தமிழகத்தில் தற்போதூ சட்டப் பேரவை பொது தேர்தல் காரணமாக… அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ என சமூக வலைத்தள உலகத்தில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கிய படைப்பாளியான ராம்தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தலைவா’.
இந்தப் படத்தில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன், அக்னி S.வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் கே.எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.எம்.பிரதாப் கவனிக்க படத் தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார்.
கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் ராம்தேவ் பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில், அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம்.
ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான ‘பழகிய நாட்கள்’ மற்றும் ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது.
அந்த வகையில் இந்த ‘மக்கள் தலைவா’ திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும்.
மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கற்பனைக் கதையோடு சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்..
தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலும், ‘ஃபார் சேல்'(FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.










