full screen background image

“என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இந்தப் பொய்யான வழக்கு..”-ரஜினி பதில் மனு தாக்கல்..!

“என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இந்தப் பொய்யான வழக்கு..”-ரஜினி பதில் மனு தாக்கல்..!

‘லிங்கா’ திரைப்படம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் தனது சார்பிலான பதில் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இந்த வழக்கை மனுதாரர் கெட்ட எண்ணம் மற்றும் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. குறிப்பிட்ட பகுதிகளுக்கு நான், ‘லிங்கா’ படத்தின் வினியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. மற்ற பகுதிகளின் வினியோகஸ்தர்களை வழக்கில் சேர்க்கவில்லை.

இதன் மூலம் மனுதாரரின் கெட்ட எண்ணம் நன்றாக தெரியும். எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘லிங்கா’ படத்தில் நான் நடித்துள்ளதைத் தவிர வேறு எந்த பங்களிப்பும் எனக்கு கிடையாது.

நான் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறேன். அனுபவமுள்ள முன்னணி நடிகர். எழுத்தாளர், பின்னணி பாடகர், கதாசிரியர் என்று பல துறைகளில் பணியாற்றி உள்ளேன்.

எனது திரையுலக பணியை அங்கீகரித்து பல்வேறு விருதுகளை மத்திய-மாநில அரசுகள் வழங்கி உள்ளன. உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர்.

‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் பற்றியோ, மனுதாரர்தான் அந்த படத்தின் உரிமையாளர், இயக்குநர், கதாசிரியர் என்பது பற்றியோ எதுவும் எனக்கு தெரியாது.

பென்னிகுயிக் மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. அந்த கதைகளுக்கு மனுதாரர்தான் உரிமையாளர் என்று கூறுவதை ஏற்க முடியாது. சினிமாத் துறை வழக்கப்படி 2 படங்களில் தொடர்ச்சியாக 13 காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே கதையை திருடியதாக அர்த்தம்.

‘லிங்கா’ படத்தின் கதாசிரியர் பொன்குமரன் 2010-ல் ‘லிங்கா’ படக் கதையை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், அந்தக் கதை திருடப்பட்டதாகவும் கூறுவது ஆட்சேபனைக்குரியது. ‘லிங்கா’ படத்தின் கதை குறித்த கட்டுரைகள் சில ஊடகங்களில் வெளியாயின. அந்த கட்டுரைகளில், இதுதான் ‘லிங்கா’ படத்தின் கதை என்று படக் குழுவினர் தெரிவித்ததாக கூறப்படவில்லை.

மனுதாரர் அவராகவே கற்பனை செய்து கொண்டு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். வெறும் யூகத்தின் அடிப்படையில் கதையை திருடியதாக கூறியுள்ளார். ‘லிங்கா’ படத்தை கடுமையான முயற்சி, கூட்டு முயற்சி மற்றும் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் தயாரித்துள்ளோம். படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது. ‘லிங்கா’ படம் வெளியாவதை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எதையும் உறுதி செய்யாமல் விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும். தேவையில்லாமல் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதால் உரிய நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளது. ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று ரஜினிகாந்த் தனது மனுவில் கோரியுள்ளார்.

அதே போன்று படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “லிங்கா’ படத்தைத் தயாரிக்க பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ‘லிங்கா’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி., பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Our Score