24 வயதான நடிகர் கென் இந்தப் படத்தை இயக்குகிறார் என்று செய்தி வந்ததிலிருந்து இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு கூடியது. காரணம் கென்னின் அப்பாவான நடிகர் கருணாஸூம், அம்மா கிரேசியும் தொலைக்காட்சி உலகத்திலும், சினிமா உலகத்திலும் பிரபலமானவர்கள்.
கென் முதலில் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்திருந்தார். அதிலேயே பிரபலமாகிய கென், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு புதிய படத்தை இயக்கம் செய்கிறார் என்பது தமிழ் சினிமாவில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அந்த ஆச்சரியத்தை நிஜமாகவே மிகப் பெரிய ஆச்சரியமாக ஆக்கியிருக்கிறார் கென்.
இந்த வாரம் வேறு எந்த தமிழ் திரைப்படமும் வெளியாகாத சூழலில் தனி ஒரு திரைப்படமாக உள்ளே நுழைந்து வசூலை குறி வைத்து அடித்திருக்கிறது இந்த ‘யூத்’ என்ற திரைப்படம்.
இந்தப் படத்தில் கென்னே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருடைய குழுவினர் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளனர்.
ஹீரோவான கென் இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், படிப்பில் வெகு சுமார். இவருடைய அம்மாவான தேவதர்ஷினியும், அப்பாவான சூரஜ் வெஞ்சாரமூடும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.
சூரஜூக்கு படிப்பறிவு இல்லாததால் அவருடைய குடும்பத்தினரே அவரை தள்ளி வைத்திருக்கிறார்கள். மலையாளியான சூரஜ் தமிழச்சியான தேவதர்ஷணியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இதனால் தேவதர்ஷணியின் உடன் பிறந்தவர்கள் மிகப் பெரிய அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் தேவதர்ஷனியின் காதல் திருமணம் பிடிக்காமல் அவரையும் தள்ளியே வைத்திருக்கிறார்கள்.
இரு தரப்பு சொந்தங்களின் ஒட்டும், உறவும் இல்லாத நிலையில் சூரஜ் சாதாரணமான ஒரு பேக்கரி கடையை வைத்து அதில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மிடில் கிளாசுக்கும் கீழான ஒரு குடும்ப அமைப்புதான் கென்னின் குடும்பம்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கென்னுக்கு படிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதனால் இந்த பள்ளியில் இருந்தே கென்னை எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியேற்றுவதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நளினி தயாராக இருக்கிறார்.
இந்த நேரத்தில் அதே பள்ளியில் படிக்கும் மீனாட்சி தினேஷும் கென் போலவே படிப்பில் கடைசியிடத்தில் இருக்கிறார். இந்த மீனாட்சிக்கும், கென்னுக்கும் தண்டனைக்குள்ளாகி வகுப்பறைக்கு வெளியில் நிற்கும்போது பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் பழக்கம் கென்னின் நண்பர்களால் தூண்டப்பட்டு உத்வேகப்பட்டு காதலாக மாறுகிறது.
மீனாட்சி தொடர்பான ஒரு சர்ச்சையில் சக மாணவர்களுடன் சண்டையிடுகிறார் கென். இதனால் பிரின்சிபால் நளினி கென்னை பள்ளியில் இருந்து நீக்குகிறேன் என்கிறார். ஆனால் அம்மா தேவதர்ஷினி இங்கேயே விஷத்தை குடித்து விடுவேன் என்று நளினியை மிரட்டி தன் மகனை காப்பாற்றுகிறார்.
இதற்குப் பின்பும் தன்னுடைய காதலை தொடர்ந்து கொண்டே போகிறார் கென். காதலி மீனாட்சி ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்கிறார். இந்த நேரத்தில் அதே பள்ளியில் படிக்கும் இன்னொரு மாணவியான பிரியதர்ஷினி கென்னிடம் நெருக்கம் காட்டுகிறார். இந்த நெருக்கத்தை மீனாட்சி வந்த பின்பும் தொடர கென் இடம் மாறிவிட்டான் என்று தவறாக எடுத்துக் கொண்டு மீனாட்சி கென்னிடமிருந்து விலகிப் போகிறார்.
