full screen background image

குபேரா – சினிமா விமர்சனம்

குபேரா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சுனைனா, சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், கே.பாக்யராஜ், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேனர் – ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்​ஸ் பிரைவேட் லிமிடெட், தயாரிப்பாளர்கள் – சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ்
வழங்குபவர் – சோனாலி நரங், இயக்குநர் – சேகர் கம்முலா, இசை – தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் – நிகேத் பொம்மி, எடிட்டர் – கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.ஆர், இணை எழுத்தாளர் – சைதன்ய பிங்கலி, இரண்டாவது யூனிட் இயக்குநர் – சூரி ரவிக்குமார், அதிரடி இயக்குநர் – ‘ஸ்டண்ட்ஸ்’ ஸ்ரீதர், மேற்பார்வையாளர்கள் – அசோக் மொச்சார்லா, நாகு தலாரி, ஆடை வடிவமைப்பாளர்கள் – காவ்யா ஸ்ரீராம், பூர்வா ஜெயின் விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன், நிர்வாக தயாரிப்பாளர் – இரலா நாகேஸ்வர ராவ், இணை தயாரிப்பாளர் – அஜய் கைகாலா, தமிழ் உரையாடல்கள் – அகோரம் பன்னீர்செல்வம், ஆடியோ : ஆதித்யா மியூசிக், தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு – ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.

ஒரு பிச்சைக்காரன் எப்படி பத்தாயிரம் கோடிக்கு அதிபதியாகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்தியாவின் வங்காள  விரிகுடா கடல் பகுதியில் இயற்கை எரி வாயுவும், எண்ணெய் வளமும் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த இடத்தில் எண்ணெய் இருக்கிறதா என்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவரான ஜிம் சர்ப் இந்த விஷயத்தை மத்திய அமைச்சரான ஹரீஷ் பெராடியிடம் கொண்டு செல்கிறார்.

அந்த இடத்தில் எண்ணெய் எடுக்கும் மொத்த கான்ட்ராக்டையும் தன்னிடம் கொடுத்து விட்டால், அமைச்சர் ஹரீஷ் பெராடிக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் 40 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சப் பணம் தருவதாக சொல்கிறார் நீரஜ்.

இதற்கு மந்திரி ஹரிஷ் போராடியும் ஒத்துக் கொள்ள….. இதை செய்து முடிக்க யாரை அழைப்பது என்று யோசிக்கிறார்கள்.

ஒரு நேர்மையான சி.பி.ஐ. ஆபீஸராக இருந்த தீபக் என்ற நாகார்ஜுனா தற்போது ஒரு சதி வேலையில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் இந்த வேலைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று வில்லன் ஜிம் சர்பின் அப்பா, தன் மகனிடம் சொல்கிறார்.

ஜிம் சர்ப் சிறைக்கு வந்து நாகார்ஜுனாவை கேட்க, அவர் நேர்மைதான் முக்கியம் என்று சொல்லி மறுக்கிறார்.

ஆனால் நாகார்ஜூனா மீதான வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையை விதிக்கிறது.

தன்னுடைய குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த நாகார்ஜுனா, வேறு வழியில்லாமல் ஜிம் சர்பின் கோரிக்கைக்கு அடிபணிகிறார்.

சிறையில் இருந்து வெளியில் எடுக்கப்படும் நாகார்ஜுனா ஜிம் சர்பின் லஞ்சப் பணப் பரிமாற்றத்தை முழுமையாக தானே செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.

இந்த வேலையை செய்து முடிப்பதற்காக நான்கு பிச்சைக்காரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். அதில் திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படுபவர் ‘தேவா’ என்ற தனுஷ்.

வந்திருக்கும் நான்கு பேரில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசுவது தேவா மட்டுமே என்பதால், தீபக்கிற்கு அவரை மிகவும் பிடித்து போகிறது.

பணப் பரிமாற்றம் முடிந்தவுடன் இந்த நாலு பேரையும் தீர்த்து கட்டி விடும்படி நீரஜ் தன்னுடைய அடியாட்களிடம் சொல்லி இருக்கிறார்.

இது தெரியாமல் தீபக் வந்த பிச்சைக்காரர்களின் தோற்றத்தைத் தலைகீழாக மாற்றி அவர்கள் பெயரில் போலியான அடையாள அட்டைகளை உருவாக்கி வெளிநாடுகளில் வங்கிகளில் அக்கவுண்ட் ஆரம்பித்து, அந்த அக்கவுண்ட் மூலமாக லஞ்சம் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்கிறார்.

பணம் ட்ரான்ஸ்பர் ஆனவுடன் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். மூன்றாவதாக இருந்த பெண் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால், கடைசியாக இருந்த தனுஷையும் பணப் பரிமாற்றம் முடிந்த பின்பு கொலை செய்ய முயல்கிறார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் அந்த பணப் பரிமாற்றம் தோல்வியில் முடிந்துவிட்டதால் இப்போது தனுஷ், தீபக்கிற்கு அவசியம் தேவை. ஆனால் தனுஷ் இவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுகிறார்.

