full screen background image

மூன்றாம் மனிதன் – சினிமா விமர்சனம்

மூன்றாம் மனிதன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இணை தயாரிப்பினை டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் டி.சாந்தி ராஜகோபாலன், டாக்டர் பி.அழகுராஜா, மதுரை சி.ஏ.ஞானோதயா ஆகியோர் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீநாத், ‘சூது கவ்வும்’ சிவக்குமார், பிரணா மற்றும் Dr. ரிஷிகாந்த், ராம்தேவ் Dr.ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் நடிக்கின்றனர்.

பாடலுக்கான இசையை வேணு சங்கர், தேவ்ஜி அமைத்து இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் அமைக்கிறார். படத் தொகுப்பினை துர்காஸ் கவனிக்க, கலை இயக்கத்தை டி.குணசேகர் கவனித்துள்ளார். 

இயக்குநர் ராம்தேவ், இந்த ‘மூன்றாம் மனிதன்’ படத்திற்கும்  கதை,  பாடல்கள் எழுதி இயக்கி, ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ், த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது. குடி குடியைக் கெடுக்கும் என்பதை சொல்ல வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் இது.

படத்தின் துவக்கத்தில் குப்பைத் தொட்டியில் துண்டு. துண்டாக வெட்டப்பட்ட ஒரு உடல் கண்டெடுக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத ஆள் யார்…? அவரை கொலை செய்தது யார்…? இந்தக் கொலையின் பின்னணி என்ன என்பதை குறைந்தபட்ச விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் இந்த “மூன்றாம் மனிதன்”.

குடிக்கு அடிமையான ஒரு குடிகாரக் கணவ்ன், இதனால் பாதிக்கப்படும் அவர்களின் இல்லற வாழ்க்கை, இதனால் வழி மாறும் அவர்களின் வாழ்க்கை பயணம் இது ஒரு கதை.

பரஸ்பரப்  புரிதலும், அன்னியோன்யமும் இல்லாத கணவன் மனைவி. அவர்களுக்குள் சந்தேகம் என்னும் அரக்கன் நுழைய, அந்த சந்தேகத்தை பயன்படுத்திக் கொண்டு சந்தடி சாக்கில் அந்த மனைவியை பயன்படுத்திக் கொள்ள முனையும் மூன்றாவது மனிதன் ஒருவன், அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைகிறான். அந்த மூன்றாவது மனிதனால் இந்த இரு குடும்பங்களின் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதுதான் இந்த ‘மூன்றாம் மனிதன்’ திரைப்படத்தின் கதை.

குடிகாரராக நடித்திருக்கும் இயக்குநர் ராம்தேவின் லிமிடெட்டான நடிப்பும், பாக்யராஜின் நிறுத்தி, நிதானமான வசன உச்சரிப்புடன் கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நடிப்பும், வித்தியாசமானதாக போட்டிக்குப் போட்டியாக அமைந்துள்ளது.

படத்தைப் பெரிதும் தாங்கியிருப்பது நாயகியாக நடித்திருக்கும் பிராணாவின் மிக அழகான நடிப்புதான்.  மகனின் வெற்றியை நினைத்துப் பெருமைப்படும் நேரத்தில், குடிகார கணவனை சமாளிக்க வேண்டி அவர் தவிக்கும் தவிப்பு அருமை. 

அதேபோல் தன்னை மீறி தான் ஒரு சூழலுக்குள் இழுக்கப்படுவதை உணர்ந்து தயங்குவதும், குடும்பச் சூழல் அவரை அதை நோக்கித் தள்ளுவதை தனது முக நடிப்பாலேயே காண்பித்து நமது பரிதாபத்தை உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு நேரெதிராக சோனியா அகர்வால், நடிப்பே வராத அளவுக்கு படம் முழுவதும் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இவரது கணவராக நடித்த சப்-இன்ஸ்பெக்டர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாகியிருக்கும் ஸ்ரீநாத்தின் மைனர் வில்லன் நடிப்பும், மற்றும் பல புதுமுக நடிகர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட்டுக்கேற்ற ஒளிப்பதிவை செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள். கலை இயக்குநரின் சிம்பிளான கலை வண்ணத்தில் அனைத்து பிரேம்களும் முழுமையாகவே உள்ளன. பாடல்களில் கதையைச் சொல்லும்விதமாய் வரிகளை எழுதி, கேட்கும்விதமாய் இசைத்திருக்கிறார்கள்.

