full screen background image

இயக்குநர் வ.கெளதமனின் ‘மாவீரா’ படம் துவங்கியது..!

இயக்குநர் வ.கெளதமனின் ‘மாவீரா’ படம் துவங்கியது..!

வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் ‘மாவீரா’ படத்தின் படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே துவங்கியது..!

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குநர் கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் மாவீரா.

வி.கே புரொடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்க உடன் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, “பாகுபலி” பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘கவிப் பேரரசு’ வைரமுத்து உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கம் மோகனும், சண்டைப் பயிற்சியை ‘ஸ்டண்ட்’ சில்வாவும், நடனத்தை தினேஷும் படத் தொகுப்பை ராஜாமுகமதுவும், பத்திகரிகை தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.

இந்த ‘மாவீரா’ படத்தின் துவக்க விழா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விஜய மாநகரம் முனீஸ்வரன் கோயிலில் இன்று காலை நடைபெற்றது.

தமிழர்களின் வழிபாட்டோடும், வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்த தமிழ்க் கடவுள் முருகன், வள்ளலார், வள்ளுவர் ஆகியோர் படங்களுக்கு வழிபாடு செய்து படப்பிடிப்பு தொடங்கியது.

வி.கே. புரொடக்சன் குழும நிர்வாக தயாரிப்பாளர்களான கிருஷ்ணமூர்த்தி குறளமுதன், உமாதேவன், கிரியாடெக் பாஸ்கர், ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

முதல் நாள் படபிடிப்பில் ‘மகிழ்ச்சி’ படத்தின் தயாரிப்பாளரான மணிவண்ணன் கேமராவை முடுக்க நடிகர்கள் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், தமிழ் கௌதமன், மதுரா பாலன் ஆகியோர் நடித்தனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வ.கௌதமன் பேசும்போது, “இந்தப் படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்புபடுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக இருக்கும்.

என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவதுதான். ‘சந்தனக் காட்டு மாவீரன்’ வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். அடுத்து வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது.

‘அத்து மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீர வரலாறே “மாவீரா” திரைப்படம். தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்த அதே சமயத்தில் ‘அத்துமீறி மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறு இது. தமிழினத்தை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு இப்படைப்பு பதில் மட்டுமல்ல, மிகச் சரியான பதிலடியும் கொடுக்கும்” என்றார்.

Our Score