டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், கீதா கைலாசம், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர்: ஜி.கே பிரசன்னா, ஒளிப்பதிவு: கிரண் கௌஷிக், சண்டை காட்சிகள் : பீட்டர் ஹெய்ன், கலை: ஜாக்கி, நடன இயக்குநர் : சதீஷ், ஸ்டில்ஸ்:- தேனி முருகன், ஒப்பனை: பி ராஜா, ஆடை வடிவமைப்பாளர்: காவ்யா ஸ்ரீPராம், விளம்பர வடிவமைப்பு: கபிலன், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: டி.ரமேஷ் குச்சிராயர், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது – சதீஷ்(TEAM AIM)
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியும் இருக்கிறார் தனுஷ். இவருடைய இயக்கத்தில் வெளிவரும் நான்காவது திரைப்படம் இது.
தேனி அருகே இருக்கும் சங்கராபுரம்தான் தனுஷின் சொந்த ஊர். அவருடைய அப்பா ராஜ்கிரன் அந்த ஊரிலேயே சிவனேசன் இட்லி கடை என்ற பெயரில் ஒரு இட்லி கடையை நடத்தி வந்திருக்கிறார்.
அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த தனுஷ் தான் வளரும் பொழுதே தன்னுடைய குடும்பத்திற்காக அவருடைய அப்பா ராஜ்கிரன் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பதையும் பார்த்து வளர்ந்திருக்கிறார்.
தனுசு கேட்டரிங் படித்து விட்டு அந்த இட்லி கடையை கொஞ்சம் நவீனமாய் மாற்றி அமைக்கலாம் என்று அப்பாவிடம் சொல்கிறார். ஆனால் அப்பா ராஜ்கிரனோ இன்னமும் தன்னுடைய உடலையும், வயதையும் எண்ணாமல் தானே மாவை ஆட்டி கிடைக்கும் மாவின் கை பக்குவம் போல எந்த ஒரு கிரைண்டரும் மாவுக்கு மகிமை சேர்க்க முடியாது என்று சொல்லி தட்டிக் கழிக்கிறார்.
இந்த ஹோட்டல் தொழிலை நவீன மயமாக்க அப்பா ஒத்துழைக்காத காரணத்தினால் தான் சென்னைக்கு சென்று வேலை பார்க்க போவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தவர், அங்கிருந்து பாங்காங்கிற்கு பறந்து வந்துவிட்டார்.
பாங்காங்கில் சத்யராஜ் நடத்தி வரும் ஒரு மிகப் பெரிய ரெஸ்டாரண்டில் சீப் செப்பாக சிறப்பாக வேலைக்கு சேர்கிறார் தனுஷ். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டையையும் காதலித்து வந்திருக்கிறார். இப்பொழுது இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சத்யராஜ் முடிவு எடுத்து இருக்கிறார்.
ஆனால், சத்யராஜின் மகனான அஸ்வின் என்ற அருண் விஜய்க்கு தனுசை சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கிருந்தோ வேலை கேட்டு வந்தவனுக்கு நம்முடைய சாம்ராஜ்யத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடலாமா.. தப்பில்லையா… என்று தந்தையிடம் சண்டையிடுகிறார்.
இந்த நேரத்தில் தன்னுடைய அம்மா, அப்பாவை தன்னுடைய திருமணத்திற்காக பாங்காக் வரும்படி அழைக்கிறார் தனுஷ். ஆனால், அவர்கள் வரவில்லை அதோடு சில நாட்களிலேயே ராஜ்கிரண் இறந்து போக, அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தனுஷும் அதே ஹோட்டலில் மேனேஜர் வேலை பார்த்து வந்த இளவரசும் சங்கராபுரம் வருகிறார்கள்.
சங்கராபுரத்தில் அப்பாவின் இறுதிச் சடங்கின்போது தன் அப்பாவுக்கு கிடைத்த பெருமையையும், கூட்டத்தையும் பார்த்து மனம் நெகிழ்கிறார் தனுஷ். அதே சமயம் அந்த ஹோட்டலை என்ன செய்வது என்பதே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
அடுத்த நாளே அவருடைய தாயாரும் மன நிலை தடம் மாறி திடீரென்று இறந்து போகிறார். தாய், தந்தை இருவரையுமே ஒரே வாரத்தில் இழந்து சோகத்தில் இருக்கும் தனுஷ் இங்கேயே இருந்து இந்த சிவநேசன் இட்லிக் கடையை நவீனப்படுத்தினால் என்ன என்று யோசிக்கிறார்.
அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக இங்கேயே இருந்துவிட நினைக்கும் தனுஷ், இதற்காக தன்னுடைய காதலையும், கல்யாணத்தையும் ரத்து செய்கிறார். இதனால் கோபம் அடையும் சத்யராஜ் மகன் அஸ்வின் பாங்காங்கிலிருந்து சங்கராபுரம் வந்து தனுஷ் உடன் சண்டை இடுகிறார்.
இந்த சண்டையில் அஸ்வின் மிகப் பெரிய அளவுக்கு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சத்யராஜூம், ஷாலினியும் இங்கே ஓடி வந்து அஸ்வினை பார்க்க… “தனுஷை ஒரு வழி பண்ணாமல் நான் இந்த ஊரை விட்டு வர மாட்டேன்” என்று சபதம் எடுக்கிறார் அஸ்வின். தனுஷோ தன்னுடைய அப்பா தனக்கு சொல்லிக் கொடுத்தது போல அகிம்சையைப் போல் ஒரு மிகச் சிறந்த ஆயுதம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை உணர்கிறார்.
அஸ்வின் சண்டையிட தயாராக காத்திருக்க.. தனுஷோ அகிம்சையை பின்பற்றி அமைதியாக இருக்க விரும்ப… இந்த இருவரில் யார் ஜெயித்தது? இட்லி கடை நவீனமானதா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
முதலில் இப்படி ஒரு கிராமத்து கதையை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கும் தனுஷுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
படத்துக்கு படம் தன்னுடைய நடிப்பினாலேயே அனைவரையும் கவரும் முருகன் என்ற தனுஷ் இந்தப் படத்தில் ஒட்டு மொத்தமாக நம்முடைய கவனத்தை ஈர்த்து தன்னுடைய நடிப்பைக் கொட்டி சபாஷ் பெற்றிருக்கிறார்.
தனுஷின் மிகப் பெரிய பலமே அவரது உடல் அமைப்புதான். அவரால் இப்போதும் +2 ஸ்டூடண்ட்டாக நடிக்க முடியும். கல்லூரி மாணவனாகவும் நடிக்க முடியும். பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் நடிக்க முடியும். தாத்தாவாகவும் நடிக்க முடியும். இப்படி ஒரு பாடி ஸ்ட்ரக்ச்சரில் கூடவே சிறந்த நடிப்பும் தனுஷை தொற்றிக் கொள்ள இப்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார் தனுஷ்.
பள்ளி மாணவனாக இருந்து தன் தந்தையின் கடின உழைப்பை நேரில் பார்க்கும் தனுஷ், கொஞ்சம் படித்து முடித்து விட்டு வந்து அந்த இட்லி கடையை நவீனமாக்க தன்னுடைய அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்து வருத்தப்படும் பொழுது தம்பி உண்மையத்தான பேசுது… நல்லாத்தான நடிக்குது… என்ற நமக்கு தோன்றுகிறது.
தாய்லாந்தில் தான் வேலை செய்யும் ஹோட்டலின் முதலாளி மகளையே காதலித்து திருமணம் செய்யப் போவதாக இருக்கும் சூழ்நிலையிலும், தன்னுடைய வருங்கால மனைவியின் அண்ணன் தன்னை அவமானப்படுத்துவதையெல்லாம் சகித்துக் கொண்டு இது ஒரு விஷயமே இல்லை. நமக்கு தொழில்தான் முக்கியம். வேலைதான் முக்கியம் என்று அவர் நினைத்துப் பார்க்கும் அந்த நடிப்பு நிச்சயம் தனுஷுக்கு ஒரு சலாம் போட வைத்திருக்கிறது.
