இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ தமிழ்த் திரைப்படம் 19-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.
‘கனவு வாரியம்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தை வெளிநாடு வாழ் தமிழரான இயக்குநர் அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இயக்குநர் அருண் சிதம்பரம், தமிழகத்தில் ‘ஆணழகன்’ பட்டத்தை பல முறை வென்ற சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ.சிதம்பரம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகராக இருந்தவர்.
இயக்குநர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு சிகாகோவில் புகழ்பெற்ற வங்கியான ‘ஜே.பி.மார்கன் சேஸில்’ பணி புரிந்தார்.
சினிமாவின் மீதுள்ள இலட்சியத்தால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையை விட்டு விட்டு சென்னைக்கு வந்து ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.
இவரும், கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் இந்தக் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழக கிராமங்களில் நிலவிவரும் மின் வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு இந்த ‘கனவு வாரியம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ‘கனவு வாரியம்’ திரைப்படம் இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதுகளில் இரண்டை இந்தப் படம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
74 நாடுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொண்ட போட்டியில்தான் ‘கனவு வாரியம்’ திரைப்படமும் போட்டியிட்டு 2 ரெமி விருதுகளை வென்றுள்ளது. இரண்டு ரெமி விருதுகளை வெல்லும் முதல் தமிழ் இயக்குனர் அருண் சிதம்பரம் மட்டுமே.
இதற்கு முன் ‘ரெமி’ விருதை, உலகின் புகழ் பெற்ற இயக்குநர்களான ‘ஜுராஸிக் பார்க்’ எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ‘கிளேடியேட்டர்’ எடுத்த ரிட்லி ஸ்காட், ‘காட்பாதர்’ எடுத்த போர்ட் கப்பல்லோ, ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லுகாஸ், ‘லைப் ஆப் பை’ எடுத்த ஆங் லீ உள்ளிட்டோர் வென்றுள்ளனர்.
சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’ விருதையும், இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் குழந்தைகளுக்கான சிறந்த பாடல் பிரிவில், ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருதையும், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49-வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் வென்றுள்ளது.
மேலும் 49-வது வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் (AUDIENCE FAVORITE MOVIE) ‘கனவு வாரியம்’ திரைப்படம் தேர்வானது.
இதேபோல் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெற்ற ‘17 வது பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’விலும், ஏப்ரல் 23-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட விழா’விலும், பிப்ரவரி 9 முதல் 13 வரை நடைபெற்ற மத்திய அரசால் நடத்தப்படும் ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’விலும் (National Science Film Festival) ‘கனவு வாரியம்’ திரைப்படம் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது ‘கனவு வாரியம்’ திரைப்படம், வரும் ஜூன் 11-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெறும் 19-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இது குறித்து, ‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், “ஹூஸ்டனில் வசிக்கும் தமிழர்களும், இந்தியர்களும், 74 நாடுகளில் இருந்து திரைப்பட விழாவிற்கு திரண்டு வந்த பல்வேறு இயக்குனர்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த சினிமா ஆர்வலர்களும் ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பை பரிசளித்தனர்.
திரைப்படத்தை பார்த்த அனைவரும் ‘இது கொண்டாடப்பட வேண்டிய படம். இது சிரிக்க வைக்கிறது. பார்ப்பவர் நெஞ்சஙளில் புது நம்பிக்கையை விதைக்கிறது. குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்…’ என்று ஒருமித்தக் கருத்தை கூறினர்.
படம் பார்த்த பல்வேறு நாட்டினரும், குழந்தைகளும் படம் குறித்த தங்களின் கருத்துக்களை வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர். இந்தத் திரைப்படம் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் தூண்டும் படமாக இருக்கும்.
இந்த வருடம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக ‘கனவு வாரியம்’ இருக்கும். விரைவில் திரை அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.
இயக்குநர் அருண் சிதம்பரம் பேசுகையில், “அறிமுக இயக்குநரான எனக்கு இந்த விருதுகள் பெரிய ஊக்கம் தருகின்றன. எங்கள் ஒட்டு மொத்த குழுவிற்கும் இந்த விருதுகள் புது நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறது. இதை பரிசளித்த கடவுளுக்கும், இத்திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. பொறுமை காத்த என் மனைவிக்கும், என் மகன் எழிலுக்கும் நன்றி. இந்த விருதுகள் தயாரிப்பாளர்களும், என் அம்மா பூங்கோதை சிதம்பரமும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது…” என்று கூறினார்.









