full screen background image

இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்…!

‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா சமீபத்தில்   சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

பிரபல இயக்குநர் முக்தா சீனிவாசன் அவர்களின் ஆலோசனையின்படி இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள்.

விழாவில் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, வாணி ஜெயராம், டி.எல்.மகாராஜன், கவிஞர்கள் பூவை.செங்குட்டுவன், பிறைசூடன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மலேசியா டத்தோ வசீர்ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

K.V.Magadhavan-100=105

விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பேசும்போது, “இவ்விழாவை நடத்தும் எம்.எஸ்.வி.யின் இசை ரசிகர்களுக்கு நான் பெரிதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

மாமா கே.வி.மகாதேவன் அவர்கள் பெரிய இசை மேதை மட்டுமல்ல; மிகச் சிறந்த மனித நேயம் மிக்கவராக இருந்தார். கலைஞர்களின் மனம் கோணாமல் வேலை வாங்கினார். அவருடன் ஈருடல் ஓர் இதயம் போலிருந்தவர் புகழேந்தி அவர்கள்.

எனக்கு ஸ்வர ஞானம் கிடையாது. கேள்வி ஞானம் மட்டும்தான். நானெல்லாம் ‘சங்கராபரணம்’ படத்தில் பாடினேன் என்றால் அந்த ஞானம், அவர் போட்ட பிச்சை என்பேன்.

எனக்கு எது வருமோ அதைப் பாடக் கொடுப்பார். அவர் கவிஞர்களை மதிப்பவர். வார்த்தைகள் எழுத வைத்து மெட்டு போட்டவர். பாட்டுக்குத்தான் மெட்டு என்பார். அவர் சொன்னது சரிதான். ஒரு பாட்டுக்கு பெயரே அதன் வார்த்தைகள்தான், வார்த்தை இல்லாமல் பாட்டு ஏதய்யா…? வார்த்தை இல்லாமல் வெறும் இசை பாடலாகாது. வெறும் த… தா தா…. என்று  வரிகள் இல்லாமல்  வெறும் ராகம் பாட முடியுமா..?

சிலரை  ‘பெரிய இசை மேதைகள்’ என்பார்கள். ஆனால் அவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். தங்களது அருகில் யாரையும் சேர்க்கவும் மாட்டார்கள். மனிதாபிமானம் இல்லாமல் இருப்பார்கள்.

ஆனால் மாமா கே.வி.எம். அப்படியல்ல.. சிறந்த மனிதாபிமானி. பல பேருக்கு வாழ்வு கொடுத்தவர். நான் எடுப்பார் கைப்பிள்ளை. என்னைப் பலரும் அன்பு காட்டி வளர்த்து இருக்கிறார்கள். அவர்களில் கே.வி.எம். முக்கியமானவர். உரிமையோடு என்னை அன்புடன் நடத்தி வளர்த்தவர்…” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.

.விழாவில் கே.வி.மகாதேவன் குழுவில் பணியாற்றிய கலைஞர்களின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னதாக சத்யாவின் கீதாஞ்சலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேடையில் இசைக் குழுவினர்களோடு பி.சுசிலா, எஸ்.பி.பி., வாணி ஜெயராம் மூவரும் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாடிய சில பாடல்களை பாடினார்கள்.

K.V.Magadhavan-100=74

‘அடிமைப் பெண்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’, ‘சங்கராபரணம்’ படத்திலிருந்து ‘சங்கரா’, ‘மானஸ சன்சரே’, ‘இதயக் கமலம்’ படத்திலிருந்து ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’, ‘பல்லாண்டு வாழ்க’ படத்திலிருந்து ‘இன்று  சொர்க்கத்தில் திறப்பு விழா’ போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்கள். 

விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் முக்தா ரவியும், எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர் மன்றத் தலைவர்  விஜய கிருஷ்ணனும் வரவேற்றார்கள்.

Our Score