புஷ்பா – சினிமா விமர்சனம்

புஷ்பா – சினிமா விமர்சனம்

ஒரு தெலுங்கு படத்தின் ரிலீஸை தமிழ் ரசிகர்கள் இந்தளவிற்கு எதிர்பார்த்தது சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்திற்கு மட்டும்தான். முன்பு ‘பாகுபலி’ படத்திற்குத்தான் இப்படியோர் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த ‘புஷ்பா’ படத்தை ‘்ரீமந்துடு’, ‘ஜனதா கேரஜ்’, ‘ரங்கஸ்தலம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன், ரவி இருவரும் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். சுனில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

போலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ‘ஆர்யா’ மற்றும் ‘ஆர்யா-2’ படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநரான சுகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘ஆர்யா’ மற்றும் ‘ஆர்யா-2’ என இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் ‘புஷ்பா’.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பேயே 250 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் என்று நான்கு மாநிலங்களையும் தொட்டுத் தழுவிச் செல்லும் மிகப் பெரிய கடத்தல் விவகாரமான செம்மரக் கடத்தல்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

‘புஷ்பராஜ்’ என்ற கேரக்டரில் வரும் நாயகன் அல்லு அர்ஜுன் ஒரு கூலித் தொழிலாளி. யாருக்கும் அடங்காத மனோபாவம் அவருடையது. அவர் ஒரு சமயத்தில் செம்மரம் வெட்டும் வேலைக்குச் செல்கிறார். செம்மரம் கடத்துபவர்கள் தொழிலாளிகளை வஞ்சித்து எப்படி கொழுக்கிறார்கள் என்பதைக் கண்ணெதிரே காண்கிறார்.

உடனே தானும் மரம் கடத்தலில் ஈடுபடலாம் என முடிவெடுத்து மரம் கடத்தும் வேலையில் இறங்குகிறார். அதனால் சில, பல பகைகளையும் சம்பாதிக்க வேண்டி வருகிறது. இடையில் ராஷ்மிகாவோடு காதலும் அவருக்கு இருக்கிறது. அந்தக் காதலுக்குத் தடையாக அல்லு அர்ஜுனுவின் குடும்பப் பின்னணி இருக்கிறது.

தொழிலில் எதிரிகளை வீழ்த்தி, குடும்பப் பிரச்சனையை சரி செய்து எப்படி புஷ்பா வெற்றிக் கொடி நாட்டுகிறார் என்பதே படத்தின் கதை.

மேலும் அடுத்த பாகமும் வரவிருப்பதால், பகத் பாசில் கேரக்டருக்கும், அவருக்குமான போட்டியோடு இந்த முதல் பாகத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் சுகுமார்.

படத்தில் புஷ்பாவாக வாழ்ந்திருக்கிறார் அல்லு அர்ஜுன். தரை லோக்கலாக நடித்து தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். அவர் பேசும் சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் உறுத்தல். நார்மல் தமிழிலே வசனங்களை அமைத்திருக்கலாம். தமிழ் வசனங்களும் பாகுபலி, கே.சி.எப் போன்று எபெக்டிவாக இல்லை.

ராஷ்மிகா நடிப்பும் தரை லோக்கல்தான் என்றாலும் அவரும் சென்னை உடல் மொழியை கொண்டு வர சிரமப்பட்டிருக்கிறார். ‘சாமி’ பாடலில் மட்டும் தனித்துத் தெரிகிறார். ஜாலி ரெட்டி, கொண்டாரெட்டி என ரெட்டிகளாக வில்லன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இதில் எல்லோருமே கவனம் ஈர்க்கிறார்கள்.

வில்லன்கள் செய்யும் கொலைகள் எல்லாம் கொலை நடுங்க வைக்கும் ரகம். திரையில் நிறைய ரத்தத் துளிகள்.

படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில்தான் பகத் பாசில் வருகிறார். அவருக்கான அறிமுக காட்சி அதகளமாக இருக்கிறது. அவரின் தமிழ் வசனங்களில் நல்ல ஈர்ப்புத் தன்மை இருப்பதை மறைப்பதிற்கில்லை. வண்டியில் சாவகாசமாக உட்கார இடமில்லாததால் இருவரை அவர் கொல்லும் காட்சி படத்தில் மாஸ் மெட்டிரியல்.

ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் சமந்தா பல இளைஞர்களை தூங்கவிடாமல் செய்யும் அளவுக்கு கவர்ச்சி மழையைக் கொட்டியிருக்கிறார்.

படத்தின் பெரிய பாராட்டு ஒளிப்பதிவாளருக்குத்தான். ஒவ்வொரு ப்ரேமிங்கும் மிரட்டுகிறது. போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக செம்மரக் கட்டைகளை ஆற்றில் தள்ளிவிட்டு அது அணையில் இருந்து வெளியேறும் முன்பாக ஓடிச் சென்று சேகரிக்கும் வேகத்தில் கேமராமேனின் விஷுவல் அட்டகாசம்.

‘ஸ்ரீவள்ளி’ பாட்டின் மேக்கிங்கும் செம க்யூட்டாக இருக்கிறது. பின்னணி இசையில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். பாடல்கள் முன்னமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருப்பது தியேட்டரில் நல்ல பலன் கொடுத்திருக்கிறது. ‘ஊ சொல்றீயா மாமா’ பாடலை எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் ரிப்பீட்டு கேட்கிறார்கள் ரசிகர்கள்.

இப்படி படம் நெடுக பாசிட்டிவ் இருந்தாலும் படத்தின் நீளம் நம்மை ஒரு கட்டத்தில் பொறுமை இழக்க வைத்துவிடுகிறது. 3 மணி நேரப் படம் என்பது இந்த காலத்திற்கு அயர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் எதிரிகளை எல்லாம் லெப்ட் கையிலே கேண்டில் பண்ணி மாஸ் காட்டுவதெல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கிறது. ஆனால் அவர் செய்வதும் சட்ட விரோதச்  செயல்கள்தானே..? பின் எப்படி அவரின் சாமர்த்தியங்களை எல்லாம் நாம் மெச்ச முடியும்?

அவரது கடத்தல் தொழில் சட்டத்திற்கும் சமூகத்திற்கும் புறம்பானதாக இருப்பதால் படத்தில் அவருக்குப் பிரச்சனை வரும்போது நம்மால் அவரோடு எமோஷனலாக கனெக்ட் ஆக முடியவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்வது போல் இரண்டாம் பாகம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த ‘புஷ்பா’வை நம்பிச் சென்று பாருங்கள். இது தியேட்டரில் கொண்டாட்டத்துடன் பார்க்க வேண்டிய படம்தான்.

RATING : 3.5 / 5

Our Score