Starring: Vishnu Manchu, Mohan Babu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Sarat Kumar, Kajal Aggarwal, Arpit Ranka, Brahmanandam, Saptagiri, Mukesh Rishi, Madhubala, Aishwarya Bhaskaran, Brahmaji, Devaraj, Raghu Babu, Siva Balaji, Sampath Ram, Lavi Pajni, Surekha Vani, Preity Mukundhan, Kaushal And Adhurs Raghu.
Story & Screenplay: Vishnu Manchu, Producer: Dr. M. Mohan Babu, Banner: Twenty Four Frames Factory & AVA Entertainment, Director: Mukhesh Kumar Singh, Cinematographer: Sheldon Chau, Music Director: Stephen Devassy, Editor: Anthony Gonsalvez, Production Designer: Chinna, Executive Producer: Vinay Maheshwari & R. Vijay Kumar, Stunts Master: Kecha Khamphakdee, Choreography: Prabhudeva, Brinda & Ganesh, PRO: Haswath Saravanan & Sai Satish, DI & Sound Mixing: Annapurna Studios, Music Label: T-Series.
இப்போதெல்லாம் பக்தி திரைப்படங்கள் வரவே இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நமக்கு ஒரு ஆறுதலை தருவதாக வந்திருக்கிறது இந்தக் ‘கண்ணப்பா’ என்ற திரைப்படம்.
சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்ட பக்தரான ‘பக்த கண்ணப்பா’வின் பிரமிக்க வைக்கும் கதையாக உருவாகியிருக்கிறது இப்படம்.
சைவ சமயத்தை இந்து மக்களிடையே மிகப் பெரும் அளவுக்கு பரப்பரை செய்தவர்கள் சமயக் குறவர்கள் என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள். அவர்கள் தொகுத்து வழங்கிய சைவ மதத்தின் திருப்பாடல்கள்தான் இன்றைக்கும் சிவனை வணங்கும் பக்தர்களுக்கு பாடலாகவும், வேண்டுகோளாகவும் அமைந்திருக்கிறது.
அந்த 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் என்பவரின் வாழ்க்கைக் கதைதான் இந்தக் ‘கண்ணப்பா’ திரைப்படம். கடவுள் மேல் பக்தி கொள்ளும் ஒரு பக்தன் தன்னுடைய பக்தியின் லெவல் என்ன.. அளவுகோல் என்ன… என்பதை எந்த அளவுக்கு செய்து காட்டுவான் என்பதுதான் இந்தக் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாறு சொல்கிறது.
கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த கதை இது. தின்னண் என்ற விஷ்ணு மஞ்சு வேடர் குலத்தில் பிறந்தவர். அவருடைய குலத்திற்கு அவருடைய தந்தையான சரத்குமார்தான் தலைவர். சிறு வயதிலிருந்து தின்னணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை. அந்த நாட்டில் அவர்கள் வழிபடும் ஒரு அம்மன் சிலையை எப்போது பார்த்தாலும் நிந்தித்திக்குக் கொண்டே இருக்கிறார் தின்னண்.
அந்த அம்மனுக்கு சில முக்கியமான தருணங்களில் நரபலியும் கொடுக்கிறார்கள். ஆனால் அதையும் தின்னண் ஏற்கவில்லை. ஏற்பதில்லை. கடவுள் என்பவரே இல்லை என்பதுதான் தின்னணின் கொள்கையாக இருக்கிறது.
இந்த நேரத்தில் அரக்கர்கள் கூட்டத்திற்கும், வேடர்கள் கூட்டத்திற்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து அரக்கர்கள் கூட்டம் படையெடுத்து வருவதாக செய்திகள் வந்ததால், அக்கம் பக்கத்தில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை அழைத்து அவருடைய ஒத்துழைப்பை கேட்கிறார் வேடர் குலத் தலைவரான சரத்குமார்.
அவர்களும் வேடர்களின் இடத்திற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரக்கர்கள் குலத்தை எதிர்க்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். தங்களது கூட்டுப் படைக்கு தளபதியாக தின்னணையே நியமிக்கவும் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் இந்த நேரத்தில் தின்னணின் மிக நெருங்கிய நண்பனான நாகனை நரபலி கொடுக்கும் முயற்சிகள் நடக்கிறது. இதை தின்னண் ஏற்கவில்லை. நரபலியிலிருந்து தன்னுடைய நண்பனை காப்பாற்றுகிறார்.
