கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘மக்கள் தலைவா’.
இத்திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S.வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார்.
காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ்.வெங்கடேசன்- R.சந்திரசேகரன் – T.ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாவது மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் இது.
முதல் படம் காதலை மையமாக வைத்தும், இரண்டாவது படம் மதுவின் கொடுமையை சொல்லும் சமூகப் படமாகவும் எடுத்திருந்த ராம்தேவ், இந்தப் படத்தில் சமூக கண்ணோட்டத்தில் தமிழக அரசியலை சீரழித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டு பற்றிப் பாடம் எடுத்திருக்கிறார்.
ஹீரோ ரவி மரியா பக்காவான அரசியல் வியாதி. தன்னுடன் இரண்டு கைத்தடிகளை வைத்துக் கொண்டு அந்த ஊருக்குள் சலம்பல் செய்து கொண்டிருக்கிறார். கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னமும் திருமணமும் ஆகவில்லை. ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே ஊரில் பிறந்து வளர்ந்த ராதாரவி வெளிநாட்டிற்கு சென்று மிகப் பெரிய தொழில் அதிபராக உருமாறி கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார். அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு அரசியல் களேபரத்தை செய்ய முடிவெடுக்கிறார்.
இவருடைய இந்த முயற்சிக்கு வெட்டி ஆபிஸரான ரவி மரியா சிக்குகிறார். அதன்படி கல்வி மரியாதை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் ராதாரவி முதலில் ரவி மரியாவை சினிமாவில் நடிக்க வைத்து ஹீரோவாக ஆக்குகிறார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு மிகப் பெரிய ஹீரோவாக உருவெடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் அவருக்கு பாலாபிஷேகம் செய்யும் அளவுக்கு உயர்கிறார்.
இதன் பிறகு ரவி மரியாவை அரசியல் கட்சியைத் துவக்கும்படி தூண்டிவிட்டு அவரின் பின்னணியில் ராதாரவியே அந்த அரசியல் கட்சியை வழிநடத்துகிறார். ராதாரவி சொன்னது போலவே ரவி மரியாவும் தன்னுடைய அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நாட்களில் தமிழுக மக்கள் மத்தியில் ரவிமரியாவும் ஒரு மிகப் பெரிய தலைவராக உருவெடுக்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று இதுவரையிலும் பின்னணியில் இருந்து கட்சியை வளர்த்துக் கொண்டிருந்தார் ராதாரவி முன்னணிக்கு வந்து அந்தக் கட்சியில் தானும் இணைந்து கொள்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரவி மரியா ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சீரியஸாக இருக்க… தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் முதல்வராக யார் நிற்கப் போவது என்கின்ற கேள்வி எழுகிறது. அப்போது ராதாரவி எடுக்கும் ஒரு முடிவு ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் அரசியல் வரலாற்றை புரட்டிப் போடுகிறது.
அது என்ன முடிவு? ராதாரவி ஏன் இப்படி மறைமுக அரசியலை செய்தார்.,? சாக்கடை அரசியலையே கிண்டல் அடிப்பது போல கட்சியையும், ஆட்சியையும் மாற்றுவது ஏன்? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை திரைக்கதை.
அரசியல் வியாதியாக நடிக்க வேண்டுமென்றால் அவருக்கு பொய் சொல்லும் கலையும், எப்பாடுபட்டாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற வெறியும் இருக்க வேண்டும்.
அதுபோன்ற கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் கொண்ட தமிழ் குடிமகன் என்ற தன்னுடைய கதாபாத்திரத்தை மிக அழகாக செய்து இருக்கிறார் ஹீரோ ரவி மரியா.
ஏற்கனவே பல திரைப்படங்களில் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றிருக்கும் ரவி மரியா இந்தப் படத்தில் ஹீரோவாக பிரமோஷன் வாங்கி இருக்கிறார். அந்த ப்ரொமோஷனில் கிடைத்த வேடத்தையும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான வகையில் நடித்துக் காண்பித்திருக்கிறார்.
இரண்டு கைத்தடிகளை வைத்துக்கொண்டு அவர் பேசுகின்ற அரசியல் வசனங்களும், கேலி கிண்டலாக இப்போதைய தமிழ்நாட்டின் நிலைமையை எடுத்து வைப்பதுபோல இருக்கிறது.
வெறுமனே சாதாரணமான ஒரு கதாப்பாத்திரமாக இல்லாமல் ஒரு சின்ன திருடன் எப்படி உலகளாவிய மிகப் பெரிய திருடனாக மாறுகிறான் என்பதை தன்னுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கட்டிலும் ரவி மரியா பல வசனங்கள், சில இடங்களில் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது.
தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டர்களுக்கு எந்த விதத்திலும் சோடை போகாத அளவுக்கு நடிக்கும் திறன் கொண்ட ராதாரவி, இந்தப் படத்திலும் நம்ப வைத்து கழுத்தருக்கும் கேரக்டரை அழுத்தமாக நடித்திருக்கிறார்.
