஷ்பா என்ற கூலித் தொழிலாளி எப்படி அந்தக் கடத்தல் கூட்டத்துக்கே தலைவனாகிறான் என்பதை சொன்ன முதல் பாகத்தில் தொடர்ச்சியாய் இது இருந்தாலும், மனைவி செண்டிமெண்ட் மற்றும் இரண்டாம்தார பிள்ளைகளின் துயரம், அப்பாவின் பெயரை வெளிப்பசடையாக சொல்ல  முடியாத பரிதாப நிலைமை.. அண்ணன் மகள் மீதான பாசவுணர்வு… இதையெல்லாம் ஒன்றாகக் கலந்து இந்தப் படத்தில் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகன் அல்லு அர்ஜுனை தேசிய அளவுக்கு ஸ்டார் நடிகராக உருவாக்கி, அவருக்கேற்றாற்போல கேரக்டர் ஸ்கெட்ச்சை வைத்து அனைத்து மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் ஸ்டைலாக்க் காட்டி, மனைவி மீது பாசம் கொண்ட அப்பாவி கணவனாகவும், தன் குடும்பத்திற்காக எதையும் செய்யத் துணியும் பாசக்காரனாகவும் காட்டியிருப்பது இந்த ஹீரோவை மக்கள் மிகவும் விரும்பி ரசிக்க வைத்துள்ளது.

படத்தின் திரைக்கதையில் சீரியஸான காட்சிகளில்கூட சிரிக்க வைக்கும்படியாக இயக்கியிருப்பது, ராவ் ரமேஷ். நரேன் மூலமாக அரசியல்வியாதிகள் தங்களது பதவியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை காமெடியாகவே சொல்லி புரிய வைத்திருப்பதெல்லாம் இயக்குநரின் திறமைதான்.

படத்தில் நமக்குக் குறையாக இருப்பது படத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை என்பதுதான். பணத்தை வாங்கிக் கொண்டு ஒட்டு மொத்த போலீஸும் ராஜினாமா செய்கிறது. என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்க.. கட்சிக்கு டொனேஷனை மட்டும் கொடுத்திரு என்னும் முதலமைச்சர்.. கமிஷனை கரெக்ட்டா பேசி வாங்கும் எம்.பி., சொந்த நாட்டின் செல்வத்தைக் கூச்சப்படாமல், குற்றவுணர்வே இல்லாமல் கடத்தி தொழில் செய்யும் புரோக்கர்கள், தன்னுடைய ஈகோவுக்காக மட்டுமே புஷ்பாவை மடக்க நினைக்கும் போலீஸ் உயரதிகாரி என்று அனைத்துவித கதாப்பாத்திரங்களும் கெட்டவர்களாகவே இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய டிராஜிடி.

படம் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தினருக்கு நல் வழியைக கொடுக்காவிட்டால்கூட பரவாயில்லை. கெட்ட உணர்வை, கெட்ட வழியைக் காண்பிக்காமல் இருந்தாலே போதும்.. இன்றைய இந்தியாவுக்கு அதுதான் இப்போதைக்கு தேவை.. ஆகவே, அடுத்தப் பாகத்திலாவது புஷ்பாவுக்கு மரணம் வருகிறதா என்று பார்ப்போம்..!

மொத்தத்தில், இந்த ‘புஷ்பா 2 : தி ரூல்’ ஃபயர் மட்டும் அல்ல; வெடிகுண்டும்தான் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

RATING : 3.5 / 5

Our Score