மைந்தன் – சினிமா விமர்சனம்

மைந்தன் – சினிமா விமர்சனம்

இதுவொரு மலேசிய தமிழக கூட்டு தயாரிப்பு. ஹீரோவாக நடித்தவர்தான் படத்தை இயக்கியிருக்கிறார். மலேசியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் இணைந்து  டத்தோ சாகுல் ஹமீது மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அசப்பில் அந்தக் கால அருண்பாண்டியன் போலவே இருக்கிறார் ஹீரோ குமரேசன். முதல் காதல் தோல்வியால் தினமும் குடியும், குடித்தனமுமாக இருக்கிறார் ஹீரோ. வீட்டில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பீர் பாட்டில்கள்தான்..

இவர் ஒரு நாள் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பர்ச்சேஸ் செய்து கொண்டிருக்கும்போது வெளியில் நிற்கும் அவரது காருக்குள் அனுமந்தன் என்னும் சிறுவன் வந்து ஒளிந்து கொள்கிறான். அவனை கண்டுபிடிக்கும் அவனை விரட்டியவர்கள் குமரேசனின் காரையும் சேர்த்தே கடத்திக் கொண்டு போக.. குமரேசன் பின்னாலேயே விரட்டுகிறார். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் ஓடிப் போக.. காரின் பின் சீட்டில் அந்த சிறுவன் அனுமந்தன் மட்டும் இருக்கிறான்.

அவன் யார் என்ன என்று தெரியவில்லை என்றாலும் அவனை அனுப்பிவிட உத்தேசிக்கிறான் குமரேசன். ஆனால் அனுமந்தன் போகாமல்.. போவதற்கு இடமில்லாமல்.. இங்கேயே வேலையாள் மாதிரி இருக்கிறேன் என்கிறான். குமரேசன் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்ல.. தங்கிவிடுகிறான்.

அனுமந்தனின் கதை பரிதாபமானது. உதயகுமார் என்பவன் சிறுவர்கள் காப்பகம் என்ற பெயரில் ஒரு அனாதை விடுதியை நடத்தி வருகிறான். அதில் அனுமந்தன் வயதையொத்த சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பகல் நேரத்தில் பிச்சையெடுக்க வைத்து தன் பிழைப்பை ஓட்டுகிறான் உதயகுமார். சில நேரங்களில் வெளிநாட்டுக்கும் அவர்களை அனுப்பி வைக்கிறான். இந்த காப்பகத்தில் இருந்துதான் அனுமந்தன் தப்பித்திருக்கிறான்.

அனுமந்தன் தப்பித்த்தால் கோபமான உதயகுமார் எப்படியாவது அனுமந்தனை கொண்டு வாருங்கள் என்று தன் கைத்தடிகளுக்கு உத்தரவிடுகிறான். அவனது உத்தரவின்பேரில் அவன் இப்போது எங்கேயிருக்கிறான் என்பதை துப்பறிந்து அங்கே வருகிறது கணவன்-மனைவி என்ற அந்த டீம். அவர்கள் குமரேசன் தனது காரின் மீது தீராத காதல் கொண்டவன் என்பதை உணர்ந்து காரை பணயம் வைத்து அனுமந்தனை கேட்கிறார்கள்.

கார் மீதான ஆசை காரணமாக குமரேசன் அனுமந்தனைவிட்டுவிட அவர்கள் அவனை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்கள். தனது காரில் அவர்களை பின் தொடரப் போகும் நேரத்தில் குமரேசனின் கார் விபத்துக்குள்ளாகிறது.. எப்படியாவது அனுமந்தனை மீட்க வேண்டுமே என்றெண்ணிய குமரேசனின் கண்ணில் படுகிறார் இரண்டாவது ஹீரோயின் புன்னகை பூ கீதா.

தனது காரில் ஏறப் போகும் நிலையில் இருக்க.. அந்தக் காரில் வலுக்கட்டாயமாக கீதாவையும் ஏற்றிக் கொண்டு பறக்கிறார் குமரேசன். ஆனாலும் அனுமந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. நடுரோட்டில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று வரும் ஒருவன் அந்தக் காரையே லவட்டிக் கொண்டு போக.. இருவரும் காடுகளுக்குள்ளேயே நடந்து, நடந்து வருகிறார்கள்.

இப்போது குமரேசன் தனது முதல் காதல் கதையைச் சொல்கிறான். அந்தச் சோகத்தில் இருப்பதால் இன்னொரு காதல் தனது வாழ்க்கையில் வரவேயில்லை என்கிறான். அவனை மனதுக்குள் காதலிக்கிறார் கீதா.  இப்போது அனுமந்தனை தேடி குமரேசன் போக.. கூட துணைக்கும் தானும் வருவதாகச் சொல்லி கீதாவும் செல்கிறார். இருவரும் அவனை மீட்டார்களா என்பதுதான் மீதமான கதை..!