இதுவரை தமிழ் சமூகமும், தமிழ் திரைப்படங்களும் பேசத் தயங்குகிற அல்லது தயங்கி தயங்கி பேசுகிற கருப் பொருள் காமம்.  அந்த காமத்தை, மாற்றான் மனை நோக்கலை, “அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்” என்று எளிதாக கடந்துவிடக் கூடிய மனநிலை நம் சமூகத்திற்கு வாய்க்கப் பெறவில்லை என்பதால், அதை கையாளுவதிலும் கதையாக்குவதிலும் அதீதமான கவனம் தேவை.  அதைப் பற்றி பேசுவதற்கு தனிப்பட்ட ஒரு துணிச்சலும் கூடத் தேவை. 

இந்த ‘மூன்றாம் மனிதன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராம்தேவ்க்கு அந்த துணிச்சல் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் அந்த துணிச்சல், அதீத கவனமின்றி கவனக் குறைவுடன் கதையில் கையாளப்பட்டிருக்கிறது.

திரைக்கதையாகப் பார்க்கும்போது குறைந்தபட்ச சுவாரஸ்யம் காட்சி ஓட்டத்தில் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு படத்தின் ஆரம்பத்தில் ஒரு கொலை நடப்பதும், அந்தக் கொலையை தொடர்ந்து ஒரு மிஸ்ஸிங் கேஸ் வருவதும், மிஸ்ஸிங் கேஸ் வழக்கு விசாரணை ஒரு புள்ளியில் அந்த கொலையுடன் தொடர்புபடுவதும், சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் நபர் குடிகார வெள்ளந்தி என்பதும், அவருக்கு தன் மனைவி மேல் இருந்த சந்தேகம் உண்மையற்றது என்பதும் நிருபணமாகி, காணாமல் போனவரின் மனைவி மேல் சந்தேகம் திரும்புவதும், அதில் எதிர்பாராத முறையில் மற்றொரு புள்ளி மாட்டுவதும் என திரைக்கதை யூகிக்க முடியாத சில திருப்பங்களுடன்தான் பயணிக்கிறது.

ஆனால், படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் போலீஸ் துறையின் அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் லாஜிக் எல்லை மீறல்கள் இந்த சுவாரஸ்யத்தை முழுவதுமாக தக்க வைக்க விடாமல் தடுத்துவிட்டது.

அது போல் காமம் தொடர்பான காட்சிகளை கையாண்ட விதத்திலும்  அதன் நோக்கம்  திசை மாறி கிட்டத்தட்ட அவை ஒரு மூன்றாம் தர வயது வந்தோருக்கான படத்தை பார்க்கின்ற உணர்வை பல்வேறு இடங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. 

அதே போல் காவியத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் “குத்துதே குடையுதே” பாடலும் படத்தின் பேசு பொருளான தீர்க்கப்படாத காமம் என்னும் கருப் பொருளை மட்டுமே கையாண்டுள்ளதால் படத்தின் மையப் பொருள் காமமா,, குடியா.. என்ற குழப்பமும் மேலோங்கி நாம் தவிக்க வேண்டியிருக்கிறது.

தன் கணவன் குடிக்கு அடிமையானதால் தன் இல்லற வாழ்க்கையும், செக்ஸ் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாக, அந்த மனைவி நிலைகுலைந்து போகிறாள். அவளுடைய நியாயமான எதிர்பார்ப்பு என்னும் தீர்க்கப்படாத காமம், திட்டமிடப்பட்ட முன் தீர்மானத்துடன் கூடிய பாவம் என்னும் பின்புலத்துடன் இக்கதையிலும் அணுகப்பட்டிருக்கிறது.

அவள் வழிமாறி போவதற்கு மூல காரணமாக இருக்கும் கணவனும், அவனின் குடிப் பழக்கமும் இதெல்லாம் இயல்புதானே என்கின்ற தன்மையுடனே கடைசிவரைக்கும் கையாளப்பட்டிருக்கிறது.

