ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுதிர் புதோடா தயாரிக்கும் புதிய படம் ‘காட்சி நேரம்.’
இந்தப் படத்தில் ரணதீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருக்ஷார் மீரா நடிக்கிறார். மற்றும் கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக சுப்ரீத் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – பூபதி.கே, இசை – மரகதமணி, படத் தொகுப்பு – சீத்தா காஞ்சி, எம்.எம்.கே., சண்டை பயிற்சி – ராம் சங்கரா, நிர்வாக தயாரிப்பு – கிரண் தனமலா, நயீம், தயாரிப்பு – ஜான் சுதீர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.காஞ்சி.
இவர் ‘பாகுபலி’ படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான திரைக்கதை ஆசிரியர். தனது தம்பியின் அனைத்து படங்களின் கதை, திரைக்கதையிலும் இவரது பங்களிப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் காஞ்சி பேசும்போது, “இன்றைய சமுதாயம் ஒழுக்கம் தவறி எப்படி சீரழிந்து வருகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படம் இது.
ஒரு மாடர்ன் தம்பதியினரைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரவுடித்தனம் செய்யும் முரட்டுத்தனமான நான்கு இளைஞர்களுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே எதிர்பாராமல் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்னையால் என்னென்ன விபரீதங்கள் நடக்கின்றன என்பதுதான் திரைக்கதை.
மக்களின் இன்றைய மனநிலையும், அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுவதாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..” என்றார்.









