full screen background image

லவ் மேரேஜ் – சினிமா விமர்சனம்

லவ் மேரேஜ் – சினிமா விமர்சனம்

பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் நிச்சயதார்த்தத்துக்கு வரையிலும்போய் கடைசியாக அது எப்படி வேறொரு காதல் கல்யாணமாக உருமாறுகிறது என்பதுதான் இத்திரைப்படம்.

அசோக வனமு அர்ஜுன கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் கதை உரிமையை வாங்கி தமிழுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை செய்து இந்தப் படத்தைத் தந்திருக்கிறார்கள்.

33 வயதான ராமச்சந்திரன் என்ற விக்ரம் பிரபுவிற்கு இப்போது வரையில் திருமணம் ஆகவில்லை. அவரும் ஒரு பெண்ணை ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தார். அந்த காதலும் நிறைவேறவில்லை.

அவருடைய உறவு மற்றும் சாதியினர் என்று பல இடங்களிலும் இவருக்கு பெண் பார்த்தும் எந்த பெண்ணும் அமையவில்லை. இதனாலேயே ஒரு துர்பாக்கியமான ஜாதகத்தை கையில் வைத்திருக்கும் ஜாதகக்காரன் என்கின்ற அவப் பெயர் உடன் வாழ்ந்து வருகிறார் ராமச்சந்திரன் என்ற விக்ரம் பிரபு.

இப்போது கடைசியில் சொந்த ஜாதியில் இல்லாமல் வேறு ஒரு ஜாதியில் அதுவும் 500 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கோபிசெட்டிபாளையத்தில் அம்பிகா என்ற பெண்ணை விக்ரம் பிரபுவுக்கு மணமுடிக்க திட்டமிடுகிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தை செய்வதற்காக கோபிசெட்டிபாளையத்திற்கு ஒரு மினி பஸ் படித்து அனைவரும் செல்கிறார்கள். நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு கிளம்பும்பொழுது கொரோனோ லாக் டவுன் என்று அறிவிக்கப்பட வேறு வழியில்லாமல் அந்த வீட்டிலேயே இவர்கள் தங்க வேண்டிய நிலைமை வருகிறது.

நாளைய பொழுதுகளில் கல்யாணமாக போகும் பெண்ணின் வீட்டிலேயே வருங்கால மாப்பிள்ளையான விக்ரம் பிரபுவின் கெத்தாக சில நாட்கள் வலம் வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அவருடைய அக்கா கணவரான அருள் தாஸால் ஏற்படும் பல பிரச்சினைகள் குடும்பத்தின் அமைதியை குலைக்கிறது.

அதோடு ஒரு சந்தர்ப்பத்தில் மணப்பெண்ணுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்கின்ற தகவல் விக்ரம் பிரபுவுக்கு பேரடியாக விழுகிறது. அதைத் தொடர்ந்து மணப்பெண்ணும் காணாமல் போக அந்த வீட்டிலிருந்து இவர் கிளம்புவதற்கு உள்ளாகவே அந்த வீட்டுக்கும், இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஆகிவிடுகிறது.

இதற்கு மேல் என்ன நடந்தது விக்ரம் பிரபுவின் திருமணம் நடந்ததா.. எப்படி நடந்தது மணப்பெண் யார்? இதுவெல்லாம் இந்தப் படத்தை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு வெற்றிப் படம்தான். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழகான, அமைதியான, ஹீரோவாக இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை தந்திருக்கிறார் விக்ரம் பிரபு.