இதனால் மற்றைய குழுக்களைச் சேர்ந்தவர்கள் தின்னண் மீது அதிருப்தி அடைகிறார்கள். இதனால் கோபமடையும் சரத்குமார் தின்னணையும், அவனது நண்பர்களையும் குலத்திலிருந்து வெளியேற்றுகிறார்.
இதற்குப் பின்னர் அரக்கர்கள் கூட்டமும் அங்கு படையெடுத்து வர, இரு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இந்த முதலில் சரத்குமார் இறந்து போகிறார்.
தந்தை இறந்து போன செய்தி அறிந்து தின்னண் மிகவும் கோபம் கொண்டு மீண்டும் களத்திற்கு வந்து அரக்கர் படையை எதிர்த்து கொன்றொழிக்கிறார்.
அதே சமயம் அருகில் இருக்கும் திருக்காளத்தில் மலையில் சுயம்பு நாதராக சிவபெருமானின் லிங்கம் உள்ளது. அந்த சிவபெருமானுக்கு அந்தணரான மோகன் பாபு தினமும் வந்து பூசை செய்கிறார். ஆனால், அந்த இடத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் அவர் உள்ளே நுழைய விடுவதில்லை. அவர் மட்டுமே அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அங்கு வரும் கண்ணப்பர் திடீரென்று மனம் மாறி அந்த லிங்கத்தை தொட்டவுடன் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒன்று இடம் பெயர்ந்து அவர் பக்திமான் ஆகிறார்..
அந்தணர் மோகன் பாபு மாமிசம் எதுவும் இல்லாமல் பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்யும்போது தின்னண் பன்றிக் கறியையும், வில்வ இலையையும், சுவர்ணமுகி ஆற்றின் நீரை வாயில் கொண்டு வந்தும் லிங்கத்திற்கு பூசை செய்கிறார். இதை அந்தனர் மோகன் பாபு எதிர்க்கிறார்.
அந்த நேரத்தில் சிவலிங்கத்திலின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது. அந்த ரத்தத்தை நிறுத்துவதற்காக பெரும் முயற்சிகள் செய்கிறார் தின்னண். ஆனால் அது முடியவில்லை. அதனால் கண்ணுக்கு கண் என்கின்ற தத்துவத்தின்படி தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தில் கண் இருக்கும் இடத்தில் பொருத்துகிறார் தின்னண்.
இப்பொழுது அடுத்த கண்ணில் இருந்தும் அதே போல் ரத்தம் வடிகிறது. தின்னண் இதைப் பார்த்த பின்னர் என்ன செய்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் உச்சபட்ச கிளைமாக்ஸ்.
நிஜமான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாற்றில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டு சில பகுதிகளை இப்போதைய சினிமா உலகத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
கண்ணப்ப நாயனாராக தின்னண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சுவுவின் கேரியரில் இத்திரைப்படம்தான் உச்சபட்சம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் பல காட்சிகளில் நம் மனதை தொட்டுவிட்டார் விஷ்ணு.
பக்தி என்பது நம்முடைய மனதுக்குள் ஒளிந்திருக்கும் என்பார்கள். அந்த ஒளிந்திருக்கும் அந்தப் பக்தியை படத்தின் இறுதிக் காட்சிகளில் அப்படியே வெளிக்கொணர்ந்துவிட்டார் விஷ்ணு.
இன்னொரு பக்கம் நாயகி ப்ரீத்தா மோகனுடனான காதல் காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் விஷ்ணு மஞ்சு. இப்போதைய ட்ரண்டுக்கு ஏற்றார் போல பாடல் காட்சிகளில் எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் பிரீத்தி முகுந்தன் அதிகப்பட்ச கவர்ச்சியைக் காட்டி நடித்திருக்கிறார். இதுவொரு பக்தி படம் என்பதால் இந்த அளவுக்கான காதல் காட்சிகள் இந்தப் படத்தில் தேவையா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
ப்ரீத்தி முகுந்தன் வசன காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய அம்மாவாக நடித்திருக்கும் மதுபாலாவின் நடிப்பு கொஞ்சம் ஓவராகவே நமக்கு தோன்றுகிறது.
தின்னணின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமாரின் அனுபவப்பட்ட பக்குவமான நடிப்பு அவருடைய கேரக்டரை உயர்த்தி இருக்கிறது. அந்தணராக நடித்திருக்கும் மோகன் பாபு ஒரு அமைதியான திருவுருவமாக படத்தின் இறுதி பகுதியில் தன்னுடைய ஆளுமையை காட்டி இருக்கிறார்.