ரவி மரியாவிற்கு ஒவ்வொரு ஸ்டெப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டேபோய் கடைசியாக ஒருவரை முதல்வராக்குகின்ற அந்த வித்தைவரையிலும் இப்படி ஒரு சகுனியோ, அல்லது ராஜகுருவோ இருந்தால் நாடு என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இப்போதைய அரசியல்வியாதிகள் எதற்காக அரசியலுக்கு வருகிறார்கள் என்பதையும் எப்படியெல்லாம் அவர்கள் அரசியல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் பழ.கருப்பையா தன்னுடைய கதாப்பாத்திரத்தின் மூலமாக சொல்லியிருக்கிறார்.
கூச்சநாச்சமே இல்லாமல் அரசியலுக்கு வருவதே கொள்ளையடிக்கத்தான் என்பதை வெளிக்காட்டும் விதமாக பொட்டி வாங்கும் அரசியல்வாதியில் ஒருவராக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு அறிவாளியாக இருக்கும் கஞ்சா கருப்பு, மற்றொரு நண்பராக நடித்திருக்கும் அக்னி எஸ்.வருண் என இவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிகாரர்களின் ஆசையை தூண்டிவிட்டு அவர்களிடம் இருந்து பத்து ரூபாயை கூடுதலாக லஞ்சமாக பெற்று அந்தப் பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைத்து தோல்வி அடைந்திருக்கும் திமுகவின் தற்போதைய நிலைமையை சுட்டிக் காட்டுவதுபோல சாதாரண ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மூலமாக அந்த பத்து ரூபாய் ஊழலை வெளிக்காட்டி இருக்கிறார் இயக்குநர்.
ஹீரோயின் என்ற கதாபாத்திரத்தில் வரும் அக்ஷரா விஜயன் ஒரே ஒரு பாடல் கட்சியில் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பிவிட்டார். அதற்கு பிறகு அவரை அம்போவென விட்டு விட்டது திரைக்கதை.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கேசன் நாயர் தன்னால் முடிந்தளவுக்கு இந்த படத்திற்கான ஒளிப்பதிவு சிறப்பாக கொடுத்திருக்கிறார். மீடியம் பட்ஜெட் படம் என்பதால் ஓரளவுக்கு கிடைத்த இடங்களில் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் துளசிராமன் பாடல்கள் எளிதாக நம் காதுகளில் நுழையும் வண்ணம் இசையை குறைத்து வைத்து, பாடகர்களின் ஒலியை அதிகப்படுத்தி பாடல்களை ரசிக்க வைத்திருக்கிறார். பின்னணி இசையும் சிறப்பாகவே இசைக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் ராம்தேவின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். முந்தைய இரண்டு படங்களிலும் இதே போன்று வசனங்களை அழகாக எழுதி இருந்தார். இந்தப் படத்திலும் தமிழகத்தின் தற்போதைய அரசியலை புட்டுப்புட்டு வைப்பதுபோல பல காட்சிகளில் வசனங்கள் பளிச்சிடுகிறது.
சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக அழகாக எந்தவிதமான இடைச்செருகலும், திருப்பங்களும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்வதுபோல திரைக்கதை அமைத்திருப்பதால் படத்தையும் 132 நிமிடத்தில் சுருக்கி தத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
இயக்குநர் ராம்தேவ் “இந்தப் படத்தின் படப்பிடிப்பை தேர்தலுக்கு முன்பாகவே எடுத்துவிட்டேன்” என்று சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் அவர் திரையில் சொல்லி இருப்பதுதான் நிஜத்திலும் நடந்திருக்கிறது.
“இப்போதைய முதலமைச்சர் விஜய்யை மனதில் வைத்து நான் எதையும் எழுதவில்லை” என்ற அடித்துச் சொல்கிறார் ராம்தேவ். அவர் திரையில் காட்டியதுதான் அடுத்த மாதமே தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருக்கிறது அந்த அளவுக்கு இன்றைய அரசியலை கூர்ந்து கவனித்து இந்தப் படத்தில் கதை திரைக்கதையாக எழுதியிருக்கிறார். அவருடைய திறமைக்கு நமது பாராட்டுக்கள்.
ஆனால் அதே சமயம் ராம்தேவின் இயக்கத்திலும், கதை சொல்லலிலும் இன்னமும் கொஞ்சம் போதாமை இருப்பது சில இடங்களில் நமக்கு தெரிகிறது.
தனக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாத அநியாயம் மட்டுமே செய்த இந்த சமூகத்திற்கு நானும் ஒரு அநியாயத்தை செய்வேன் என்று மனதில் கொண்டு செய்திருக்கும் கிளைமாக்ஸ் காட்சி நமக்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரனாக வளர்ந்த பின்பு உழைத்து சம்பாதித்திருப்பதால் அவருக்குள் இருக்கின்ற உணர்வு, நிச்சயமாக நல்ல விஷயத்திற்குத்தான் பயன்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்” என்கின்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனத்தை மனதில் வைத்து கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்திருப்பது சரியல்ல..!
தமிழ் சினிமாவின் அரசியல் நையாண்டி பட வரிசையில் இந்தப் படமும் தன்னுடைய பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
RATING : 3 / 5









