பிரபல இந்தி நடிகையான நீனா குப்தா சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாகக் கூறியுள்ளார்.
நடிகை நீனா குப்தா தனது வாழ்க்கைக் கதையை ‘Sach Kahun Toh’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதி உள்ளார். அந்தப் புத்தகத்தில் சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், “ஒரு நாள் எனது தோழி ஒருத்தி, தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கும்படி என்னிடம் கூறினாள். அவர் பெரிய புள்ளி என்றும் தெரிவித்தாள். நான் அந்த தயாரிப்பாளரை சந்திக்க ஓட்டலுக்கு சென்றேன்.
ஓட்டல் லாபியில் நின்று போன் செய்தேன். அந்தத் தயாரிப்பாளர் “உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது அறைக்கு வா…” என்று அழைத்தார். அவரிடம் போய் “எனக்கு படத்தில் என்ன கதாபாத்திரம் சார்..?” என்றேன். அவர், “தென்னிந்தியாவில் தான் பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியிருப்பதாக” சொன்னார்.
படத்தில் எனக்குக் கதாநாயகியின் தோழி கதாபாத்திரம் என்று விளக்கினார் அந்தத் தயாரிப்பாளர். அது சிறிய கதாபாத்திரமாக எனக்குத் தோன்றியது. பின்னர் அந்த தயாரிப்பாளரிடம் “நான் கிளம்பலாமா..?” என்று கேட்டேன். உடனே அவர் “போகிறாயா..? எங்கே..? இன்றைய இரவை என்னோடு நீ கழிக்கவில்லையா..?” என்று கேட்டு என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அதிர்ச்சியாகி அங்கிருந்து வெளியேறி விட்டேன்…’’ என்று எழுதியுள்ளார் நீனா குப்தா.
மேலும் ஒரு புகழ் பெற்ற இயக்குநர் ஒருவர் செட்டில் சக நடிகர், நடிகைகள் முன்பாகவே தன்னை மோசமான வார்த்தைகளால் பேசியதாகவும் எழுதியிருக்கிறார்.
அந்த இயக்குநர் விருப்பத்திற்குத் தான் இணங்காத காரணத்தினால்தான் அந்த இயக்குநர் தன் மீது கோபமாகி இப்படி பேசியதாகவும் சொல்லியிருக்கிறார் நீனா குப்தா.
அந்த இயக்குநர் அனைவரின் முன்பாகவும் என்னிடம், “உன்னிடம் இருப்பவைகளைப் பயன்படுத்தாவிட்டால் அவை அத்தனையும் வீணான ரொட்டி போலாகிவிடும்..” என்று பேசினார்…” என்று எழுதியிருக்கிறார் நீனா குப்தா.
“அந்த நேரத்தில் இதை வெளியில் சொல்ல முடியாமைக்குக் காரணம் தான் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகை.. பல போராட்டங்களுக்கிடையில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதைய காலக்கட்டத்தில் நான் என்னதான் பிரபலங்களை எதிர்த்து பேசினாலும் மக்கள் என்னிடம்தான் குற்றம் கண்டுபிடிப்பார்கள் என்பதால்தான் பேசாமல் இருந்தேன்..” என்றும் குறிப்பிட்டுள்ளார் நீனா குப்தா.
அந்த இயக்குநரின் பெயரை எழுத வேண்டும் என்று நீனா குப்தா விரும்பியபோதிலும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றம், வழக்கு என்று சட்ட ரீதியான பிரச்சினைகள் வரும் என்று எச்சரித்ததாலும், தன்னுடைய தோழிகளும் வேண்டாம் என்று அட்வைஸ் செய்ததாலும் சொல்லாமல் விட்டுவிட்டாராம் நீனா குப்தா.