இதற்கடுத்து கென்னின் வகுப்பிலேயே படிக்கும் அனிஷ்மா கென்னிடம் மிகவும் நெருங்கி பழகுகிறார். நட்பாக பழகுகிறார். இந்த நட்பை ஒரு கட்டத்தில் காதல் என்று நினைக்கிறார் கென். ஆனால் அனிஷ்மாவோ “இது வெறும் பிரண்ட்ஷிப் தான். இப்போது நமக்கு படிப்பு தான் முக்கியம்” என்கிறார்.
படிப்பா.. காதலா.. என்ற விஷயம் கென்னின் முன் நிற்க அவர் எதை கையில் எடுக்கிறார்? இறுதியில் காதல் ஜெயித்ததா? அல்லது அவரது படிப்பு ஜெயித்ததா? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஹீரோ கதாப்பாத்திரம் கென்னுக்கு மிக மிக பொருத்தமான இருக்கிறது. 10-ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு, 12-ம் வகுப்பு என்று ஹீரோவின் மூன்று வருட பருவ காலங்களில் நடக்கும் கதை என்பதால் அவருடைய உருவமும், தோற்றமும், அழகாக அதற்கு பொருந்தி இருக்கிறது.
முதல் பாதியில் யாருக்கும் அடங்காத ஒரு மகனாகவும், மாணவனாகவும்… பள்ளிக்கு வருவதே சைட் அடிப்பதற்கும், காதல் செய்வதற்கும்தான் என்ற ஒரு கொள்கையில் இருக்கும் ஒரு முட்டாள் மாணவனைபோல பிரவீன் என்ற அந்த கதாபாத்திரத்தை ரசித்து ருசித்து செய்திருக்கிறார் கென்.
பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்திருக்கிறது. அப்பா மீதான அவருடைய கோபமும், அம்மா மீதான எரிச்சலும்.. கென்னை கவலையில்லாத ஒரு மாணவனாக காட்டுகிறது. அந்த நடிப்பை அசால்ட்டாக செய்து இருக்கிறார் கென்.
ஆனால் கிளைமாக்ஸ் கட்சியின்போது தன்னுடைய அப்பா தன்னிடம் எப்படி எல்லாம் பேசினார்.. உருகினார் என்று சொல்லும் அந்த செண்டிமெண்ட் காட்சிகளிலும், அம்மா சென்டிமென்ட் காட்சிகளிலும் பாசமிக்க ஒரு மகனாக நடித்து படத்தின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார்.
முதல் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ் கேமராவுக்கேற்ற முகம். இருவருமே ஒரே சமயத்தில் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு வராந்தாவில் நின்று கொண்டு பேசுகின்ற பேச்சுக்களும், கண்களால் காட்டும் ஓரப் பார்வையும்.. அந்த வயதில் அந்த இளம் சிறார்களுக்கு என்ன தோன்றுமோ.. அதையே மீனாட்சி தன் முகபாவனையில் காட்டும்போது தியேட்டரில் படம் பார்க்கும் இளசுகளும் மீனாட்சியால் சொக்கிப் போகிறார்கள்.
சிறிது நேரமே என்றாலும் சோனலாக நடித்திருக்கும் பிரியதர்ஷினி தன்னுடைய சின்ன கண்களை வைத்து காதல் போதையேற்றி கென்னை சிதைக்கும் காட்சிகளில் நம்மை கவர்ந்திழுக்கிறார்.
படம் சொல்ல வந்திருக்கும் நீதியை எடுத்துரைக்கும் ஒரு பெண்ணாக நடித்திருக்கும் அனிஷ்மா அணில் குமார் நம் மனதை பெரிதும் கவருகிறார். கென் என்ற மாணவனை படிப்புக்குள் ஆழ்த்தி அவனையும் மேலே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்லதொரு கதாபாத்திரம்.
