“தியேட்டர் பாத்ரூமில் எழும் விமர்சனத்தை விரும்பிய சாண்டோ சின்னப்பா தேவர்..” – கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்.!

“தியேட்டர் பாத்ரூமில் எழும் விமர்சனத்தை விரும்பிய சாண்டோ சின்னப்பா தேவர்..” – கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்.!

சமூக வலைத்தளங்களில் பலரும் எழுதி வரும் சினிமா விமர்சனங்கள் சினிமாக்களின் வசூலைப் பாதிக்கின்றன என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் எழுதுபவர்களோ அது எங்களது பிறப்புரிமை என்கிறார்கள்.

இது பற்றி ‘ஆனந்தவிகடனு’க்கு பேட்டியளித்திருக்கும் கமல்ஹாசன் அதிசயமாக இந்த கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்து பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு துணைக்கு அவர் அழைத்திருப்பது சாண்டோ எம்.ஏ.சின்னப்பா தேவரை.. அந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது.. படித்துப் பாருங்கள்..!

”விமர்சனத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேன்னு சொன்னவன் நான். ‘பண்டிதன்’னு சொல்றவனுக்கு ‘பாண்டித்யம்’ இருக்கான்னு  முதலில் பார்க்கணும். ஆனா, இன்னைக்கு உலகத்துல விமர்சனத்தை ஒண்ணுமே பண்ண முடியாது; தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது.

முன்னாடி இடைவேளை சமயம் தியேட்டர் பாத்ரூமில் அப்படியான விமர்சனம் கிளம்பும்.  அதைக் காது கொடுத்துக் கேட்கவே முடியாது. ஆனா, அதைக் கேட்டு வாழ்ந்தவரும் ஒருத்தர் இருக்காரு. அவர் சாண்டோ சின்னப்பா தேவர்.

அவர் கம்பெனியில் நாங்க வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, சினிமா பார்க்க டிக்கெட் எடுத்து தருவார். ஒரே நிபந்தனை… பட இடைவேளை சமயத்திலும், படம் முடிஞ்ச பிறகும் பாத்ரூமில் என்ன சொல்லித் திட்டுறாங்கனு அட்சரம் பிசகாம அவர்கிட்ட சொல்லணும். அதுக்குத் தனியா காசு தருவார்.

ஒரு படம். பேர் வேணாம். அந்தப் படம் பார்த்துட்டு அவர்கிட்ட ‘ரொம்பத் திட்டுறாங்க அய்யா’னு தயங்கித் தயங்கிச்  சொன்னேன். ‘என்ன திட்டுறாங்க?’னு கேட்டார். ‘கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க’னு சொன்னேன். ‘அதான்டா… யாரைத் திட்டுறாங்க?’னு கேட்டார். ‘வீட்ல உள்ளவங்களைத் திட்டுறாங்க’ன்னு மென்னு முழுங்கிச் சொன்னேன். ‘அதான்டா… அம்மாவையா, அக்காவையா?’ன்னு சிரிச்சுட்டே கேட்டார். அதையும் சொன்னேன்.

அதே படத்தை அவர் இந்தியில் ரீமேக் பண்ணி வெற்றிப் படமாகக் கொடுத்தார். ‘இங்க தப்பு பண்ணேன்டா… அதை அங்கே சரி பண்ணேன்’னு சொன்னார். அந்த பாத்ரூம் திட்டு பத்தி சொன்னப்போ, ‘எவன்டா சொன்னான்?’னு அவர் கோபப்படலை. ‘ஏன் சொன்னான்?’னு யோசிச்சார். ‘ஏதோ தப்பு செஞ்சிருக்கேன். அதை ரசிகன் அவன் பாஷையில சொல்றான்’னு யோசிச்சதுனாலதான் அவர் சாண்டோ. ‘திட்டுனவன் வீடு எங்கேடா?’னு அவர் கோபப்பட்டிருந்தா, அவர் சாதாரண சின்னப்பா தேவராத்தான் இருந்திருப்பார்.

அப்போ கழிப்பறையில கேட்ட திட்டுகள் எல்லாம் இப்போ நெட்ல கேட்குது. நாமதான் நெருப்புக் கோழி மாதிரி தலையை மண்ணுக்குள்ள புதைச்சுட்டு உக்காந்திருக்கோம். ஆள் அனுப்பி பாத்ரூமில் உளவு பார்க்கிற வேலைகூட இல்லை. நேரடியாவே தெரிஞ்சுக்கலாம். அதைச் சாதகமாத்தானே பார்க்கணும்.

நடிகர் திலகம் ஒருபோதும் தன்னை நடிகர் திலகமா நினைச்சுக்கிட்டதே இல்லை. தான் ஒரு நல்ல நடிகன்னு மட்டும்தான் நினைச்சுட்டு இருந்தார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் ‘என்னை ஒப்புக்கிட்டாங்களா, இயக்குநரா ஏத்துகிட்டாங்களா?’ன்னு பதற்றமாவே இருப்பார். போற-வர்ற ஆளுங்ககிட்ட கேட்டுட்டே இருப்பார். ‘ஆனந்த விகடன்’ விமர்சனத்துல என்ன எழுதுவாங்கனு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பார். புரண்டு புரண்டு படுத்திட்டு இருப்பார். ஒரு படத்துக்கு அவர் எதிர்பார்த்த விமர்சனம் வரலை. உடம்பே முடியாமப் போயிருச்சு. ‘ஏன் சார் இவ்வளவு கவலைப்படுறீங்க?’னு கேட்டா… ஏத்துக்கவே மாட்டார். அவ்வளவு கவலைப்படுவார்.  

எனக்கு விமர்சனம் பிடிக்காதுதான். ஆனா, அதை நான் ஒதுக்கிட மாட்டேன். அடுத்த அப்ளாஸுக்கான அட்வான்ஸ்னு நினைச்சுப்பேன். அவனைப் பேச விடாம தடுக்குறதால நாம ஜெயிச்சுக் காட்ட முடியாது. அதே வாயால நம்மைப் பாராட்ட வெச்சுட்டா, அதைவிட பெருமை வேற என்ன இருக்க முடியும்?”

இதுவரைக்குமாச்சும் எங்களைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி..!

Our Score