ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கும் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். சாபு ஜோஸப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.
திவ்யா அண்ட் ஆனந்த் என்று நாயகி-நாயகனின் பெயருக்குப் பொருத்தமாக படத்துக்கு டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.
டி.என்.ஏ. என்பது ஒரு மனிதரின் மரபணுவை குறிக்கும். ஒருவரின் அப்பா அம்மா யார் என்பதை இந்த டி.என்.ஏ. மூலமாக சொல்லிவிட முடியும். படத்தின் கதைக் கரு இதைப் பற்றியதுதான் என்பதால் இந்தத் தலைப்பும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அந்த டி.என்.ஏ.-வை வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.
காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் முழு குடிகாரனாகவே மாறி இருக்கிறார் ஆனந்த் என்ற அதர்வா. அவருடைய அப்பா சேத்தன். அவருக்கு ஒரு தம்பி. நல்லதொரு குடும்பமாக இருக்கும் அந்த குடும்பத்தில், அதர்வாவின் குடிப் பழக்கம் அந்த குடும்பத்தையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
அதர்வாவை எப்படியாவது மீட்டு எடுக்க வேண்டும் என்று அந்தக் குடும்பத்தினர் நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் எடுத்த பல முயற்சிகளும் தோல்வி அடைந்திருக்கின்றன.
இன்னொரு பக்கம் நாயகி திவ்யா என்ற நிமிஷா சஜயன் ஒரு வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டவர். எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பார். அதே சமயம் சமயோசித புத்தியே இல்லாத இளம் பெண். ஒரு சிலர் அவர் அவரை பைத்தியம் என்று சொல்வதால் அவருக்கு வருகின்ற வரன்களும் தட்டிப் போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால், அவருடைய பெற்றோர்களும் கவலையில் இருக்கிறார்கள்.
ஆனந்தை ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரை ஓரளவுக்கு குடியில் இருந்து மீட்டு நல்ல மனிதராக வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அவருடைய பெற்றோர்கள். அடுத்து உடனடியாக அவருக்கு ஒரு திருமணமும் செய்து வைத்துவிட்டால், அவர் இந்தக் குடியில் இருந்த மீள்வார் என்று அவருடைய குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.
தன் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தை துவக்கும் சேர்த்தனின் கண்ணில் படுகிறார் நாயகி நிமிஷா. அவர் ஒரு மாதிரியான மனநிலை கொண்டவர் என்பது தெரியும் என்றாலும் தன் மகனும் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருக்கிறான் என்பதால் பரவாயில்லை என்று சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சேத்தன்.
திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் அதர்வாவும், நிமிஷாவும் மிகச் சிறந்த தம்பதிகளாக ஒருவருக்கொருவர் புரிதல் உள்ள தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குழந்தையும் பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தை பிறந்த 20 நிமிடத்தில் அந்த குழந்தை தன் குழந்தை இல்லை என்ற நிமிஷா சாதிக்கிறார். ஆனால், அது அவருடைய குழந்தைதான் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்கிறது.
தன் மனைவி சற்று மனநிலை பிறழ்ந்தவர் என்றாலும் அவருடைய இந்த கூற்றில் உண்மை இருப்பதாக அதர்வாவும் உறுதியாக நம்புகிறார். இதை தொடர்ந்து தானே தனிப்பட்ட முறையில் குழந்தை மாறிவிட்டது என்று சட்ட ரீதியான போராட்டத்தை கையில் எடுக்கிறார் அதர்வா.
இந்தப் போராட்டத்தில் அவர் ஜெயித்தாரா… இல்லையா… அதர்வாவின் உண்மையான குழந்தை இப்போது யாரிடம் உள்ளது… குழந்தை எப்படி மாறியது… இதன் பின்னாடியில் யார் யார் இருக்கிறார்கள்.. என்பதெல்லாம் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர், கலந்த திரைக்கதை.