தான் காதலிப்பதாக நினைத்து கற்பனையில் வாழும் அவனது அந்த கற்பனையை உடைத்து நாம் படிக்க வந்திருக்கிறோம்.. நமக்கு மிகப் பெரிய கனவுகள் உண்டு. லட்சியங்கள் உண்டு. அந்த லட்சியத்தை அடைவதுதான் மாணவர்களாகிய நமது கடமை. அதை தேடித்தான் நம் ஓட வேண்டும் என்று அழகான அறிவுரையை சொல்லி கென்னை பதப்படுத்தும் காட்சிகளில் அனிஷ்மாவின் நடிப்பு அட்டகாசம். மிக அழகான நடிப்பினை கொடுத்திருக்கிறார் அனிஷ்மா. சில இடங்களில் நம்மை கைதட்டவும் வைத்திருக்கிறார் பாராட்டுக்கள் அனிஷ்மா.
இப்படி ஒரு அப்பா எங்கே இருந்தார் என்றெல்லாம் யோசிக்காமல் தியேட்டருக்கு வரும் இளசுகள் தங்களுடைய அப்பாவாக பொருந்திப் பார்க்கும் அளவுக்கு கச்சிதமாக நடித்திருக்கிறார் கென்னின் அப்பாவாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சாரமூடு.
மகன் மீதான வெறுப்பை அவ்வப்பொழுதே காட்டிக் கொண்டே இருந்தாலும் மகன் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற அவருடைய அந்த லட்சியத்தை மகன் உதாசீனப்படுத்துவதும் மனைவி கண்டுகொள்ளாமலேயே இருப்பதும் அவரை கொஞ்சம் குடிகாரன் ஆக்குகிறது.
அதோடு அவ்வப்பொழுது அவர் தன்னுடைய பழைய காதலியான ஆண்ட்ரியாவை நினைத்து போதையில் உளறுகின்ற காட்சிகளில் மென்மையாக சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
படிப்பு இல்லாததால் தன்னுடைய குடும்பம் தன்னை எப்படி ஒதுக்கி வைத்தது.. தான் பெறாத பட்டத்தை தன் மகன் பெற்று தருவான் என்று தான் நம்பி இருந்ததை மகனிடம் சொல்லிய வருத்தப்படுகின்ற அந்தக் கட்சியில் நிஜமாகவே நம் மனதை தொட்டுவிட்டார் சூரஜ். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள் சார்.
வழக்கமான அம்மாவாக தேவதர்ஷினி அடித்து ஆடியிருக்கிறார். எவ்வளவுதான் மகனை கணவர் திட்டினாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மகன் படிக்க வேண்டும்.. ஏதோ ஒரு வகையில் பாஸ் ஆகி வந்தாலே போதும் என்கின்ற நிலையில் ஒரே மகனை உச்சி மிகுந்து கொண்டே அவனே உலகம் என்று வாழும் அந்த கேரக்டரில் தேவதர்ஷனியை மிஞ்ச யாரு இருக்கிறார்கள்..?
ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருக்கும் பொழுதும் கணவருக்கு அடுத்து தன்னுடைய மகனை தேடுகின்ற அவருடைய கண்களும், “சாப்பிட்டியா?” என்று அவர் சைகையில் கேட்கின்ற அந்த பாசமும் அம்மாக்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்துகிறது.
அனிஷ்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து போலியாக அம்மாவுக்கு ஒரு பிறந்த நாள் விழாவையும் கொண்டாடும் மகனைப் பார்த்து பயப்படும் தேவதர்ஷினி “இன்னொரு பொண்ணு வந்துட்டால் அம்மாவை மறந்துடுவியா?” என்று கேட்கும் கேள்வி முட்டாள்தனமாக நமக்குத் தெரிந்தாலும், மகனே உலகம் என்று இருக்கும் பல தாய்மார்களின் கேள்வி இதுதான் என்பதை உண்மையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
தேவதர்ஷனியின் அண்ணன் வீட்டு கிரகப்பிரவேசத்தில் அவமானங்களை பெறும் தேவதர்ஷினி அவருடைய முகம் உடனுக்குடன் அந்த அவமானத்தை ஜீரணிக்கும்விதமாக அமைதியாக கொண்டு வந்த கிப்ட்டை வைத்துவிட்டு வெளியேறும் காட்சியில் சூரஜ்-தேவதர்ஷினி இருவரின் நடிப்பும் அழகோ அழகு. நிஜமாகவே இது போன்ற நிகழ்வுகளை தங்களது நிஜ வாழ்க்கையில் சந்தித்த ரசிகர்கள் அத்தனை பேரும் மனதுக்குள் குமைந்து போகிறார்கள். இயக்குநரின் மிகச் சிறப்பான இயக்கத்திற்கு இந்தக் காட்சியும் ஒரு மிகப் பெரிய உதாரணம்.