பார்வையாலேயே காதலை கடத்தும்விதமும், எதிர்கால மனைவியிடம் பேசுவதற்காக அவர் துடிக்கின்ற துடிப்பும்.. மணப்பெண்ணின் தாய் மாமனின் உளரலால் மாட்டிக் கொண்டு சங்கடப்படும்போதும் அழகான நடிப்பினைப் பதிவு செய்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அருள்தாஸின் அலம்பல்களை சமாளிக்க முடியாமல் அவர் பரிதவிப்பதும், குடித்துவிட்டு அருள் தாஸ் தன்னை அவதூறாக பேசுவதை நேரடியாக எதிர்க்காமல் குடிபோதையில் மிக நாகரிகமாக கொலை செய்தாலும் செய்து விடுவேன் என்பது போல மிரட்டி விட்டுப் போகும்போது ஒரு மிரட்டல் நடிப்பை காண்பித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

கிளைமாக்ஸ் கட்சியில் அவருடைய அந்த வேகமான பேச்சும், நடிப்பும்தான் கை தட்ட வைத்து இருக்கிறது. இந்தப் பெண்ணை விட்டுவிட்டால் இதன் பிறகு நமக்கு திருமணம் ஆகுமா.. ஆகாதோ என்கின்ற ஒரு சந்தேகத்தை அவருக்குள் கிளப்ப.. ராதாவை தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கின்ற அந்தக் காட்சியில் நிஜமாகவே ஒரு புத்திசாலி ராமச்சந்திரனாக நம் கண்ணுக்கு தெரிகிறார் விக்ரம் பிரபு.

அக்கா அம்பிகாவாக நடித்திருக்கும் சுபிக்க்ஷா பட் மிக அழகான முகம். அழகாக நடித்திருக்கிறார். ரொம்பவும் குறைவான வசனங்கள்தான். ஆனால் தன்னுடைய முக பாவனையிலேயே நடிப்பை பெரும் அளவுக்கு காண்பித்து இருக்கிறார். அவருடைய குளோசப்  காட்சிகளில் அவருடைய அழகான முகத்தைப் பார்த்தாலே நமக்கு ஜலீர் என்கிறது. வெல்கம் மேடம்.

தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி.. இப்படியொரு கொழுந்தியாள் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்ற படம் பார்க்கும் அத்தனை ஆண்களின் மனதிலும் ஒரு பொறாமைத் தீயை தூண்டி விட்டுவிட்டார்.

இவரும் தன் பங்குக்கு தன்னுடைய துள்ளலான நடிப்பின் மூலம் இடைவேளைக்கு பின்பு அனைத்து கட்சிகளிலும் நம்மை கவர்ந்து இழுத்துவிட்டார். “இந்த வாய்ப்பை விட்றாத ராமச்சந்திரா…” என்ற படம் பார்க்கும் அத்தனையே ஆண்களையும் சொல்ல வைத்திருப்பது மீனாட்சியின் அழகான நடிப்புதான்.

இவர்களுக்கு அடுத்து அலட்டல் பேர்வழியாக, அக்கா கணவராக நடித்திருக்கும் அருள் தாஸின் அத்தனை அலப்பறைகளும் அசத்தல். அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவரும் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவும் சேர்ந்து செய்யும் ரகளைகள் படத்தில் பல காமெடிகளை வரவழைத்து இருக்கிறது.

இன்னொரு பக்கம் ரமேஷ் திலக் மற்றும் திருமண புரோக்கரின் பேச்சுக்களும், காமெடியும் படத்தில் ஆங்காங்கே நம்மை ரிலாக்ஸ் செய்ய உதவியிருக்கின்றன.

விக்ரம் பிரபுவின் அப்பாவான கஜராஜ், அம்பிகா, ராதாவின் அப்பாவான வின்னர் ராமச்சந்திரனும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பை அழகாக செய்திருக்கிறார்கள்.

அதிலும் கடைசியாக வின்னர் ராமச்சந்திரன் அம்பிகாவை வீட்டிற்கு அழைத்து வரும்போது அவர் பேசுகின்ற பேச்சு மிக இயல்பு. “என்ன இருந்தாலும் இவள் என் மகள். இவள் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்…” என்று சொல்கின்றபொழுது சபாஷ் போட வைத்திருக்கிறார் வின்னர் ராமச்சந்திரன்.

