ஜெயலலிதா என்னிடம் பேசுவதில்லை-நடிகர் ராதாரவியின் வருத்தம்..!

ஜெயலலிதா என்னிடம் பேசுவதில்லை-நடிகர் ராதாரவியின் வருத்தம்..!

முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள்கூட ஒரேயொரு விஷயத்தில் அவரைப் பாராட்டுகிறார்கள். அது அவரது தைரியமான, துணிச்சலான முடிவெடுக்கும் திறனை.. ஒரு தடவை முடிவெடுத்துட்டா அது தவறானதாகவே இருந்தாலும் சரி.. முடிக்காம விட மாட்டார்கள் என்பது மீடியாக்களின் கருத்தும்கூட..

சமீபத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் விடுதலை பற்றி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் கூட்டத்தில் ராதாரவியும் பேசினார். அப்போது, "முதல்வர் ஒரு தடவை சொல்லிட்டாங்கன்னா அது சொன்னதுதான்.. அதை சத்தியமா யாராலயும் மாத்த முடியாது.. அவ்ளோ போல்டான லேடி அவங்க.. இந்த விஷயத்துல பல முறை யோசித்துத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்க. இதுல அவங்க ஜெயிக்காம விட மாட்டாங்க. அதே மாதிரி அவங்களை மாத்துறதும் கொஞ்சம் கஷ்டம். நான் கூட இருந்தவன்.. அனுபவத்துல சொல்றேன்.. என்கிட்டயே இப்போ அவங்க பேசுறதுல்ல.. ஒரு சின்ன கோபம்.. பேசக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. அவ்ளோதான்.. அது மாதிரிதான் எல்லா விஷயத்துலேயும்.." என்று சொல்லி தனது அம்மா ஆதரவை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து கொண்டார்..

ஜெயலலிதா ஏன் தன்னுடன் பேசுவதில்லை.. என்ன கோபம் என்பதையெல்லாம் ராதாரவி சொல்லவில்லை. 2009 வரையிலும் ராதாரவி அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வாகத்தான் இருந்தார். கொஞ்சம் மன வருத்தத்தில்..! தன்னை மீட்டிங்கிற்கு யாரும் அழைப்பதில்லை என்ற கோபத்திலும் இருந்தார். இந்த நேரத்தில் அவரது தாயார் தனலட்சுமி அம்மாள் திடீரென்று மரணமடைய அப்போது ஜெயலலிதா வரவில்லை. ஆனால் திராவிட இயக்க பாசம் காரணமாய் ஸ்டாலின் வந்தார்.  அந்த நேரத்தில் கருணாநிதியும் ராமச்சந்திரா மருத்துவமனையில் படுக்கையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். உடனேயே ராதாரவி கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் "தி.மு.க.வுக்கு ரிட்டனா?" என்ற கேள்விக்கு "அப்படித்தான் வைச்சுக்குங்களேன்.." என்றார்.

இதன் பின்பும் கொஞ்ச நாட்கள் கோபம் தீர்ந்து ஜெயலலிதாவே ராதாரவியை அழைத்துப் பேச திரும்பவும் பேக் டூ தி பெவிலியனாக அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வானார். 2012-ல் நடந்த ராதாரவியின் மகன் திருமணத்திற்கு வானகரம்வரையிலும் வந்து வாழ்த்தினார் ஜெயலலிதா.

அப்புறம் என்னாச்சோ தெரியலை. மீண்டும் முட்டல்.. மோதல்.. இப்போதும் முதல்வரின் கடைக்கண் பார்வைக்காக பல வழிகளிலும் முயன்றி வருகிறார். கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட 100-வது விழாக்களிலும் ராதாரவியை, பிலிம் சேமபர் இதனாலேயே முன்னிலைப்படுத்தவில்லை.

இப்போது கிடைத்த  வாய்ப்புகளில் எப்படியாவது முதல்வரிடம் பேசிவிட முயன்றுதான் வருகிறார்.. பார்ப்போம்.. ஆனால் இவருக்கு முன்பாக 4 வருடமாக கே.பாக்யராஜ் முயன்று வருகிறார். அவருக்கே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்கிறார்கள் அரசியல் ரிப்போர்ட்டர்கள்..!