நேற்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது “காதல் மட்டும்தான் தமிழ்ச் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை படைத்தது…” என்றார்.
அவர் பேசும்போது, “பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கின்றன? கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கின்றன? கிராமங்களில் வாழும் மக்கள். எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது.
‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்கக் கூடிய அரசியல், அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிக சினிமாவில் காட்சிப்படுத்தியிருந்தார் சுசீந்திரன்.
அதேபோல இன்றைய கிராமங்களில் பொதுப் பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது. யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது. அந்தக் கேள்விக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் வரும் டிரெயிலரும் , பாடல்களும் அதைத்தான் திருப்பி, திருப்பி சொல்ல வருகிறது.
இந்தக் ‘காதல்’ இருக்கிறதே, அது சும்மாயிருக்காது. ‘மாவீரன் கிட்டு’ படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டு பண்ணும். ‘காதல்’ இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
இந்த மாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மாதிரியான படங்கள் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும். தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன் வருவார்கள்.
தமிழ் ரசிகர்கள் எந்தப் படத்தையும் தரம் பிரித்து பார்ப்பதில்லை. இந்தப் படம் கமர்சியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அந்த வகையில் சுசீந்திரன், யுகபாரதி, இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்றார்.










