காவிரி விவகாரத்தில் ரஜினியும், கமலும் அரசியல் செய்கிறார்கள் – கன்னட நடிகர் ஆனந்த் நாக் குற்றச்சாட்டு..!

காவிரி விவகாரத்தில் ரஜினியும், கமலும் அரசியல் செய்கிறார்கள் – கன்னட நடிகர் ஆனந்த் நாக் குற்றச்சாட்டு..!

ரஜினியும், கமலும் காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக பிரபல மூத்த கன்னட நடிகரான ஆனந்த் நாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கன்னடத்தின் மூத்த நடிகர் ஆனந்த் நாக். 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஆனந்த் நாக், காவிரி நீர் பிரச்சினை குறித்து பெங்களூரில் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் காவிரி நீர் விவகாரத்தில் வேறுவேறான கொள்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளை போலவே நடந்து கொள்கிறார்கள்….” என்று சொல்லியிருக்கிறார்.

அவர் இது தொடர்பாக மேலும் பேசும்போது, “நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் மிகவும் பண்பானவர்கள். கன்னட மக்களுக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி மற்றும் கமலின் இந்தப் பேச்சுக்கள், செய்கைகள் எனக்கு வருத்தம் தருகின்றன. ரஜினி, கமல் போன்றவர்கள் மற்றவர்களை போல காவிரி விவகாரத்தை அணுகக் கூடாது. இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் அதிகாரத்தை அடைய அவர்கள் நினைக்கக் கூடாது.

இதே நேரம் தமிழ்ச் சினிமாவின் இளைய நடிகரான சிம்பு காவிரி விவகாரம் குறித்து தெரிவித்த கருத்து ஏற்புடையதே. கர்நாடகா தமிழக மக்கள் விரும்பும் அளவுக்கு நீரை நிச்சயமாக கொடுக்கும் என்று சிம்பு கூறியிருக்கிறார். இந்த அளவுக்கான பக்குவப்பட்ட கருத்துக்களை ரஜினியும், கமலும் ஏன் சொல்லவில்லை..?” என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார் ஆனந்த் நாக்.

“கர்நாடகாவில் இன்னும் ஒரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்கவிருக்கிறது. அதுவரையிலும் காத்திருக்காமல் எரிகிற தீயில் எண்ணைய்யை ஊற்றும்விதமாக ரஜினியும், கமலும் மாறி, மாறி கருத்து சொல்வது ஏன்..?” என்றும் கேட்டிருக்கிறார் ஆனந்த் நாக்.

அவர் மேலும் பேசுகையில், “நைல் நதி பங்கிடூ குறித்துக்கூட ஆப்பிரிக்காவில் பல பிரச்சினைகள் இருந்தன. அவை அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் காவிரி பிரச்சினை 138 வருட கால பிரச்சினை. இதனை தமிழகத்து அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் நலனுக்காக ஒரு முடிவுக்கு கொண்டு வர விடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதன் முடிவுக்காகக் காத்திருப்பது..?” என்றும் கேட்டிருக்கிறார் நடிகர் ஆனந்த் நாக்.

Our Score