InfoPluto Media Works நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.
இந்தப் படத்தின் நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடித்திருக்கிறார். இவர் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, யுவஸ்ரீ, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் படத் தொகுப்பைக் கையாண்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் ராம் காந்த் இந்தப் படத்தை எழுத்து, இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச் சேர்ப்பு என்று பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு படத்தினையும் இயக்கியிருக்கிறார்.
படம் நிச்சயமாக தமிழ்ச் சினிமாவிற்கு புதியதுதான். புரிந்தவர்கள் பிஸ்தா. புரியாதவர்கள் கஸ்தா கதைதான்..!
Independent Movies என்று துவக்கத்திலேயே சொல்லிவிட்டதால் நமது வழமையான சினிமாக்களை போல இதில் எதையும் தேடக் கூடாது. சினிமா ஆசையில் வித்தியாசமாக இதைச் செய்து பார்ப்போமே என்றெண்ணிதான் இந்தப் படத்தை இயக்குநர் ராம்காந்த் உருவாக்கியிருக்கிறார்.
தாறுமாறாக யோசித்து எதையாவது செய்வதை ‘கோக்கு மாக்கா யோசிச்சிருக்கான்யா’ என்று சொல்வார்கள். அந்தப் பெயரைச் சுருக்கி ‘கோகோ மாக்கோ’ என்று படத்திற்குத் தலைப்பாக வைத்திருப்பதும், அதற்காக கதை எழுதியிருப்பதும் புதுமைதான். ஆனால், திரைக்கதைதான் தலையைச் சுற்றும் அளவுக்கு இருக்கிறது.
அருண் காந்த் ஒரு இசையமைப்பாளர். தான் இசைத்த தனிப்பட்ட இசை ஆல்பத்தை வெளியிடுவதற்காக பல நிறுவனங்களை அணுகுகிறார். ஆனால் பிரபலமானவர்களின் இசையை மட்டுமே வெளியிடுவோம் என்று சொல்லி அனைத்து நிறுவனங்களும் கை விரித்துவிட்ட நிலையில் என்ன செய்வதென்று யோசித்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய இசை நிறுவனத்தை நடத்தி வரும் அஜய் ரத்னத்தின் நிறுவனத்தில் இசை ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த விழாவில் ஆல்பத்தை வெளியிட இருந்தவர் திடீரென்று வராமல் போக.. அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாராவும், வினோத் வர்மாவும் மண்டை காய்கிறார்கள்.
அவர்களுக்கு மேடையில் ஒளிபரப்ப உடனடியாக ஒரு இசை ஆல்பம் தேவைப்படுகிறது என்பதால் யோசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு அவர்களைத் தேடி வந்து இசை ஆல்பத்தைக் கொடுத்து வெளியிடச் சொன்ன அருண் காந்தின் நினைவு அவர்களுக்கு வர, அருண் காந்தை தொடர்பு கொள்கிறார்கள்.
அருண் காந்தும் தனது இசையை அவர்களுக்கு அனுப்பி வைக்க.. அதைக் கேட்டு “நல்லாயிருக்கு. இதை ஆல்பமே ரெடி செய்யலாமே?” என்கிறார்கள் சாராவும், வினோத்தும். 2 நாள் இடைவெளியில் எப்படி ஆல்பத்தை உருவாக்குவது என்று யோசிக்கிறார் அருண் காந்த்.
இந்த நேரத்தில் அவரது நெருங்கிய நண்பரான புயல் தனது காதலியுடன் மலைப் பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா போவதை அறிகிறார். அவர்களைத் தேடிப் போய் அவர்களை இந்த இசைக்கேற்றவாறு நடிக்க வைத்து அதை எடிட் செய்து கொண்டு வந்து கொடுப்பது சாத்தியமில்லை என்பதால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களது நடவடிக்கைகளை ஷூட் செய்து அதனை எடிட் செய்து அதற்கேற்றாற்போல் இசையை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார் அருண் காந்த்.
இதற்காக தனது நண்பரான புளூட்டோவையும், அவரது உதவியாளரையும் புயலுடன் சென்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் படமாக்கித் தரும்படி கேட்கிறார். இதனால் புளூட்டோவும், அவரது உதவியாளரும் புயலுடன் செல்கிறார்கள்.
