இறுதிப் பக்கம் – சினிமா விமர்சனம்

இறுதிப் பக்கம் – சினிமா விமர்சனம்

2021-ம் வருடத்தின் கடைசியில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படங்களில் நிச்சயம் புருவம் உயர்த்திப் பார்க்கும் படமாக இந்த ‘இறுதிப் பக்கம்’ திரைப்படம் இருக்கிறது என்பதை அடித்துச் சொல்லிவிடலாம்.

தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது இந்த ‘இறுதிப் பக்கம்’ என்கிற  திரைப்படம்.

ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.

படத்தில் நாயகியாக அம்ருதா ்ரீநிவாசன் நடித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச் சிரிப்பு’ வெப் சீரீஸில் நடித்தவர். மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர்  பிரவின் பாலு, ஏராளமான குறும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர். இப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருக்கும் ‘நாய் சேகர்’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைத்துள்ள  ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன்’, ‘மாயன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். படத் தொகுப்பாளர் ராம் பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். படத்திற்குக் கதை, எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.

இவர் மென்பொருள் பொறியாளர். கை நிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்குள் வந்துள்ளார்.

இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம்மிக்கவர்களைப் படக் குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

தன்னுடைய திரைக்கதையை ஒவ்வொருவரிடமும் காட்டி  “பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள்” என்ற ரீதியில்தான் அனைவரையும் அணுகியிருக்கிறார் இயக்குநர். அவர்களும், கதையின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையினால் பணியாற்றச் சம்மதிக்க, இந்த படமும் உருவாகி இருக்கிறது.

பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள்  யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும்.

ஒன்று நல்லவனாக இருப்பான்.. அல்லது கெட்டவனாக இருப்பான். அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான். இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படிதான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும்.

ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும்போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள். அப்படியொரு அனுபவத்தைத் தருவதுதான் இந்த இறுதிப் பக்கம்’ திரைப்படம்.

ஒரு கொலை நடந்துவிட்டது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பதுதான்  வெளியே தெரியும் கேள்வி. ஆனால், இந்தக் கொலையை ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான மன நிலையில் பார்ப்பார்கள். அவர்களுக்குள் வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக இந்த ‘இறுதிப் பக்கம்’ படம் அமைந்திருக்கிறது.

குறள்  போல இருக்கும் இரண்டு வரி கதைகள்கூட சில சமயம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும். அதற்கான காரணம் திரைக்கதைதான். தேர்ந்த திரைக்கதையை உருவாக்கும் திறன் இருந்தால் ரசிகனை தியேட்டரில்   ரசிக்க வைத்துவிடலாம். ஆக ஒரு நல்ல சினிமாவின் ஆதார சுருதி திரைக்கதையில்தான் இருக்கிறது.

அந்த வகையில் தனது புத்திசாலித்தனமான திரைக்கதையால் ‘இறுதிப் பக்கம்’ என்ற இந்த முதல் படத்திலேயே தன் இயக்குநர் முத்திரையைப் பதித்துள்ளார் இளம் இயக்குநரான மனோ வெ.கண்ணதாசன்.

மிகவும் சிக்கனமான செலவில் எடுக்கப்பட்ட படம் நமக்குள் பிரம்மாண்டமாய் அமர்ந்து கொள்ளும் காரணம் என்ன..?

படத்தின் முதல் ஷாட்டில் ஒரு அழகான இளம் பெண் கட்டிலில் இருந்து கொண்டு பெரும் அவஸ்தையோடு ஒருவருக்கு வாட்ஸப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள். அப்போது அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்கிறது.

35 வயது மதிக்கத்தகுந்த ஒருவன் வாசலில் நிற்கிறான். அவன் தன் நண்பனைக் காண வந்திருப்பதாகவும் அவன் வர நேரமாகும் என்றும் சொல்கிறான். “அதனால் உங்கள் வீட்டில் சற்று நேரம் அமர்ந்து கொள்ளலாமா..?” என்று கேட்கிறான். அந்த இளம் பெண்ணும் “சரி” என்கிறாள். வீட்டுக்குள் வந்தவன் தண்ணீர் கேட்கிறான். அவள் தண்ணீரோடு வந்து பார்த்தால் அவன் அவளுக்குப் பின்னால் நின்று அவள் கழுத்தில் கயிற்றை இறுக்கி அவளைக் கொல்கிறான்.

