full screen background image

“என் கைக்குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கேன்” – ‘நெடுமி’ நாயகி அபிநயாவின் வெளிப்படையான பேச்சு!

“என் கைக்குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கேன்” – ‘நெடுமி’ நாயகி அபிநயாவின் வெளிப்படையான பேச்சு!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’. ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வேல்முருகன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ஏ.ஆர்.ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் முயற்சி பற்றி தயாரிப்பாளர் பேசும்போது முதலில் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா..? இந்தப் படத்தின் செலவு எவ்வளவு? வரவு எவ்வளவு வரும்..? என்றெல்லாம் அவர்  கேட்கவில்லை. “இந்தப் படத்தில் எனக்கு எவ்வளவு நஷ்டமாகும்..?” என்றுதான் கேட்டார். பிறகு “நஷ்டம் எவ்வளவு வந்தாலும் பரவாயில்லை.  தைரியமாக இறங்குங்கள்” என்று கூறினார்.

இப்படி ஒரு தயாரிப்பாளர் யாருக்கும் இந்த உலகத்தில் கிடைக்க மாட்டார்கள். நாங்கள் சில குறும் படங்கள், இசை ஆல்பங்கள் மட்டுமே எடுத்திருந்தோம். வேறு எந்தவிதமான சினிமா சம்பந்தமான அனுபவமும் இல்லை. அப்படிப்பட்ட எங்களை நம்பி இந்தப் படத்தைத் தந்துள்ளார் தயாரிப்பாளர்.

இந்தப் படத்திற்காக நான் நடித்த 21 நாட்களும்   செருப்பு இல்லாமல் நடந்து பழகிக் கொண்டேன். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரம் எனக்குள் பதிந்து இருந்தது. எனக்குத் தொப்பை வர வேண்டும் என்பதற்காக காலை, மதியம் பழைய சோறு, இரவு மட்டும்தான் வேறு உணவு என்று சாப்பிட்டேன். இந்தப் படம் பலரையும் யோசிக்க வைக்கும்..” என்றார்.

கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது, “முதலில் கதை சொல்லும்போது நான் நடிப்பேன் என்று  நினைக்கவில்லை. கடைசியில் “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனை மரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவதுதான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள்  ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து  சினிமாவில் குதித்துள்ளோம். வரும் காலத்தில் நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்.” என்றார்.

படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது, “வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாங்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். என்னை முதலில் ஏதோ ஆறோ ஏரியோ தெரியவில்லை. ஒரு நீர் நிலையில் இறக்கிவிட்டதும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இப்போது இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால், குடும்ப ஆதரவு  எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது, “இந்த இயக்குநர்  நந்தா எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கம். எனக்கு ஒரு பாசிட்டிவான வேடத்தை கொடுத்துள்ளார். ஒரு நாள்தான் படப்பிடிப்பு. போய் நடித்தபோது திருப்தியாக இருந்தது. பனை மரத்தைப் பாராட்டிப் பேசுகிற மாதிரி ஒரு காட்சி. நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்.பனையேறிகள் அனைவரும் இன்று சிறப்பான வாழ்க்கையில் இல்லை. சிரமப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது..” என்றார்.

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது, “இங்கே இருப்பவர்கள் தனித் தனி பெயர்களைக் கொண்டு தனித் தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத்தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.

ஒருவரிடம் திறமை இருக்கலாம். அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன்தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது. அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான்.

அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர். கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாதபோதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள்.

குறும் படங்கள், ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத  எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. “எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்” என்றுதான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது. அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது, “இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர்தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம். இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அதுதான் பெரிய ரிஸ்க்.

இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது, “பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச்  சொந்தமான ஒன்றல்ல. ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது.பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும்  சொல்லப்படும் விஷயத்தாலும்  இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன்.

பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு. பனை மரத்தில்தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சிதான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில்கூட பனைமரம்  தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான். உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக் கடைகளை ஊருக்கு  ஒதுக்குப்புறமாக அந்தக் காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு, டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவைவிட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார். நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு. என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும்போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள்; ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள். இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை..?

மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக் கூடாது. அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை. இங்கே வந்து  அரசியல் பேசக் கூடாது. படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி  வாழ்த்த வேண்டும். அதை விட்டுவிட்டு திசை மாற்றி, படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக் கூடாது. நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.

Our Score