கடைசியில் என்ன ஆனது.. காதலர்களை புளூட்டோ படம் பிடித்தாரா.. இசை ஆல்பத்தை உருவாக்கினார்களா.. Music Concert நடந்ததா.. என்பதுதான் திரைக்கதை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெறும் 12 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர். அதுவும் Go Pro கேமிராவில் நேரடி ஒலியுடன் பதிவு செய்திருக்கிறார். போதாக்குறைக்கு காட்சிக்கான வசனங்களை ஸ்பாட்டில் அமர்ந்தே எழுதி, அங்கேயே நடிப்புப் பயிற்சி கொடுத்து படமாக்கியிருக்கிறார்.
இதனாலேயே படம் அமெச்சூர்த்தனமாக தெரிகிறது. படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடிப்பு என்பதைப் பற்றியே இயக்குநர் காட்டவில்லை.
நடித்த நடிகர்கள் என்ன பேசினார்களோ.. என்ன நடித்தார்களோ.. அதுதான் நடிப்பு என்றாகி மொத்தத்தையும் சுருட்டியிருக்கிறார்கள்.
சாம்ஸின் சில, பல வசனங்கள் ரசிக்க வைத்தாலும் சற்று ஓவராகப் போய்விட்டது அவரது கேரக்டர் ஸ்கெட்ச். இதேபோல் நம்பகத்தன்மையே இல்லாத அளவுக்கு அஜய் ரத்னத்தின் கம்பெனியையும் காட்டியிருக்கிறார்கள். மொத்தமே 4 பேர்தான் படத்தில் தோன்றுகிறார்கள். ஆனால் மிகப் பெரிய கம்பெனி என்று வரிக்கு வரி சொல்கிறார்கள்.
திரைக்கதையை எழுதும்போது கொஞ்சம் யோசித்திருக்கலாம். பட்ஜெட் பற்றாக்குறை என்றால் அதற்கேற்றவாறு திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கலாம். டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், சந்தான பாரதி போன்ற சினிமா பிரபலங்களை வைத்து எடுக்கும்போது அவர்களால் பயன்படும்வகையில் திரைக்கதையை எழுதியிருந்தால் படத்திற்கு ஒரு கூடுதல் விளம்பரமாவது கிடைத்திருக்கும்.
பேசிய வசனத்தையே திரும்பத் திரும்ப பேசுவது.. அடுத்த வசனத்தை எதிராளி துவக்குவதற்கு கேப் விட்டுவிட்டு ஷூட் செய்திருப்பது.. சகிக்க முடியாத கேமிரா கோணங்கள்.. ஒய்.ஜி.மகேந்திரா, சந்தான பாரதி அண்ட் கோ-வின் முட்டாள்தானமான காமெடி பேச்சுக்கள்.. என்று படத்தை வாரிவிடுவதற்கு இயக்குநரே பல இடங்களில் பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகனான ராம்குமாரும், அவரது ஜோடியான தனுஷாவும் ஒரு சில காட்சிகளில் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் இயக்கமும், கேமிராவும் சொதப்பியதால் அவர்களும் சொதப்பியிருக்கிறார்கள்.
இதேபோல், அஜெய் ரத்னத்தின் கம்பெனியில் வேலை செய்யும் சாராவும், வினோத் வர்மாவின் நடிப்பும்கூட மிகுந்த கஷ்டத்திற்கிடையில் வரவழைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
Crazy Musical Romantic Road Trip Comedy என தன் படத்தின் ஜானரைக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநவர் அருண் காந்த். ஆனால் படத்தில் படம் பற்றிய craziness மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
இயக்குநர் தான் சொல்ல நினைத்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியாததாக இருக்கிறது. அதை அவர் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வெறும் 12 நாட்களில் 10 லட்சம் ரூபாய் செலவிற்குள் ஒன்றரை மணி நேரம் ஓடக் கூடிய திரைப்படத்தை எடுப்பது சுலபம்தான் என்பதைக் காட்டுவதற்கு மட்டுமே இத்திரைப்படம் எதிர்காலத்தில் பயன்படக் கூடும்.
இயக்குநர் ராம் காந்திற்கு இருக்கும் சினிமா மீதான ஆசையும், வெறியும் தெரிகிறது. அவர் சிறந்த இயக்குநர்களிடத்தில் சில படங்களில் பணியாற்றி, இயக்குதல் என்னும் துறையைக் கற்றுக் கொண்டு அடுத்தடுத்த படங்களை இயக்கினால் தமிழ்ச் சினிமா துறைக்கு நல்லதாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த ‘கோகோ மாக்கோ’ நம்மையும் ‘கோக்கு மாக்கா’ மாத்திருச்சு.