24 AM ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர். டி. ராஜா தயாரிக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இயக்குநர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புதிய இயக்குநரான பாக்கியராஜ் கண்ணன், காதலும் நகைசுவையும் கலந்த இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
அவரது கதைக்கு உற்ற துணையாக ஒளிப்பதிவில் P. C.ஸ்ரீராம், இசைக்கு அனிருத், அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜ், பட தொகுப்புக்கு ரூபன், ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட் ஆகியோர் பணியாற்ற இருக்கின்றனர். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம், மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்களில் இணை தயாரிப்பாளராக பல ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இப்போதுதான் முதல் முறையாக தனது இனிய நண்பர் சிவகார்த்திகேயனின் உதவியோடு தயாரிப்புத் தொழிலில் இறங்கியுள்ளார்.
படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “ஒரு படத்தின் உன்னதமான தொழில் நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய புகழ் பெற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக, மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை.
என்னுடைய நிறுவனமான 24 AM STUDIOS தரமான படங்களையும், உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் தொடர்ந்து ஆதரித்து ஊக்குவிக்கும்…” என்று உறுதியுடன் கூறினார்.