படத்தில் எதிர்பாராத சர்ப்ரைஸாக சிவனாக மாறுவேடத்தில் தோன்றியிருக்கும் பிரபாஸ் அட்டகாசமான தன்னுடைய ஆளுமை திறமையால் நம்மை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார். பிரபாஸின் போர்ஷன் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
தின்னணின் முற்பிறவி கதையைச் சொல்வதற்காக சிவபெருமான் வேடத்தில் வரும் மோகன்லாலின் அந்த கதாபாத்திரமும் சுவாரசியமாக அமைந்துள்ளது. அந்த இடைவேளை பிளாக்கில் மோகன்லால் செய்கின்ற அந்த ஸ்டைல் காட்சி சூப்பர். இந்தப் படத்தில் உண்மையாகவே இடைவேளையை கொஞ்சம் ரகளையாகவே வைத்திருக்கிறார்கள்.
வேடுவர் குல த்தின் பூசாரி அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா பாஸ்கரனின் முகம் படு பயங்கரமாக இருக்கிறது. மிகப் பொருத்தமாகத்தான் அவரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரிஜினல் சிவபெருமானாக அக்ஷய் குமாரும் பார்வதியாக காஜல் அகர்வாலும் தோன்றியிருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் பிரம்மனாந்தம், தேவராஜ், ரகுபாபு, சிவ பாலாஜி, சம்பத் ராம், சுரேகா வாணி என்று பல கதாபாத்திரங்களும் தங்களுக்கான கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்தில் இந்த படம் மிகச் சிறப்பு என்று சொல்லலாம். ஒளிப்பதிவாளர் செல்டன் சாவ் படம் மொத்தத்தையும் தன்னுடைய கேமராவில் எவ்வளவு அழகாக படம் பிடிக்க முடியுமோ அவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
படத்தின் பல லொகேஷன்களும் கண்களை கவர்கின்றன. உதாரணமாக மோகன்லால் தோன்றும் வந்த காட்சியின் பின்னணியில் அவ்வளவு அசத்தல். அவ்வளவு அழகு. அதேபோல் பிரபாஸ் விஷ்ணு மஞ்சுவிடம் பேசி அவரை குழப்புகின்ற இடங்களில் அவர்களை படம் பாக்கிய விதம் அபாரம் என்றே சொல்லலாம்.
சண்டைக் காட்சிகளிலும் கேமராவின் பங்களிப்புதான் அதிகம். மிக வேகமான சண்டை காட்சிகளையும் இப்போதைய இளசுகளுக்கு பிடிப்பது போலவும் சண்டை காட்சிகளை வடிவமைத்து தந்திருக்கிறார் சண்டை இயக்குநர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஸ்டீபன் டெபாசிட் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். அவ்வளவு அழகான பாடல்கள். அதிலும் படத்தின் துவக்கத்தில் இரண்டு குழந்தைகள் பாடுகின்ற அந்த பாடல் படம் முடிந்த பின்பும் நம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அன்டனி கவுன்சால்பஸ் சீன் படத் தொகுப்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளை அழகாக கத்தரி போட்டு தொகுத்து வழங்கியிருக்கிறார். இதற்காகவே படத் தொகுப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
இந்த வாழ்க்கை வரலாறை இப்போதைய சினிமா உலகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து படத்தினை இயக்கி கொடுத்திருக்கும் இயக்குநர் முகேஷ் குமாருக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தின் முற்பகுதி கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதியில் அனைத்தையும் தாங்கிக் கொண்டு படத்தை மிக அழகாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அந்த சிவலிங்கம்… மூன்றும் இணைந்து படம் பார்க்கும் அத்தனை பேரையும் இறுதிக் காட்சியில் பரவசம் அடைய வைத்துவிட்டது.
ஒரு நாத்திகரைக்கூட ஆத்திகராக மாற்றும் ஆற்றல் சினிமா காட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் இந்த படமும் நாத்திகர்களை தீவிர ஆத்திகர்கள் ஆக மாற்றும் வல்லமை படைத்ததாக வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இவ்வளவு சின்ன பட்ஜெட்டில் கிடைத்த தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்து மிக எளிமையாக சொல்ல வந்த கருத்தை மிக அழகாக சொல்லி இருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயம் வரவேற்கத்தக்கது.
அவசியம் குடும்பத்துடன் பாருங்கள்..!
RATING : 3.5 / 5









