full screen background image

பெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..!

பெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..!

வரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவிருக்கும் பெப்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் இதுவரையிலும் இல்லாதவரையிலும் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் எப்போதும் இல்லாதவகையில் இந்த முறை பெப்சி தேர்தலில் ‘வைட்டமின்-ப’ இறக்கப்பட்டிருப்பதுதான்.

நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் வாக்களிக்க இருக்கும் 66 உறுப்பினர்களுக்காக கரன்ஸி இறைத்துவிடப்படுகிறதாம்.

இது அத்தனையும் பெப்சி அமைப்பின் தலைவர் பதவிக்காக இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் போட்டியிடும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.செல்வமணி கடந்த 2016-17-ம் ஆண்டு நடந்த  பெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் வந்தது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான கலைப்புலி தாணு ஆர்.கே.செல்வமணியின் நெருங்கிய நண்பர். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்றதும், செல்வமணி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அவருடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

vishal-r.k.selvamani

எப்படியாவது விஷாலை மடக்க வேண்டும், முடக்க வேண்டும்.. என்றெண்ணிய எதிர் தரப்பு தயாரிப்பாளர்களால் விஷாலை எந்தவிதத்திலும் தோற்கடிக்க இயலவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவமுள்ள விஷால், நம் கண்ணில் தவறிழைக்காமல் தப்புகிறாரே.. இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு எதிர்த் தரப்பினர் விசாரிக்க, சில விஷயங்களில் விஷாலுக்கு ஆலோசகராய் இருக்கும் பெப்சியின் தலைவரான இயக்குநர் செல்வமணியின் புத்திசாலித்தனம் இருப்பது தெரிந்தது.

நேற்றுவரை நம்மோடு இருந்த செல்வமணி இன்று விஷால் பக்கமா என்று எதிர் தரப்பு தயாரிப்பாளர்கள் கோபம் கொண்டார்கள். செல்வமணியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொழிலாளர்கள் சம்பள உயர்வு ஒப்பந்த சீர்திருத்தம், தொழிலாளர்களுக்கென சொந்தமான ஸ்டுடியோ கட்டுவது, அரசிடம் ஐந்து கோடி ரூபாய் கேட்டுப் பெற்று மேலும் ஒரு ஸ்டுடியோ கட்ட நினைத்தது, பையனூர் இடத்தில் தொழிலாளர்களுக்கென அடுக்கு மாடி வீடுகள் கட்ட திட்டம் என்று தனது பணியை சிறப்பாகச் செய்து வந்ததால் அவரையும், அவரது பணியையும் யாராலும் குற்றம் சொல்ல முடியவில்லை.

அதே சமயம் தயாரிப்பாளர்களுக்கு தலைவலி தந்து கொண்டிருந்த டெக்னீஷியன் யூனியனை பல முறை கண்டித்தும் கேளாததால், தைரியமாக பெப்ஸியை விட்டு நீக்கினார் செல்வமணி. இது மிகவும் போல்டான முடிவு என்று செல்வமணியின் எதிர்ப்பாளர்களாலேயே பாராட்டப்பட்டது.

திடீரென்று விஷால் சினிமா ஸ்டிரைக்கை அறிவித்தபோது அதனை முதன்முதலில் கண்டித்து அறிக்கை விட்டது செல்வமணிதான். அதேபோல் அந்த ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈகோ பார்க்காமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றைய சங்கங்கள், அரசுத் தரப்பு என்று மூன்று பேருக்கும் இடையில் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காணும்படி வற்புறுத்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முத்தாய்ப்பாக இருந்ததும் செல்வமணிதான்.

vikraman-r.k.selvamani

இலாபமே இன்றி சினிமா எடுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காக்க வேண்டும். சினிமாவே வாழ்க்கை அதை தவிர வேறு எதுவும் தெரியாது என்ற தன் சக தொழிலாளர்களையும் காக்க வேண்டுமென இப்படி இரட்டைக் குதிரைப் பூட்டிய வண்டியை தைரியமாய் ஓட்டினார் செல்வமணி.

இதெல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் சாதகமாக அமைந்து அதிலும் குறிப்பாக விஷாலின் தலைமைக்கு பாராட்டுக்குரியதாகி அமைந்துவிட சில தயாரிப்பாளர்களின் கோபம் இப்போது செல்வமணி மீது பாய்ந்திருக்கிறது.

அவர்களுடைய கோபத்தை ஆற்றுவதைப் போல இப்போது பெப்ஸி தேர்தல் வந்திருக்கிறது. இப்போது எப்படியாவது செல்வமணியை தோற்கடிக்க வேண்டும் என ஒரு டீம் மும்முரமாக பணியாற்றி வருகிறார்களாம்.