இப்படி நகரப் பின்னணியுடன் எடுக்கப்படும் ஒரு தமிழ்ப் படத்தில் வழக்கமாகக்
கொஞ்சமாகத்தான்  தமிழில் பேசுவார்கள், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில்தான்
இருக்கும். ஆனால், இந்த மைந்தன் படத்தில் கொஞ்சமாக ஆங்கில வசனங்களும்,
சரளமாக அதிக அளவில் தமிழ் வசனங்களும் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

குமரேசன் பல படங்களில் நடித்த அனுபவசாலிபோல நடித்திருக்கிறார். ஸ்பீடான டயலாக் டெலிவரியுடன் அவருடைய வேகமான நடையும், ஸ்டைலும் பார்க்க ரசிக்க வைக்கிறது..! கேமிராவுக்கான முகம் இல்லாவிட்டாலும், தமிழ்ச் சினிமாவில் வரும் ஒரு ரவுடி ஹீரோவுக்கான கெத்தும், முகவெட்டும் அச்சு அசலாக இருக்கிறது.. இங்கே வந்தால் நிச்சயம் தேறிவிடுவார்.. காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும்கூட ரசிக்க வைத்திருக்கிறார்..

ஹீரோயின் ஷைலா நாயர்.. அதிகம் வேலையில்லை என்றாலும் நடுரோட்டில் வைத்து தனது காதலை புரபோஸ் செய்யும் அந்தக் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார் ஹீரோயின். இவரது பரிதாப முடிவால் ஹீரோவின் மாறுதல் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தமிழ்ச் சினிமா அளவுக்கு இல்லை என்பதால் ஒரு நன்றி..!

பட்டியல் படத்தின் தயாரிப்பாளரான புன்னகை பூ கீதா இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். சிறப்பான இயக்கத்தினால் அளவான நடிப்பையும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். முதலில் ஹீரோவுடன் ஏற்படும் மோதலும்.. பின்பு அவருடனேயே இருக்க வேண்டிய சூழலை ஏற்றுக் கொண்டு கடுகடு முகத்தோடு அவருடன் அடிக்கடி மோதுவதிலும் இவரை ரசிக்க முடிகிறது.. இத்தனை நடிப்பையும் வைத்துக் கொண்டு ஏன் தயாரிப்பாளராகவே இருக்கிறார்..?

மற்றபடி அனுமந்தனாக நடித்த சிறுவனையும் பாராட்ட வேண்டும்.. பாடல் காட்சிகளில்கூட லிப்ஸ் மூவ்மெண்ட் மாறாமல் கச்சிதமாக பாடியிருக்கிறார். ஓகே.. இவனை கடத்த வரும் கணவன்-மனைவி தம்பதியரில் அந்த மனைவிக்கு ஒரு பிரமாதமான எதிர்காலம் இருக்கும்போல தெரிகிறது. நல்ல நடிப்பு.. சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.

கார் சேஸிங் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளும் அப்படியே.

குமரேசனும், அனுமந்தனு பாடும் பாடல் காட்சியில் நிறைய தன்னம்பிக்கை அளிக்கும் வரிகள், யதார்த்தத்தைச் சொல்லும் வரிகள் என்று ரசிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். “துடுப்பில்லாத படகு எப்படி கரையைச் சேரும்..” என்று குமரேசன் பாட, “பாதிக் கடல் தாண்டிய பிறகு எதற்கு இனி தயக்கம்..?” என்று ஹனுமந்தன் பதிலடி கொடுக்கிறான். “வதவதன்னு பெற்றுப் போட்ட பெற்றோர்களால்தானே நீ அனாதை ஆனாய்…” என்று குமரேசன் பாட, “பாவம் விஞ்ஞான வளர்ச்சியை அறியாதவர்களைக் குறை சொல்லி என்ன பயன்..?” என்று ஹனுமந்தன் கேட்க… இசையின் ஒலியைக் குறைத்து பாடல் வரிகளை கேட்க வைத்த இசையமைப்பாளர்  மான்ஷெர்சிங்கிற்கு நமது வாழ்த்துகள்.

மலேசியாவில் முதன்முறையாக மூன்று கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக் குவித்த படமாம். சிறப்பான இயக்கத்தினால் ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார் மலேசிய ஹீரோ கம் இயக்குநர் குமரேசன்..

பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இயக்குநருக்கு..! 

Our Score