கென்னின் நண்பர்களாக நடித்தவர்களும் அவ்வப்பொழுது ஏதாவது நல்ல யோசனை சொல்வதாக சொல்லி வில்லங்கத்தை இழுத்து வைக்கும் பொழுதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மீனாட்சி – கென்னின் காதலை உடைப்பதற்காக அந்த குண்டு பெண் செய்யும் ஒரு டிராமாவும், அந்தச் சூழ்நிலையை முன் வைத்து ஆடும் ஆட்டமும் ரசிக்க கூடியதாகவும் நல்ல நடிப்புடனும் செய்து இருக்கிறார்கள். இடைவேளை பிளாக் அசத்தல். நினைத்துப் பார்க்காத ஒரு காட்சியை அப்போது வைத்திருக்கிறார்கள்.
பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பது முதல் காட்சிகயிலேயே நமக்குத் தெரிந்துவிட்டது. ஒளிப்பதிவில் எள்ளளவுக்கும் குறைவில்லாமல் இறுதிவரையிலும் மிக அழகான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி.
புதிய இளம் இயக்குநர், இதுவரையில் எந்த படத்தையும் இயக்கி அனுபவம் இல்லாதவர்.. எந்தப் படத்திலும் காட்ட முடியாத அளவுக்கான கேமரா கோணங்களை மிக அழகாக வடிவமைத்து பார்த்து ரசிப்பதுபோல பல காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்தை பார்த்தால் ஒளிப்பதிவாளரின் திறமையை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
பாடல் காட்சிகள் மாண்டேஜ் ஷாட்களாக செல்வதுகூட ஒரு கொள்ளை அழகுதான். கவிதை வடிவில் பல காட்சிகளை படமாக்கி வைத்திருக்கிறார். அதிலும் அனிஷ்மாவின் முகத்தை குளோசப்பில் காட்டும் பொழுதெல்லாம் திரை முழுக்கவும் ஒரு அழகு பலிச்சிடுகிறது. மீனாட்சி தினேஷும் தன்னுடைய பங்குக்கு தன்னுடைய அழகான முகத்தினை காட்டி இளசுகளை கவர்ந்து இருக்கிறார். இதற்காகவே ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் விளம்பரப்படுத்தப்பட்ட அளவில் மிகப் பெரிய ஹிட் அடித்துவிட்டதால் ஜி.வி.பிரகாசுக்கு இந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய லாபம்தான். ஆனால், துரதிஷ்டவசமாக எந்தப் பாடலும் படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை என்பது நமக்கு ஒரு சோகத்தை தருகிறது. அதோடு சின்ன, சின்ன, பிட்டு, பிட்டு காட்சிகளாக பாடல்களை திணித்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. படத் தொகுப்பாளர் நாஷ் தன்னால் முடிந்த அளவுக்கான படத் தொகுப்பினை செய்து படத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.
படம் இறுதியில் சொல்லுகின்ற நீதி மிக சரியானதுதான் என்றாலும் சொல்லப்பட்ட விதம் சரியா என்பது நிச்சயமாக நியாயமான ஒரு கேள்விதான்.
பள்ளிப் பருவத்தில் எழும் காதல் என்பது நிச்சயமாக உண்மையான காதல் அல்ல.. அது ஒரு இன்பாச்சுவேஷன். எதிர் பாலினை ஈர்ப்பு மட்டுமே. அதை காதலாக வைத்து கொண்டாடுவது காலம் காலமாக நம்முடைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.
