full screen background image

திருடன் போலீஸ் – சினிமா விமர்சனம்

திருடன் போலீஸ் – சினிமா விமர்சனம்

இந்த வாரம் வந்த படங்களிலேயே அதிகமாக பேசப்படும், பாராட்டப்படும் படம் இதுவே. திருடன்-போலீஸ் கதைகளில் ஒரு புதுமையான காமெடியை புகுத்தி வெற்றிப் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் ராஜூ.

நாயகன் தினேஷின் அப்பாவான ஏட்டு ராஜேஷுக்கு தன் மகனை எப்படியாவது காவல்துறையில் சேர்த்துவிட வேண்டுமென்று ஆசை. தன்னைவிட வயது குறைந்தவர்களுக்கெல்லாம் சல்யூட் அடித்து அடித்து ஓய்ந்து போயிருக்கும் தனது மனதை தனது மகனுக்கு மற்றவர்கள் சல்யூட் அடிப்பதை பார்த்து தேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் மகன் தினேஷோ அப்பாவின் கல்லூரி படிப்பில் நிறைய அரியர்ஸ் பேப்பர்களை வைத்துக் கொண்டு தேர்ச்சி பெற வேண்டுமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார். அப்பாவின் சட்டைப் பையில் பணத்தைத் திருடிவிட்டு ஊர் சுற்றுவதுதான் இப்போதைய ஒரே வேலை..

அதே குவார்ட்டர்ஸில் இருக்கும் துணை கமிஷனரின் மகனான நிதின் சத்யாவுக்கும் தினேஷுக்கும் இடையில் வாய்க்கால், வரப்பு சண்டையெல்லாம் இருக்கிறது. குவார்ட்டர்ஸுக்கு புதிதாக குடி வந்த இன்ஸ்பெக்டரின் மகளான ஹீரோயின் ஐஸ்வர்யாவின் முன்பாக நிதின் சத்யா தினேஷை அவமானப்படுத்திவிடுகிறார்.

இதனால் கோபம் கொண்ட தினேஷ், நிதின் சத்யாவை ஓட, ஓட விரட்டியடிக்கிறார். செய்தியறிந்து துணை கமிஷனர் முத்துராமன் ராஜேஷ் மீது ஆத்திரப்படுகிறார். இந்த நேரத்தில் லோக்கல் ரவுடியான மாணிக்கத்தை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும்படி கமிஷனர் நரேன் கிண்டி துணை கமிஷனர் முத்துராமனுக்கு உத்தரவிடுகிறார்.

இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் முத்துராமன், மாணிக்கத்தை வைத்து ராஜேஷை கொலை செய்கிறார். மாணிக்கத்தைத் தப்பிப் போக வைக்கிறார். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடுகிறது. இறப்புக்கு வரும் கமிஷனர் ராஜேஷ் மீது பாசம் கொண்டு தினேஷுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்.

இப்போது கான்ஸ்டபிளான தினேஷுக்கு முதலில் அந்த போலீஸ் வேலை பிடிக்கவில்லை. பின்பு மெல்ல, மெல்ல அந்த வேலையில் ஒன்றிப் போய்.. தனது அப்பாவும் இதே வேலையில் இருந்தபோது எத்தனை, எத்தனை அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். எப்படி கஷ்டத்துக்கிடையில் தன்னை படிக்க வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து தனது அப்பாவின் மீது பாசத்துக்குரியவனாகிறான்.

அந்த நேரத்தில் தனது அப்பாவை கொன்றது மாணிக்கம்தான் என்றும், அவன் சிறையில் இருப்பதையும் தெரிந்து கொள்ளும் தினேஷ்.. அவர்களை பழி வாங்க முடிவெடுக்கிறான். அதனை எப்படி செய்து முடிக்கிறான் என்பதைத்தான் நகைச்சுவையோடு இழைந்து சொல்லியிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு சீரியஸ் கதையை காமெடியை வைத்து நகர்த்த வேண்டுமென்றால் அதற்கெல்லாம தனி திறமை வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜுக்கு அது வாய்த்திருக்கிறது.. கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

போலீஸ் வேடம் கிடைப்பது இக்கால ஹீரோக்களுக்கு சுலபமானதில்லை.. ஆனால் காமெடி போலீஸ்தானே என்பதால் சட்டென இவருக்குக் கிடைத்துவிட்டது போலும்.. தினேஷிற்கு இது மூன்றாவது படம் என்றாலும் நடிப்பில் படத்துக்குப் படம் தேறித்தான் வருகிறார். வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக காட்டும் அட்டூழியத்தைவிட அப்பாவை நினைத்து உருகும் தினேஷை அனைவருக்குமே பிடிக்கும்..!