எப்போதும் நண்பனே எளிதில் எதிரியாவான் என்கிற விதிப்படி இந்த எதிர்ப்புக் குழுவுக்குத் தலைவராக செல்வமணியின் நெருங்கிய நண்பரும், பெப்ஸியின் முன்னாள் தலைவருமான சிவாதான் தலைமை தாங்குவதாக செல்வமணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

fefsi union leader r.k.selvamani

தன் நண்பனே தன் பதவிக்கு வந்தது பிடிக்காமலிருந்த சிவா, செல்வமணியை எதிர்த்து போட்டியிட எளிதாக ஒப்புக் கொண்டார். ஆனால் எந்த யூனியன் சார்பாக செல்வமணியை எதிர்த்து போட்டியிடுவது என தெரியவில்லை. சிவா மூன்று சங்கங்களில் உறுப்பினர். ஆனால் எதிலுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியில்லாதவராக இருந்தார்.

செல்வமணிக்கு விஷால் ஆதரவு என்றால் விஷாலின் எதிரிகளை ஒன்று சேர்த்தால்தானே ஆச்சு என்கிற கணக்குப்படி டப்பிங் யூனியனின் தலைவரான ராதாரவி முன் வந்து கை கொடுக்க, டப்பிங் யூனியனில் ஒரே நாளில் உறுப்பினரானார் சிவா.

பெப்ஸி தேர்தலில் தங்களது சங்கத்தின் சார்பாக சிவா நிற்பதாகச் சொல்லி டப்பிங் யூனியன் சார்பாக கடிதமும் தந்தார்கள். ஆனால், தேர்தல் அதிகாரியான முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியன் சிவாவின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்.

ஆனாலும் இது இப்படியாகும் என்று எதிர்பார்த்துதான் காஸ்ட்யூமர் சங்கத்தின் மூர்த்தி என்பவரை தலைவர் பதவிக்கு நிறுத்தியிருக்கிறது செல்வமணியின் எதிர்த் தரப்பு. இதிலும் சிவாவின் கைங்கர்யம்தான் அதிகம் என்கிறார்கள் செல்வமணியின் ஆதரவாளர்கள்.

r.k.selvamani

இப்போது தான் போட்டியிட முடியாத சூழலிலும் செல்வமணிக்கு எதிராக அனைத்து விஷால் எதிர்ப்பாளர்களையும் மறைமுகமாக ஒன்று சேர்ந்துள்ளாராம் சிவா. இதற்காக இப்போது முதல்முறையாக ‘வைட்டமின்-ப’-வை இறக்குமதி செய்து வருகிறார்களாம்.

தயாரிப்பாளர்களின் கைப்பாவையான செல்வமணியால் இனிமேல் நமக்கு சம்பள உயர்வு கிடைக்காது. எந்த சங்கமும் டெக்னீஷியன் யூனியன் போல தூக்கி எறியப்படலாம். ஆகவே மூர்த்திக்கு வாக்களியுங்கள் என ஒவ்வொரு வாக்காளரிடமும் பேசி வருகிறார்கள். கூடவே பண பேரமும் நடப்பதாக புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் செல்வமணி ஆதரவு வாக்காளர்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பெப்சி தேர்தலில் பணம் விளையாடுவது தமிழ்த் திரையுலகத்திற்கே ஆபத்து என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

செல்வமணியின் ஆதரவாளர்கள் இதைப் பார்த்து உச்சுக் கொட்டுவதற்கு இன்னொரு காரணம், செல்வமணியின் குணம் அவர்களுக்குத் தெரிந்ததினால்தான்.

சும்மாவே பர்ஸை திறக்கவே  மாட்டாராம் செல்வமணி. “செல்வமணியிடம் 500 ரூபாய் கடனாக வாங்கிக் காட்டினால் 5 லட்சம் ரூபாய் பரிசு என்றெல்லாம் இயக்குநர்கள் சங்கத்தில் ஜோக்கடித்த காலமெல்லாம் உண்டு” என்று சொல்லி சிரிக்கிறார்கள். ‘இதில் எங்கேயிருந்து அவர் காசைக் கொட்டுவது..? இது நடக்கிற காரியமா..?’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

“அதெல்லாம் வேண்டாம். ஜெயிச்சா ஜெயிப்போம். இல்லாட்டி தோற்போம். பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றால் அது வெற்றியல்ல. விலைக்கு வாங்கியது போலாகிவிடும். தோற்றாலும் அது என்னுடைய தோல்வியில்லை. கலங்க வேண்டாம்.. நான் செய்த நல்ல காரியங்கள் என்னைக் காப்பாற்றும்…” என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் ‘லெக்சர்’ அடித்து வாக்கு வேட்டையை நடத்தி வருகிறார் செல்வமணி..” என்று வருத்தத்துடன் சொல்லி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஆக மொத்தம், பணம் படைத்தவன்தான் தலைவனாவான் என்பது பெப்சி தேர்தலிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பாவம் பெப்சி அமைப்பின் தொழிலாளர்கள்..!

Our Score