சற்று நேரத்தில் சம்பவம் இடத்திற்குப் போலீஸ் வருகிறது. கொலையுண்டவள் யார்? அவளின் பின்னணி என்ன? அவளை கொலை செய்தவனின் நோக்கம் என்ன? அவனைத் தூண்டியது யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘இறுதிப் பக்கம்’ படத்தின் கதை.

ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் இப்படி ஒரு பரபரப்பான ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கதையில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களும் அபாரமானவைதான்.

படத்தின் மையக் கதாப்பாத்திரமான அம்ருதா ஸ்ரீநிவாசன் மிகையில்லாத நடிப்பில் கவர்கிறார். அளவுக்கேற்ற சிரிப்பு, அளந்த வைத்தது போன்ற வசனம் என அவரின் பங்கு இந்த ‘இறுதிப் பக்க’த்தில் ரொம்பவே அழகு.

ராஜேஷ் பாலச்சந்திரன்,  விக்னேஷ் சண்முகம், பிரசாந்த் ஆகியோரும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒரு படத்தில் நடிகர்கள் பேசப்படுகிறார்கள் என்றால் அது நடிகர்களின் திறமை என்றாலும் அந்தத் திறமையை வெளிக் கொண்டு வர வைத்த இயக்குநருக்குத்தான் அதிகப் பெருமை சேரும். அந்த வகையில் சின்னச் சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்கும்படியாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

படத்தின் மேக்கிங் விசயத்தில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஏன் என்றால் பல இடங்களில் ப்ரேம் வெறிச்சோடி கிடக்கிறது. போலீஸ் ஸ்டேசன் செட்டப்பில் துளியும் உண்மைத் தன்மை இல்லை. பட்ஜெட்தான் காரணம் போல. 

கேமரா கோணங்களை குறை சொல்ல ஒன்றுமே இல்லை. சிறிய பட்ஜெட்டில் எவ்வளவு தரத்தை மெயிண்டெயின் பண்ண முடியுமோ அந்தளவு மெயிண்டெயின் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு. இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். கூடவே பின்னணி இசையில் அவர் பங்களிப்பு நன்றாகவே இருக்கிறது.

படத்தில் நாயகி ஒரு எழுத்தாளர். அவரின் சிறு வயதில் ஆஸ்டலில் படிக்கும்போது தன்னைவிட ஏழு வயது பெரிய பையன் மீது இனம் புரியாத ஈர்ப்பு அவருக்கு வருகிறது. பின் வயதுக்கு வந்த பின் அவருக்கு வேறோர் இளைஞன் மீது காதல் வருகிறது. அதன் பின் வேறு சிலரோடு அவர் உடல் ரீதியாக தொடர்பும் வைத்துள்ளார். அதற்காக அவர் சொல்லும் காரணம் அவர் எழுதும் கதைக்கு வேண்டுமானால் உதவும். எதார்த்தத்திற்கு… வாய்ப்பே இல்லை. இந்தப் படத்தில் நாயகியின் இந்த செயல்தான் படத்தை நம்மிடம் இருந்து அவரை அந்நியப்படுத்தி விடுகிறது.

ஒரு நல்ல திரில்லர் இன்வெஸ்டிகேசன் கதையை கொடுத்த இயக்குநர் கருத்தியல் விசயத்தில் கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா? கற்பு என்பது ஆண்களுக்கு மனதிலும், பெண்களுக்கும் உடலிலும் இருப்பது நியாயமா? என்று இயக்குநர் பெண்ணியம் பேசினாலும் அது பெண்களை வலி நிறைந்த பாதைக்கு அல்லவா அழைத்துச் சென்றுவிடும். பெண்ணியம் பேசலாம்.. ஆனால் அதிலும் ஒரு கண்ணியம் வேண்டும்.

மற்றபடி படத்தின் ஒவ்வொரு பக்கமும் நம்மை ‘இறுதிப் பக்க’த்தை நோக்கி வேகமாக நகர வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

RATING : 4 / 5

Our Score