அடிக்கடி கண்ணைச் சிமிட்டி தனது டென்ஷனை குறைக்கும்படியான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சை இவர் மீது திணித்திருக்கிறார். ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. நரேனிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கும்போது பேசும் பேச்சும், காட்டியிருக்கும் நடிப்பும் பலே..!

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், தலைமைக் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்கள் என்று பலருக்கும் இருக்கும் பணிச்சுமையைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு காட்சிகளின் தொகுப்புகள் கச்சிதமாக இருக்கின்றன.

இன்றைக்கும் பல்வேறு உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டிற்கு காய்கறி வாங்குவதில் இருந்து, வீட்டில் சமையல் வேலை செய்வதுவரையிலும் கான்ஸ்டபிள்கள்தான் செய்து வருகிறார்கள். இதில் ஆண், பெண் பேதமில்லை. பெண் போலீஸென்றால் சமையல். ஆண் போலீஸென்றால் காய்கறி வாங்குவது.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது.. கடைகளுக்கு போய் வருவது.. வீட்டில் எடுபிடி வேலைகளையெல்லாம் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்வார்கள். இதற்கு ஒத்து வராதவர்களுக்கு தினம்தோறும் பல ஊர்களுக்கு சென்றுவரும் வேலையைக் கொடுத்து அலற வைப்பார்கள். இதெல்லாம் போலீஸ் துறையில் கண்கூடாக நடப்பதுதான். இதுவரையிலும் இந்தக் கொடுமைகளை எந்தப் படத்திலும் இத்தனை விஸ்தாரமாகக் காட்டியதில்லை. இதில் துணிந்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை போல இதில் தனது அப்பாவை நினைத்து தினேஷ் ஒவ்வொரு முறை பேசும் வசனமும், அதற்கு உடன் இருக்கும் கான்ஸ்டபிள் பாலா காட்டும் ரியாக்ஷனும் அக்மார்க் காமெடி.. கடைசி அரை மணி நேரம் அந்த சீரியஸிலும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நான் கடவுள் ராஜேந்திரனுக்கு இதுவொரு முக்கியமான படம். வெட்டுக் குத்துகளுக்கு அஞ்சாதவர்களாக இருந்தாலும் யாரை நம்புவது என்கிற குழப்பத்திலேயே கடைசிவரையில் வருவதுதான் காமெடி.. அதிலும் பெண் வேடம் போட்டவுடன் பார்த்த மாத்திரத்திலேயே சிரிப்பை வரவழைத்துவிட்டார் ராஜேந்திரன். அவர் பேசும் வசனங்களும் மிக மிக யதார்த்தம்.. ‘உங்க அப்பா செத்ததுக்கு நீ அழுகிறியோ இல்லையோ, அவரை ஏன்டா கொன்னோம்னு நான் அழுறேன்பா’ன்னு ராஜேந்திரன் சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது.

இவரது தம்பி மரவெட்டை வேடத்தில் ஜான் விஜய். முற்றிலும் வித்தியாசமான வேடம், ஹேர்ஸ்டைல் இவருக்கு.. “உன்னைய போடச் சொல்லிட்டாண்ணே.. முடியுமாண்ணே என்னால.. அவனுக்கு நாம யாருன்னு காட்டுவோம்ண்ணே..!” என்று உமா பத்மநாபனை போட்டுத் தள்ள கத்தியை அண்ணனிடம் கொடுத்து கெத்து காட்டும் வேடம்.. நச்சுன்னு இருக்காரு ஜான் விஜய்..!

ஹீரோயினுக்கு பெரிதாக வேலையில்லை. இப்போதைய தமிழ்ச் சினிமா பார்முலாபடி இருந்தாக வேண்டும் என்பதால் இருக்கிறார். தெருவில் நடக்கிறார். கோவிலில் பார்க்கிறார். வெட்கப்படுகிறார்.. அவ்வளவுதான்.. பாடல் காட்சிகளிலும் இதேதான்.. இயக்குநர் பாடல் காட்சிகளில் மட்டும் ஏன் இப்படி சொதப்பினார் என்று தெரியவில்லை. நடன இயக்குநரை அழைக்காமல் தானே டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் சொல்லித் தந்தாரோ..? சொதப்பல் டான்ஸ்..

பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.. யாரோ யுவன்சங்கர்ராஜாதான் இசையாம்.. டைட்டிலில் போட்டிருந்தார்கள்.. அட.. சோகக் காட்சிகளிலாவது மனதை உருக்கியிருக்க வேண்டாமா..? அதுவுமில்லை.. நல்லவேளையாக கிளைமாக்ஸில் சைடில் பிளேடு போடாமல் விட்டதினால் யுவனுக்கு ஒரு நன்றி..!