கேமியோ ரோல் செய்திருக்கும் சத்யராஜ் எம்எல்ஏவாக நடித்திருக்கிறார். கொங்கு தமிழ் பேசும் ஒரு பிரபலம் இருந்தால் படத்திற்கு வியாபாரம் ஆகும் என்று நினைத்து இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும்.

ஆனால் சத்யராஜின் அந்தக் கதாபாத்திரத்தினால் படத்துக்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும், படத்தின் திரைக்கதையில் மீண்டும் அந்தக் குடும்பத்தை அந்த வீட்டுக்குள் திணித்துவிட்ட திருப்தி இயக்குநருக்கு கிடைத்திருக்கிறது.

தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறப்புதான். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபிசெட்டிபாளையத்தின் பச்சைப் பசேல் புல்வெளிகளையும், இடங்களையும், ஊர்களையும் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் வெளிப்புற காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக காட்டி இருக்கலாம்.

ஒரே வீட்டின் பல்வேறு இடங்களில் காட்சிகள் நடப்பதுபோல் படமாக்கி இருந்தாலும் கேமரா கோணத்தில் எந்தக் குறையும் வைக்காமல் வித்தியாசமான கோணங்களிலேயே அடுத்தடுத்த காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின பணி பாராட்டுக்குரியது.

கலை இயக்குநர் முரளி கோபிசெட்டிபாளையம் வீட்டை வடிவமைத்தவிதம் சிறப்புதான். படத்திற்கு இசையமைத்திருக்கும் ஷான் ரோல்டன் பாடல்களைவிடவும் பின்னணி இசைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவையை தூண்டிவிடும் இசையை கொடுத்திருக்கிறார்.

பாடல்களில் மீண்டும் பிறந்தேனோ என்ற பாடல் மட்டுமே நம்மை கவனிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் மற்ற பாடல் காட்சிகளில் கதாநாயகிகள் இருவரின் அழகும் நம்மை சொக்க வைத்திருப்பதால். பாடல்கள் நம் காதில் வந்ததும், வெளியில் போனதும் நமக்கே தெரியவில்லை.

பரத் விக்ரமனின் எடிட்டிங் பணியும் சிறப்புதான். சில காட்சிகளில் காமெடி குபீர் எழும்படியாக காட்சிகளை கோர்வையாக தொகுத்து இருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

படம் ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் இன்றைய இளைஞர்களை கவரும் வகையிலும், குடும்பத்துடன் பார்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.

படத்தில் இடம் பெறும் ஒரே ஒரு சண்டை காட்சி தேவையில்லாதது தான் என்றாலும் வேறு வழியில்லாமல் திணிக்கப்பட்டதாக நமக்கு தோன்றுகிறது.

கொரோனா காலகட்டம் என்பதால் அதை மறுபடியும் மறுபடியும் மென்ஷன் செய்யாமல் சில, பல காட்சிகளை விட்டுவிட்டு அதற்குப் பிறகு அதை ஞாபகப்படுத்துவதுபோல் காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு.

படம் கடைசிவரையில் உட்கார வைத்து பார்க்க வைத்திருக்கிறது என்றாலும், இன்னமும் நிறைய காமெடிகளை உருவாக்கியிருக்கலாம். அதற்கான களம் அந்த இடத்தில் நிறையவே இருக்கிறது. ஆனால், அந்தக் களத்தில் களமாடாமல் அனைவரும் அமைதியாக அமர்ந்துவிட்டது போன்ற தொனிதான் நமக்கு தெரிகிறது. இன்னமும் காமெடியை அதிகப்படுத்தியிருந்தால் இந்தப் படத்தை இன்னும் நாம் அதிகமாக கொண்டாடியிருக்கலாம்.

எப்படி இருந்தாலும் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து சிரிக்க வேண்டிய இந்த மாதத்திய திரைப்படமாக இந்த லவ் மேரேஜ்படம் இடம் பிடித்துவிட்டது.

RATING : 4 / 5

Our Score