இசைஞானி இளையராஜா கொடுத்த சாபம்..!

இசைஞானி இளையராஜா கொடுத்த சாபம்..!

சமீப காலமாக திருவண்ணாமலை மலை மீது சிலர் வீடுகளை கட்டி குடியிரு்கக ஆரம்பித்திருக்கிறார்கள். திருவண்ணாமலை நகராட்சி கோவில் நிர்வாகத்திற்குத் தெரியாமல் இந்த வீடுகளைக் கட்ட அனுமதி தருவதாக அந்த நகர மக்களும், கோவில் நிர்வாகிகளும் புகார் கூறியபடியே உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலில் இசைஞானி இளையராஜா எழுதிய நூல்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய இசைஞானி இளையராஜா.. திருவண்ணாமலை மலையில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை கடுமையாகக் கண்டித்து பேசினார்.

இசைஞானியின் பேச்சில் இருந்து சில பகுதிகள் :

"திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணி்ககை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பவுர்ணமி தினமென்று இல்லாமல், எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கிரிவலம் செல்கிறார்கள்.

மனம் அமைதியடைய இங்கு வரும் லட்சணக்கணக்கான பக்தர்களின் மனங்களையெல்லாம் வேதனைப்படுத்தும் விதமாக இங்கு சில காரியங்களை சிலர் செய்து வருகிறார்கள். இந்த புனித ஸ்தலத்தை அசுத்தப்படுத்தும் முறையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிரிவலம் செல்லும் மலைமீது வீடு கட்டி குடியிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இறைவனின் அருள் வேண்டி மலையைச் சுற்றும்போது இந்த மனிதர்களையும் சேர்ந்து சுற்ற வேண்டியிருக்கிறது.

இது வெறும் மலை அல்ல. இறைவன்தான் மலைவடிவமாக அமர்ந்திருக்கிறான். எத்தனை சித்தர்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா..? அப்படிப்பட்ட புனிதமான மலையில் மனிதர்கள் குடியிருப்பதால் சாக்கடையும், மனிதக் கழிவுகளும் கோயிலுக்குள் வரும்படி செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம்..?

திருவண்ணாமலையில் வசிக்கும் மக்கள் இதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்..? இந்த புனிதமான மலை மீது வீடு கட்ட எப்படி நகராட்சி அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள்..? இத்தனை பக்தர்கள் கிரிவலம் வருவது தெரியாமல் மலை மீது குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு எப்படி கொடுத்தார்கள்...?

திருப்பதி, பழனி, திருப்பரங்கன்றம் போன்ற ஸ்தலங்களில் கோவில் அருகில்கூட வீடு கட்ட  மாநகராட்சி அனுமதி தராது. அதெல்லாம் மலை மேல் இருக்கிற கோவில்கள். ஆனால் திருவண்ணாமலையை சிவனாகவே நினைத்து வழிபடுகிறோம். இங்கு வந்து குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களை திருவண்ணாமலையில் வசிக்கும் மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா..? தெய்வத்தை வணங்க வருவதற்குக்கூட போராட்டம் நடத்த வேண்டுமா..? அவர்கள் குடியிருப்பது மலை மீது அல்ல.. இறைவனின் மீது.. அதற்கான பலனை நிச்சயம் அவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.." என்று கடும் கோபத்துடன் பேசினார் இசைஞானி இளையராஜா.

கோவில் என்பதே கொள்ளையடிக்கத்தான் என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நன்கு தெரிந்து வைத்திருக்கும்போது இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்..?

ஆனாலும் மற்றவர்களை போல அமைதியாக இல்லாமல் முதல் குரலை ஓங்கி ஒலித்திருக்கும் இசைஞானி வாழ்க..!