உமா பத்மநாபன், ரேணுகா என்ற இரண்டு நடிகையர் திலகங்கள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். நல்ல இயக்கம் என்பதையும் தாண்டி இவர்களது நடிப்பினை பார்க்க வைத்திருக்கிறார்கள்.

முத்துராமனும், நரேனும் போலீஸ் ஸார்களாகவே மிளிர்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இது எத்தனையாவது போலீஸ் வேடம் என்று தெரியவில்லை. ஆனால் கச்சிதமான டயலாக் டெலிவரிதான்.. ஆனால் காக்கி உடையை அணிந்திருக்கும் விதத்தைத்தான் பார்க்க சகிக்கவில்லை.

போலீஸ் டிபார்ட்மெண்ட்டை பற்றி நரேன் அவ்வளவு தூரம் உயர்த்திப் பேசும் காட்சி படத்திற்காகவே என்று தோன்றுகிறது.. சென்சாரில் இதனைக் காட்டியே தப்பித்திருப்பார் இயக்குநர்.

ஒரேயொரு காட்சியில் வைத்த ஒரு வசனமே படத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்பதை இயக்குநர் உணரவில்லை போலும்.. நரேனிடம் தினேஷ் “கொலை செஞ்ச மாணிக்கம் எப்படி ஸார் ஜெயிலுக்குள்ள இருக்கான்..? எப்படி அவனை விட்டு வைச்சிருக்கீங்க..?” என்று கேட்கிறார். நரேன் பதில் சொல்லவில்லை. ஆனால் அடுத்த காட்சியில் முத்துராமனிடம் இது தெரியாத்து போல, மாணிக்கத்தை எப்பத்தான்யா போட்டுத் தள்ளுவீங்க என்று கேட்கிறார். அவரோ, இப்பவும் தேடிக்கிட்டிருக்கோம் ஸார் என்கிறார். எடிட்டிங் டேபிளில் மிஸ்டேக்கா அல்லது காட்சிகளை எழுதி, எடுக்காமல்  விட்டார்களோ தெரியவில்லை..

அதேபோல் நினைத்தவுடனேயே போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கொடுத்துவிட முடியாது. தினேஷ் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்கிறார்கள். அதனால் கான்ஸ்டபிள் வேலை ஓகேதான். ஆனால் அதற்கு முதலில் 1 வருடம் போலீஸ் டிரெயினிங் காலேஜுக்கு அனுப்பி பயிற்சியெடுக்க வைப்பார்கள். அதன் பின்புதான் ஸ்டேஷனுக்குள் கால் வைக்க முடியும். இதில் அடுத்த காட்சியிலேயே தினேஷை, போலீஸ் டிரெஸ்ஸை போட வைத்துவிட்டார் இயக்குநர். அவ்வளவு அவசரம் போலிருக்கு..!

அப்பா-மகன் சென்டிமெண்ட், தறுதலை பிள்ளைகள் வளரும்விதம்.. போலீஸ் துறையின் உள் அரசியல், குத்துப் பாடல்.. காதல், பின் தொடரும் நகைச்சுவை.. கடைசியில் எப்படித்தான் செய்யப் போகிறார் ஹீரோ என்பதை யூகிக்க முடியாமல் கொண்டு போன சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை.. சிரிக்க வைத்த நகைச்சுவை வசனங்கள்.. சொதப்பி விடாத நடிகர்கள்.. என்று அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

பார்க்க வேண்டிய படம்தான்..!

பின் குறிப்பு : படமெடுக்கும் இயக்குநர்களே.. ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்களுடைய படங்களில் போலீஸ் கேரக்டர்கள் வைத்தால் அவர்களுக்கான உடைகளை புதிதாக அளவெடுத்து தைத்துக் கொடுத்து அணியச் செய்யுங்கள்.. கம்பெனில அந்த அளவுக்குத்தான் டிரெஸ் இருந்துச்சு.. காஸ்ட்யூமர்கிட்ட அதான் இருந்துச்சு.. வாங்கப் போன இடத்துல இதுதான் கிடைச்சுச்சுன்னு அந்த கேரக்டரோட தம்பிக்கோ, அண்ணனுக்கோ கொடுக்க வேண்டிய உடையை இவங்களுக்குக் கொடுத்து போலீஸ் டிரெஸ்ஸிங் கோடை கேவலப்படுத்தாதீங்க.. போலீஸ் டிரெஸ் போட்டா அந்த கேரக்டர் எப்படியிருக்கணும்ன்றதுக்கு தயவு செய்து மலையாளப் படங்கள்ல சுரேஷ் கோபி, மோகன்லால், மம்முட்டி, மனோஜ் கே.ஜெயன் போன்ற நடிகர்கள் நடித்த போலீஸ் வேட படங்களை போட்டுப் பார்த்துக்குங்க.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..!

Our Score