ஆனால், அதைத் தவறு என்று வேறொரு கதாபாத்திரம் மூலமாக சொல்லியிருக்க வேண்டும். “படிக்கப் போனீங்களா? லவ் பண்ண போனீங்களா?”.. “படிக்கிற வயசுல எதுக்கு லவ்?”, “லவ் பண்ணி என்ன பண்ண போறீங்க?”, “இந்தக் காதல் எங்கே கொண்டு போய் முடியும் தெரியுமா?” – இது மாதிரியான வசனங்களை பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் அது மாதிரியான ஒரு வசனத்தைக்கூட இயக்குநர் வைக்காமல் நழுவியிருக்கிறார்.
சூரஜ் தன் மகனிடம் தன்னுடைய கதையை சொல்லும்பொழுதுகூட தான் படிக்காதவன் என்ற காரணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினர் தன்னை தள்ளி வைத்ததாக சொல்கிறார். ஆனால், அதையே மகனுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். படிப்பு இல்லை எனில் ஒன்றுமே இல்லை. காதல் எதுவுமே இல்லை. படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று அதன் பிறகு காதலை தொடருங்கள்… என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால்கூட நிச்சயமாக பாராட்டலாம்.
ஆனால், இது போன்ற ஒரு வார்த்தைகளைகூட வசனத்தில் வைக்காதது இயக்குநரின் பெரும் தவறு. நிச்சயமாக இதற்காக இயக்குநருக்கு நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
முதல் பாதியில் கென்னும், அவரது நண்பர்களும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் நம்மை ரொம்பவே அச்சப்படுத்திவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு திடீரென்று நல்லவனாக மாறிய கென், பிளஸ் டூவில் மிகப் பெரிய அளவுக்கு மதிப்பெண் எடுத்து வெளியில் வருவதைப் பார்த்தவுடன், “ஓகே இப்ப தம்பி படிப்புதான் முக்கியம்” என்று தீர்மானித்துவிட்டான் என்று நாமாக நினைத்து கைதட்ட வேண்டி இருக்கிறது. இதை வசனத்தின் மூலமாக சொல்லி இருக்க வேண்டும்.
அப்பா சொன்ன அந்த ஒரே காரணத்துக்காக தான் காதல் என்று நினைத்த நட்பை முறித்துக் கொள்வதாக கடைசியில் கென் சொல்வது அபத்தமானது. அதற்கு முன்பாக அனீஷ்மாவே சொல்லிவிட்டார். “இப்போது நாம் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். இதற்குப் பெயர் காதல் அல்ல. நாம் இருவருக்குமே லட்சியம் உண்டு. அதைத் தேடி ஓடுவோம்” என்று இன்னும் வெளிப்படையாக அவர் சொல்லியிருந்தார். இதை அனிஷ்மாவிடம் சொல்லிக் காட்டியிருந்தால் அவருடைய கதாப்பாத்திரத்திக்கு ஒரு வெயிட்டாவது கிடைத்திருக்கும்.
சில பல குறைகளும், சில பல கேரக்டர் ஸ்கெட்ச் தவறுகளும் இந்தப் படத்தில் இருந்தாலும் அதையெல்லாம் சரிப்படுத்தும்விதமாக மிக அழகான இறுக்கமான இயக்கமாகவும்… 10 படங்களை இயக்கிய இயக்குநர் செய்யும் நகாசு வேலைகளையெல்லாம் முதல் படத்திலேயே செய்தும்.. படத்திலிருந்து ஒரு துளி கவனம்கூட அகல முடியாத அளவுக்கு நம்முடைய பார்வையை திரைப்படத்திலேயே இழுத்துப் பிடித்த நிறுத்திய இயக்குநர் கென்னுக்கும் அவரது டீமுக்கும் நமது பாராட்டுக்கள்.
நிச்சயமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் நாம் பார்த்தே தீர வேண்டும். குடும்பத்துடன் பார்த்தால்தான் இன்றைய இளைய சமூகத்தினரில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாணவியர்களின் மன நலன்களை நாம் அருகில் இருந்து பார்ப்பது போல் தெரியும். அவர்களுக்கும் இது ஒரு முன் உதாரண படமாக அமையும்.
அவசியம் பாருங்கள்..!
RATING : 4 / 5