அது போல தன் காமத்தை தீர்த்துக் கொள்ள அவள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டிற்கு பக்க பலமாக குடும்பம் என்னும் அமைப்பும், பிள்ளைகளின் எதிர்காலம் என்கின்ற அச்சுறுத்தலும் திரைக்கதையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு, அவள் அந்த குடிகாரக் கணவனையே ஏற்றுக் கொண்டு தன் சுகங்களை தியாகம் செய்து வாழ நிர்பந்திக்கப்படும் ஒரு தியாகச் சுடராக க்ளைமாக்ஸ் காட்சியில் முன்னிறுத்தப்படுகிறார்.

அருகிலேயே அந்தக் குடிகாரக் கணவன் போதையுடன் காட்சியளிக்கிறார். அந்த குடிகாரக் கணவனிடம் இந்த குடிப் பழக்கம் உன் வாழ்க்கையைப்  பாழாக்கிவிடும், உன் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்ற பயமுறுத்தல் திரைக்கதையில் சுத்தமாக இல்லை.

ஆக, அந்தக் குடும்பத்தில் திருந்த வேண்டியது அந்த மனைவிதான் கணவன் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தும் இந்தப் படத்தின் திரைக்கதை ஒருபக்க சார்புடையதாக, ஒழுக்கமற்றதாக மாறிவிடுகிறது.

எதிர்தரப்பு குடும்பத்தில் தன் மனைவியை ஒருவன் மிரட்டி பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்பதை குற்றமாக பாவிக்கும் கணவன், இன்னொருவன் மனைவியை தான் மிரட்டி பணிய வைப்பது குற்றம் என்பதை உணரவே விரும்புவதில்லை என்கின்ற புரிதல் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதை எடுத்து இயம்புவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இடம் பெறாமல் போனது ஏமாற்றம்.

மேலும்  தொடர்ச்சியாக தங்கள் காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக படி தாண்டும் சில மனைவிமார்களையும் அதனால் வாழ்க்கை திசை மாறிய அவர்களின் பிள்ளைகளையும் மட்டுமே காட்சியில் காட்டி, அந்த மனைவிமார்களை குற்றவாளியாக்க முனையும் திரைக்கதை, அவர்கள் ஏன் படி தாண்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதையோ, அந்த சூழலை எப்படி தவிர்ப்பது அல்லது எப்படி அந்தச் சூழலை மாற்றுவது என்பதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் நழுவியதும் ஏற்புடையதல்ல.

அது போல் தனியாக வாழும் பெண்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் என்பது போன்ற பொத்தாம் பொதுவான கதாபாத்திர வடிவமைப்புகள் முகம் சுளிக்க வைக்கின்றன.  மேலும் வயது வந்தோருக்கான காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கும்விதமும் அந்த நோக்கத்தை கேள்விக்குரியதாக மாற்றுகிறது.

திரைக்கதையுடன் அழுத்தமான, அதே சமயம் எளிமையாக எழுதப்பட்டிருக்கும் சில கூர்மையான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

மொத்தத்தில் இந்த ‘மூன்றாம் மனிதன்’ திரைப்படத்தில் கதை மற்றும் திரைக்கதையாக ஒருவிதமான சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை இருந்தாலும்கூட…

சமூகத்தில் அன்றாடம் நடக்கின்ற கள்ளக் காதல் தொடர்பான கதையாடலை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பக்க சார்புடன் அணுகி இருப்பதும்…

மீண்டும் பெண்களை தியாகச் சுடர்களாக ஒளிவிட வேண்டும் என்று மறைமுகமாக பறை சாற்றியிருப்பதும்…

பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே முழு முதற்காரணம் என்பது போன்ற தவறான சிந்தனைகளை சமூகத்தில் பரப்ப முற்படுவதும்…

பிரச்சனைகளுக்கான வேர்களை வேரறுக்க முயலாமல்,  பரவும் கிளைக் கொடிகளை ஒழுக்கம் என்னும் கம்பு ஊன்றி கட்டி வைத்துவிட்டால் அவை அது தாண்டிப் படராது என்பது போன்ற பிதற்றல்களையும்…

பெண்களின் நியாயமான உணர்வுகளைக்கூட கொச்சைப்படுத்த முயன்றிருக்கும் குதர்க்கத்தினாலும்…

இந்த ‘மூன்றாம் மனிதன்’ திரைப்படம் கண்டனங்களையும், பாராட்டுக்களையும் சரி சமமாகப் பெறுகிறது..!

மதிப்பெண் : 2.5 / 5

 

Our Score