சங்கராபுரம் திரும்பி தன்னுடைய தாய் தந்தையரை இழந்துவிட்டு அந்த ஹோட்டலை எப்படியாவது நடத்தி விடலாமா என்று அவர் யோசிக்கும் அளவுக்கு கிராமத்தில் பிரச்சனைகள் சூழும்போது அதை எதிர்கொள்ளும் விதமும் கடைசி வரையிலும் அகிம்சையை கைவிடாமல் நான் இப்படித்தான்.. முடிந்தால் நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்… என்று சவால் விடுவதைப் போல அவருடைய அழுத்தமான நடிப்பினாலயே இந்த முருகன் நம்மை பெரிதும் கவர்கிறார்.
ஷாலினி பாண்டே உடனான காதல் போர்சனில் பாடல்கள் எதுவும் இல்லாமல் பேச்சிலேயே அந்த காதலை காட்டும்போதும்.. சங்கராபுரத்தில் எட்டாங்கிளாஸ் வரைக்கும் தன்னுடன் படித்த நித்யா மேனனை கல்யாணம் பண்ணிக்கலாமா, காதலிக்கலாமா என்றெல்லாம் சிந்தனையே இல்லாமல் பழகிவிட்டு பின்பு ஒரு கட்டத்தில் அவருடைய அம்மாவிடம் “உங்களுக்கு விருப்பம் இருந்தால் நித்யாவை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சொல்லும்போது ஒரு சாதாரண முருகனாக அந்தக் கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
பாங்காங் காதலியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு காதலை வெளிப்படுத்த அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் பின்பு சக்கராபுரத்துக்கே வந்த பின்பு முருகன் பற்றிய உண்மை அறிந்து அவருடைய அப்பா, அண்ணனிடம் அவர் பேசும் ஆவேச பேச்சுக்கள் முருகன் கதாப்பாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளது.
தலைவன் தலைவி போலவே அந்தப் படத்தில் பரோட்டா என்றால் இந்த படத்தில் இட்லி. இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் வந்து மாட்டி இருக்கும் நித்யா மேனன் நிச்சயம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது. இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அவர் ஹீரோயினாக இத்தனை வருடங்களாக வலம் வருவதே ஆச்சரியமான ஒன்றுதான்.
இந்தப் படத்திலும் தன்னுடைய காதலை சுற்றி வளைத்து அவர் சொல்கின்றபோதும் புரிந்து கொள்ளாத மங்குனி போலவே முருகன் இருப்பதை பார்த்து சலிப்படைந்து செல்லும்போது நித்யாவின் நடிப்பு ஓஹோ ரகம்தான்.
தனுஷுக்கு அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் தன்னுடைய மென்மையான நடிப்பினாலும் மிக அழகான பேச்சு டெலிவரிகளும் இப்படி ஒரு அப்பா எல்லாருக்கும் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்பதுபோல சொல்ல வைத்திருக்கிறார். தனுசுடன் தொடர்ந்து பல படங்களில் அப்பாவாக நடித்து வரும் ராஜ்கிரண் அவருக்கு போட்டியாளராக யாரும் இல்லாததால் இப்போது கொடி கட்டி பறக்கிறார்.
தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் ஒரு கிராமத்து அம்மாவாக தன்னுடைய நடிப்பை சிறப்பாக காண்பித்து இருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் சண்டை இருந்தாலும் எல்லா வீட்டிலும் அம்மாக்கள் நடுநிலைமையோடு இருவரையும் சமாதானப்படுத்துவார்களே… அந்த நடிப்பையும் காண்பித்திருக்கிறார். அதுபோலவே வெளியூர் செல்லும் தனுஷிடம் பாசமாக பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்டு வரையிலும் சென்று பஸ் ஏற்றி விடும்போது அவர் காட்டும் தவிப்பு, உண்மையாகவே நம்முடைய அம்மாவிடம் நாம் பார்த்தது போலவே இருக்கிறது.
