தியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி

தியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி

InfoPluto Media Works நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கோகோ மாக்கோ’.

இந்தப் படத்தின் நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர்  ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம்,  சந்தானபாரதி, வினோத்வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. 

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் படத் தொகுப்பைக் கையாண்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் ராம்காந்த் இந்தப் படத்தை எழுத்து, இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச் சேர்ப்பு என்று பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு படத்தினையும் இயக்கியிருக்கிறார்.

Dir Arunkanth (1)

படம் பற்றிப் பேசிய இயக்குநர் அருண்காந்த், “இந்த ‘கோகோ மாக்கோ’ திரைப்படம் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல்,  நகைச்சுவை மற்றும் புதிய இசையனுபவத்துடன் இருக்கும். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும்வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு மூன்று முறையாவது ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். 12 நாட்களில் முழுப் படத்தை முடித்திருந்தாலும்,  பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் படத்தில் இருக்கிறது..” என்கிறார். 

இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேட்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது.

புதுமை இயக்குநர் கே.பாக்யராஜ் நிகழ்வுக்கு தலைமையேற்று படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.

IMG_5582

முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட ‘கோகோ மாக்கோ’வை விநியோகஸ்தர்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ திரையிட முன் வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன் பதிவுக்காக பிரத்யேகமாக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில்  டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்.

இத்திரைப்படத்தை 2019 பிப்ரவரி 14-ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அன்றைய நாளில் படம் வெளியாகவில்லை என்றால், முழுப் பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன் பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படக் குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், “ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவானபோதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன்.  நானும் யாரையுமே தெரியாமல்தான் சென்னைக்கு வந்தேன்.

IMG_5587

நீங்களாவது  திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..இன்று யூடியூபிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்துவிடலாம்.

வணிக ரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன் பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.

Our Score