போனவர் ரயில்வே ஸ்டேஷனில் ராஷ்மிகாவை தற்செயலாக சந்தித்து அறிமுகம் ஆகி கொள்கிறார்.  தீபக்கும் அவரது கூட்டாளிகளும் தனுஷைத் தேடத் துவங்குகிறார்கள். தனுஷ் உடன் ராஷ்மிகா பழக்கமாய் இருப்பதை அறிந்து தீபக் ராஷ்மிகாவையும் தேடிச் சென்று மிரட்டுகிறார்.

இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக ராஷ்மிகாவும், தனுசுடன் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருவரும் தப்பித்து ஓட துவங்குகிறார்கள்.

பின்னால் கார்ப்பரேட் முதலாளிகளின் கோரக் கரங்களும் அவர்களை தேடி அலைகிறது.

கடைசியில் என்னவானது? தனுஷூம், ராஷ்மிகாவும் சிக்கினார்களா? இல்லையா?.. தனுஷ் பெயரில் இருந்த அந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது?.. கார்ப்பரேட்டுகளின் சதி வேலை என்ன ஆனது?.. என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

தமிழ் சினிமாவின் நடிப்புத் திலகங்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாகக் காட்டி வருகிறார். இந்தப் படத்திலும் ‘தேவா’ என்ற பிச்சைக்காரனாக அவர் நடித்திருக்கும் நடிப்பு, அவருடைய கேரியரில் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

அவருடைய அறிமுக கட்சியில் இருந்து கடைசி காட்சி வரையிலும் படிப்பறிவு இல்லாத ஒரு பிச்சைக்காரன் எப்படி இருப்பானோ, அப்படித்தான் தனுஷ் தன் அப்பாவித்தனத்தை காட்டி இருக்கிறார்.

தன்னிடம் கோபப்படுகிறார்கள் என்பதைக்கூட உணர தெரியாமல், உணர முடியாமல்… நாகார்ஜுனாவிடமும், ராஷ்மிகாவிடமும் தான் ஒரு பிச்சைக்காரன் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே வருகின்ற காட்சிகளிலெல்லாம் நம் மனதை தொட்டு விட்டார்.

பிச்சைக்காரனின் கை வாங்கும் இடத்தில் இருக்கும்.. கொடுக்கும் இடத்தில் இருக்காது… என்பதை பல சந்தர்ப்பங்களில்… இந்தப் படத்தில் ஒரு குறியீடாக சுட்டிக்காட்டும்போது அந்த இடங்களிலெல்லாம் தனுஷின் நடிப்பு அபாரம்.

ஒரு பிச்சைக்காரன் எப்படி எல்லாம் பிச்சை எடுப்பான்? கேட்பான்? என்ன மாதிரி எல்லாம் பேசுவான்? எந்த மாதிரி உடை அணிந்து இருப்பான்? மற்றவர்களிடம் எப்படி பேசுவான்? வெளி உலகத்தை அருகில் பார்த்தால் அவன் என்ன நினைப்பான்? என்பதை எல்லாம் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சாக உள்வாங்கிக் கொண்டு மிக அற்புதமான தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார் தனுஷ். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தீபக் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நாகார்ஜுனா வெகு சுமாரான நடிப்பையே காண்பித்திருக்கிறார். இவருக்குப் பதிலாக பிரகாஷ்ராஜை நடிக்க வைத்திருக்கலாம். சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் கோபப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் மீட்டரை குறைத்து நடிக்க வைத்திருப்பதால் நாகார்ஜுனாவின் அந்தக் கோபமும், பரிதாபமும் நமக்கு அவ்வளவாக எட்டவில்லை என்பதுதான் உண்மை.

ராஷ்மிகாவுக்கு இது மாதிரியான ஒரு கேரக்டர் இன்னொரு முறை கிடைக்காது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு அழகான கதாபாத்திரம். காதலனை நம்பி மும்பை வந்து அவனுடன் சேர முடியாமல், நண்பி வீட்டிலும் இருக்க முடியாமல் தவியாய் தவித்து, தனுஷினால் பல இழப்புகளையும் இழந்து…. கடைசிவரையில் அவருடனே ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஓட்டத்தை ரசிக்கலாம்.

திரைக்கதையில் ராஷ்மிகா வருகின்ற காட்சிகள் எல்லாம் அவரைப் பார்த்தே தீர வேண்டும் என்பதுபோல அவருடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் அவ்வளவு அற்புதமாக உள்ளது.

வில்லனாக நடித்த ஜிம் சர்ப் ஒரு அசத்தலான வில்லன் கதாப்பாத்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் வருகின்ற காட்சிகளில்லாம் அவருடைய முக பாவனைகளும், அவருடைய நடிப்பும் மொத்தமாக அவரையே பார்க்க வைத்திருக்கிறது அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

அவருடைய அப்பாவாக நடித்தவர், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டே, தனுஷின் வளர்ப்பு தாத்தா கேரக்டரில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாகார்ஜுனாவின் மனைவியாக நடித்திருக்கும் சுனைனா.. மற்ற நட்சத்திரங்கள் எல்லோருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கை வண்ணத்தில் படம் முழுவதும் பளிச்சென்று இருக்கிறது. அற்புதமான ஒளிப்பதிவு. காசி, திருப்பதி, டெல்லி, மும்பை என்று பல்வேறு இடங்களில் பயணிக்கும் இந்தக் திரைக்கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் தன்னுடைய கை வண்ணத்தை காட்டி இருக்கிறார்.