ஹோட்டல் முதலாளியாக நடித்திருக்கும் சத்யராஜ் தன்னுடைய மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல் மகளையும் விட்டுக் கொடுக்க முடியாமல் வருங்கால மருமகனையும் விட்டுக் கொடுக்காத முடியாமல் தவிக்கும் ஒரு டிபிக்கல் அப்பாவாக நடித்திருக்கிறார். மகனை அடித்து வளர்த்திருக்க வேண்டும் என்கின்ற உண்மையை அவர் உணர்ந்து அதை செய்து காட்டும் பொழுது சபாஷ் என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
இப்போதும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவே நடித்து வரும் அருண் விஜய் இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாகவும் வலம் வந்திருக்கிறார். ஒரு ஸ்டைலாக, ஒரு திமிராக… எப்போதும் தனுஷை மட்டமாக பேசிக் கொண்டே பங்காக்கில் அறிமுகமாகும் அவர், அங்கிருந்து சங்கராபுரத்திற்கு வந்து தனுஷிடம் சண்டை இட்டு மருத்துவமனையில் இருக்கும்பொழுது “அவனை ஒரு வழி பண்ணாம வர மாட்டேன்” என்று உறுதியாக சொல்லும் இடத்திலும் ஆக சரியான வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
ஹோட்டல் மேனேஜராக நடித்திருக்கும் இளவரசு தன்னுடைய குணச்சித்திர நடிப்பை காண்பித்திருக்கிறார் தன்னுடைய மகன் என்று புரியாத அளவுக்கு நோயில் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய அம்மாவை பார்த்தவுடன், இளவரசு தானும் தாய்லாந்திற்கு திருப்பி போவதில்லை என்று முடிவு எடுக்கும்போது அவரையும் பாராட்டத்தான் தோன்றுகிறது.
இந்தப் படத்தில் எதற்கு பார்த்திபன் என்று ஒரு விஷயம்தான் நமக்குப் புரியவில்லை ஆனாலும் வில்லன் மாதிரியும் இருக்கக் கூடாது. ஹீரோ மாதிரியும் இருக்கக் கூடாது என்கின்ற ஒரு கதாபாத்திரம் என்பதால் பார்த்திபனை நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும்..!
இன்னொரு பக்கம் சமுத்திரக்கனி நித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அவர் செய்கின்ற கொஞ்ச அலப்பறையும் ரசிக்கத்தக்கது. ஆனால், இந்த சின்ன கேரக்டருக்கு சமுத்திரக்கனி தேவையா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
சிவநேசன் இட்லி கடையின் ரெகுலர் கஸ்டமராக வரும் அந்த தாத்தாவும் ஒரு பக்கம் நம்மை கவர்கிறார் அதேபோல் பார்த்திபனை வச்சு செய்யும் அந்த அப்பத்தாவும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் கவர்ந்திருக்கிறார். மற்றும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சங்கராபுரம் மக்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நடிப்புக்கெல்லாம் தனித்தனியாக மதிப்பெண் போட்டு படத்தின் சிறப்புகளை கூட்டினாலும் தொழில் நுட்பத்திலும் திரைப்படம் நிச்சயம் ஒரு சிறந்த கலைஞர்களை வைத்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரண் கெளஷிக்கின் ஒலிப்பதிவு ரிச்னெஸ்ஸாகவே இருக்கிறது. பாங்காங் காட்சிகளில் அழகெல்லாம் காட்டாமல் இயற்கையாக இயல்பாக இருப்பது போலவே காட்டிவிட்டு சங்கராபுரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒழிப்பதிவாளர். அதிலும் பாடல் காட்சிகள் அத்தனையிலும் கேமராவின் பங்களிப்பு சிறப்பு. அந்த இட்லி கடைக்கு உள்ளேயே விதவிதமான பகுதிகளில் கோணங்களில் வைத்து படமாக்கி கொஞ்சமும் போர் அடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் கிராமத்து மின்னலாய் பாடல்கள் ஒலிக்க அந்த பாடல் வரிகளை முன்னிறுத்தி வைத்து இசையை கொஞ்சம் அழுத்தி வைத்து அழகாய் இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அந்த திருவிழா பாட்டில் தனுஷ் ஆடுகின்ற அந்த ஆட்டத்திற்கும் பொருத்தமாக இசையை அமைத்திருப்பது சிறப்பு. தனுஷ், நித்யா காதல் காட்சியை மிக அழகாக மாண்டேஜ் காட்சிகளாக தொகுத்து அளித்ததுகூட மிகவும் சிறப்புதான்.
எடிட்டர் பிரசன்னா படமாக்கி கொடுத்த காட்சிகளை எந்த இடத்திலும் சோர்வு வந்துவிடாத அளவுக்கு கவனத்துடன் கச்சிதமாக நறுக்கித் தந்திருக்கிறார்.