இந்தப் படத்தின் நாயகன் என்று பார்த்தால் நிச்சயமாக நிமிஷாவைத்தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் நம்மை கவர்ந்து இழுக்கிறார்.
தனக்கு இருப்பது ஒரு நோய் என்பதையே மனதில் கொள்ளாமல் படபடவென பேசும் அந்த நேரத்தில், இப்படி ஒரு பெண் வீட்டில் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
அவருக்கு வருகின்ற வரன்கள் எல்லாம் தட்டிப் போகும்போது அவர் படும் வருத்தம் நிச்சயம் பார்ப்பவர்களை மனம் குலைய வைத்துவிட்டது. அதேபோல் கல்யாண மண்டபத்தில் அவருடைய திருமண நின்று விடுமோ என்ற ஒரு அச்சத்தை பார்வையாளர்கள் மத்தியில் திணித்து, இல்லை.. நிச்சயம் திருமண நடக்கும்.. என்று அதர்வா சொன்னவுடன் நிஷாவைவிட சந்தோஷப்பட்டவர்கள் படம் பார்க்கும் ரசிகர்கள்தான்.
தன் குழந்தை இல்லை என்று நிமிஷா அடித்துச் சொல்கின்ற அந்த இடத்திலிருந்து அவருடைய விஸ்வரூபம் நடிப்பு தலை தூக்கிவிட்டது. ஒரு இடத்தில் வீட்டில் உருளைக்கிழங்கினை நறுக்கிக் கொண்டு தன்னுடைய கோபத்தை காட்டுகின்ற இடத்திலும், அடுத்த நிமிடம் எரிமலையாய் வெடிக்கின்ற அந்த ஒரு கணமும் நிமிஷா என்ற நடிப்பு பிசாசை நாம் தரிசிக்கலாம்.
அதர்வாவுக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு வெற்றி படம்தான். இத்தனை நாட்களாக அவருக்குள் இருந்த இன்னொரு பரிணாமத்தை இந்தப் படத்தில் வெளியில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
குடிகார கதாப்பத்திரத்தில் பார்க்க பாவமாக இருந்தாலும், எதுக்குடா.. இந்த குடி.. ஏன் இந்த காதல்.. காதலைத் தவிர வேறு வாழ்க்கை இல்லையா என்றெல்லாம் நம்மையும் புலம்ப வைப்பதுபோல நடித்திருக்கிறார்.
அவருடைய குடும்பத்தினர் அவரை குடிகாரன் என்ற ரீதியில் இன்சல்ட் செய்வதை அவர் ஏற்றுக் கொண்டாலும், குடி ஆதிக்கத்தில் அவர் அதை எதிர்கொள்ளும்விதமும், பச்சாபதமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பேசுகின்ற இடத்திலும் வாவ் என்று சொல்ல வைத்திருக்கிறார் அதர்வா.
கௌரவமான முனைவர் பட்டமெல்லாம் வாங்கி நல்லதொரு அப்பாவாக இருக்கும் சேத்தன் தன் மகனின் நிலையை கண்டு பரிதாபப்படும் அந்த காட்சிகளும், கோபப்படும், ஆத்திரப்படுகின்ற போதும் ஒரு நிஜமான அப்பாவை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
நிமிஷாவின் அம்மாவாக நடித்த விஜி சந்திரசேகரும், அதர்வாவின் அம்மாவாக நடித்தவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தாய்மையின் குணத்தை திரையில் பிரதிபலித்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில் எஸ்.எஸ்.ஐ ஆக வேலை செய்யும் பாலாஜி சக்திவேல் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர அவர் படுகின்ற பாடும், இருக்கின்ற ஆட்களை வைத்துக்கொண்டு இந்த வழக்கில் துப்புத் துலக்க அவர் முனையும் போதும் அவர் மீது நமக்கு பரிதாபமே ஏற்படுகிறது. இப்படி ஒரு அழகான நடிப்பை கொடுத்தமைக்காக பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்கள்.
மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்விகா, இரட்டையர் பெண்கள் மற்றும் அதர்வாவின் நண்பராக நடித்த ரமேஷ் திலக் அனைவருமே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பார்த்திபனின் ஒலிப்பதிவில் படம் முழுவதும் ஒரு அழகான கவிதை தொகுப்பை திரையில் பார்த்தது போல தெரிகிறது. முதல் காட்சியிலிருந்து கடைசி வரையிலும் படத்திற்கு பக்க பலமாக இருந்திருப்பது படத்தின் ஒளிப்பதிவுதான்.
ஐந்து இசையமைப்பாளர்கள் ஆளுக்கொரு பாட்டிற்கு இசையமைத்திருக்கிறார்கள். இசையை விடவும் பின்னணி இசையை அபாரம் என்று சொல்லலாம். அதில் ஒரு சில காட்சிகளை இசையை மௌனித்துவிட்டு காட்சியை நாம் கூர்ந்து கவனிக்க வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அந்த வகையில் பின்னணி இசை இந்த படத்திற்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
சாபு ஜோஸப்பின் படத் தொகுப்பு, படம் ஒரு குடும்ப பின்னணியில் நகர்கிறது என்பதை மனதில் வைத்து கதாபாத்திரங்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்டுள்ளது.
ஆடை வடிவமைப்பாளரையும், கலை இயக்குநரையும் வெகுவாக பாராட்ட வேண்டும். நிமிஷாவை சேலையில் பார்க்க அவ்வளவு ஈர்ப்பாக உள்ளது. அதேபோல் அதர்வாவும் மிக எளிமையான உடைகளையே படம் முழுவதும் பவனி வந்திருக்கிறார். கலை இயக்குநர் ஒரு அழகான வீட்டை காண்பிக்க வேண்டும் என்று மிகவும் பிரயத்தனப்பட்டு அழகுபட வீட்டை வடிவம் வைத்திருக்கிறார்.
படம் சஸ்பென்ஸாக மட்டுமில்லாமல் ஒரு குடும்ப கதையாகவும் அமைந்திருப்பதால் அதற்கேற்றப்படியான ஒரு மூடை பார்வையாளருக்கு உணர்த்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் இன்னமும் கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதை மூலமாக இந்த படத்தை நகர்த்தியிருக்கலாம். ஒரே சம்பவத்தின் அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ந்து வருவது போல மூன்று இடங்களில் இருக்கிறது. அதை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம்.
வசனம் எழுதி இருக்கும் வசனகர்த்தா அதிஷாவுக்கு நமது பாராட்டுக்கள். ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படத்தில் வசனம் மூலமாக ஒரு லீடிங் கொடுத்து அதன் பின்பு திரைக்கதையை அமைத்துக் கொண்டு போவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்தப் படத்தில் அதை கச்சிதமாக செய்திருக்கிறார் வசனகர்த்தா. பாராட்டுக்கள்.
படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக நாத்திகர், ஆத்திகர் யாராக இருந்தாலும் லேசாக கண் கலங்க வைக்கிறது. ஒரு கோவிலில் இப்படி ஒரு சம்பவத்தை வைத்து குழந்தைக்கும், அம்மாவுக்கும் இருக்கும் ஒரு ஆத்மத் தொடர்பினை அழகாகக் காட்டி ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டு வந்துவிட்டார். அந்த வகையில் இயக்குநரின் இயக்கத் திறமை நிச்சயமாக பாராட்டக் கூடியது.
படம் மொத்தமும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் அற்புதமான இயக்கத்தினாலும், ஆக்கத்தினாலும் மிக அழகாக வந்திருக்கிறது.
நிச்சயமாக இந்தப் படம் பார்த்தே தீர வேண்டிய ஒரு திரைப்படங்களில் ஒன்று!
மிஸ் பண்ணிடாதீங்க!
RATING : 4 / 5