எப்போதும் தடாலடியாக அடித்து ஆடும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அடித்து ஆடி இருக்கிறார். ஆனால் அதை விடவும் ‘என் மகனே’ என்கின்ற பாடல் நம் மனதை மிகவும் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

படத்தின் மிகப் பெரிய சோதனையே படத்தின் நீளம்தான். மூன்று மணி நேரம் இரண்டு செகண்டுகள் கொண்ட இந்தத் திரைப்படத்தை எப்படி கட் செய்வது என்பது நிச்சயமாக யாருக்குமே புரியாத புதிராகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு டீடெயில்டு வெர்ஷனாக இந்தப் படத்தை எழுதி இருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

படத் தொகுப்பாளரான கார்த்திகா சீனிவாசனின் கத்தரிக்கோல் இன்னமும் நிறைய காட்சிகளை கட் செய்து வைத்திருந்திருக்கலாம்.

உடைகளை வடிவமைத்தவரையும் நாம் பாராட்ட வேண்டும். ஒரு பிச்சைக்காரர்கள் கூட்டம்… அதற்கு நேர் ஆப்போசிட்டாக மிகப் பெரிய பணக்காரர்கள் கூட்டம். அரசியல்வாதிகள் கூட்டம் என்று அத்தனை பேரையுமே தேர்ந்தெடுத்த பல வண்ண உடைகளையும், நேர்த்தியான உடைகளையும் கொடுத்து அவருடைய ஒவ்வொருவரின் கேரக்டர்களுக்கும் ஒரு அடையாளம் கொடுத்திருக்கிறார். இதற்காக உடை வடிவமைப்பாளக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தப் படத்தை தைரியமாக எடுத்ததற்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுகளை சொல்லலாம். வாழ்த்துக்களை சொல்லலாம்.

இந்தியாவே தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கண் அசைவிலும் கையசைவிலும்தான் நடந்து வருகிறது.

சாதாரண ஒரு ஏழை விவசாயி 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்கவில்லை என்பதற்காக அவருடைய டிராக்டரை பறிமுதல் செய்யும் வேலையில் இறங்கும் கடமை தவறாத வங்கி அதிகாரிகள்… கார்ப்பரேட் நிறுவனங்கள் 5000 கோடி, 10000 கோடியை சுருட்டிக் கொண்டு ஓடும் பொழுது மட்டும் அமைதி காத்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றன.

அந்த வரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் நிறுவனமான அம்பானிகளை வறுத்து எடுக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் பல வசனங்களை தைரியமாக வைத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. இதற்காகவே இவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.

கார்பரோட் நிறுவனங்கள் லஞ்சம் என்கின்ற ஒரு வஸ்துவை வைத்து இந்திய அரசியல் வியாதிகளை இன்றுவரையிலும் அடிமை ஆக்கி வைத்திருக்கிறார்கள். அந்த லஞ்ச முறைகேடு எந்த அளவுக்கு இந்தியாவின் பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இந்தியாவை சீரழித்து இருக்கிறது என்பதை அமைச்சர் ஹரீஷ் பெராடியின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாகவும், அவர் பேசும் பல வசனங்கள் மூலமாகவும் நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

பிச்சைக்காரர்கள் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லாமல் அன்றாட உணவுக்காக அன்றைய நாள் மட்டுமே பிச்சை எடுக்கிறார்கள்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ 10 தலைமுறைக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக மக்களுடைய பணத்தை முறைகேடாக கொள்ளையடித்து சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் மனிதாபிமானமற்ற அவர்களை விடவும் மனித தன்மையுடைய பிச்சைக்காரர்கள் எவ்வளவோ மேல் என்பதையும் இந்த படத்தில் இயக்குநர் சேகர் கம்முலா நமக்கு உணர்த்தி இருக்கிறார்.

பிச்சைக்காரர்களின் வாழ்க்கையையும் அவர்கள் பிச்சை எடுக்கும் முறை, அவர்கள் இப்படியெல்லாம் எந்தந்த இடங்களில் எல்லாம் அமர்ந்திருப்பார்கள்? என்ன மாதிரி குரல் எழுப்புவார்கள்? எப்படி அவர்களின் உடல் மொழி இருக்கும்? என்றெல்லாம் பிச்சை எடுப்பது பற்றிய ஒரு ஆவணப் படம் போலவும் இந்தப் படம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

முன்பே சொன்னது போல தனுஷின் கேரியரில் இத்திரைப்படம் மிக மிக முக்கியமான ஒரு படம். அவசியம் நாம் பார்க்க வேண்டிய படம்!

RATING : 4 / 5

Our Score