முதலில் இப்படி ஒரு கதை, திரைக்கதையை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.
அப்பாவின் தொழிலை மகனும் பின்பற்றுகிறான் என்கின்ற குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இது அவருடைய தந்தைக்கு அவர் செய்கின்ற நன்றியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இட்லி கடை என்பதும் ஒரு தொழில்தானே. அதுவும் சாப்பிட இடமில்லாமல் வந்து சாப்பிடும் அவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகச் சிறந்த தொழில். அந்த தொழிலில் குடிசை வீடாக இருந்தாலென்ன… பைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தால் என்ன..
அதை ஒரு தொழிலாக நாம் பார்க்கும் பொழுது நமக்குள் அந்த குல தொழில் என்கின்ற பேச்சே வராது. இத்தனைக்கும் தனுஷ் பி.இ. இன்ஜினியரிங்கூட படித்துவிட்டு திரும்பி வந்து அப்பா தொழிலை நான் செய்கிறேன் என்று சொன்னால்கூட ஒரு சந்தேகக் கல்வியை கேட்கலாம். ஆனால் இதில் தனுஷ் கேட்டரிங் படித்துவிட்டு அதே தொழிலை சின்னதாக ஆரம்பிக்கிறோம் என்று சிவநேசன் இட்லி கடையை திரும்பவும் நடத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதில் குல தொழில் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.
அப்படியே வந்தாலும் அது அவருடைய பார்வையில் அவருக்கு சிறப்பாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் மற்றவர்களுக்கு இதேபோல் அப்பா தொழிலைத்தான் மகன்கள் செய்ய வேண்டும் என்ற விமர்சனத்தையோ அல்லது அறிவுறுத்தலையோ எந்த இடத்திலும் தனுஷ் சொல்லவில்லை என்பதால் இந்தப் படத்தில் அவரை நோக்கி வீசப்படும் இந்தக் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது.
இரண்டாவது பாராட்டாக தனுஷ் எழுதியிருக்கும் அகிம்சைதான் சிறந்த ஆயுதம் என்று அவருடைய அப்பா சொன்னதை அப்படியே தார்மீக மந்திரமாக எடுத்துக் கொண்டு அருண் விஜய்க்கு அவர் பாடம் புகட்டுகின்ற அந்த திரைக்கதை அட்டகாசம்.
இப்போதைய தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அறிவுறுத்தலை எந்த ஒரு கதாநாயகன் நடிகரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தனுஷ் தன்னுடைய திரைக்கதையில் தனக்காக எழுதியிருந்தாலும் அனைவருக்குமே பிடித்து போகிறது. இந்த அகிம்சையை வைத்து தனுஷ் இறுதியாக அருண் விஜய்யை நல்லவராக மாற்றுவது என்பது சினிமாட்டிக்குதான் என்றாலும் ஏற்கக் கூடியதுதான்.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மனிதனின் ஆசை அடங்காது. நிம்மதி என்கின்ற ஒரு வார்த்தையை தேடித்தான் அனைத்து மனிதர்களும் ஓடுகிறார்கள். ஆனால் பணம் சம்பாதித்து அந்தப் பணத்தை சேமித்து வைத்து அமைதியாக அமரும்போது வேறொரு ரூபத்தில் வேறு ஒரு பக்கம் இருந்து இன்னொரு பிரச்சனைகள் வந்து அவர்களை வாட்டியெடுக்கும்.இத்தனை வருடம் உழைத்தது வீணாகி போய்விட்டது என்று அவர்கள் அப்போதுதான் வருத்தப்படுவார்கள்.
ஆனால் இங்கே முருகன் என்ற இந்த தனுஷ் தன்னுடைய அப்பாவின் கடையையும் கைப்பற்றி தன் மீது அதீத காதல் வைத்திருக்கும் பெண்ணையும் கைப்பிடித்து அமைதியாக வாழ முயல்கிறார். அந்த அமைதியான வாழ்க்கைக்கு நாம் நிச்சயமாக பாராட்டுக்களைத்தான் தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில் இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
RATING : 4 / 5









