பி.வி.பி. சினிமா நிறுவனத்தினர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிக்க.. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் கிருஷ்ண வம்சி ஒரு படத்தினை இயக்கவுள்ளார். ஏராளாமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக் குழுவினர் ஐரோப்பா செல்ல உள்ளனராம்.
இது குறித்து பேசிய இயக்குநர் கிருஷ்ண வம்சி, “தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலைநகரமான பெல்கிரேட் நகரத்தில் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும், லயோன் நகரத்திலும் படமாக்கப்படவுள்ளது.
பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விடும்.
அந்த நாடுகளின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத் படம் பிடிக்க உள்ளார். அங்கு படமாக்கப்படும் சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாக இருக்கும்.
கோபி சுந்தரின் உன்னதமான இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும். பாடல் காட்சிகளும் இங்கேயே படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்னமும் பெயரிடப்படாத இந்த படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகவுள்ளது…” என்றார்.