விவாகரத்து பெற்ற பின்னர் மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதிகள்..!

விவாகரத்து பெற்ற பின்னர் மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதிகள்..!

தமிழ் திரையுலகத்தின் விவாகரத்து பெற்ற நட்சத்திர ஜோடி மீண்டும் இணைந்துவிட்டது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

பொதுவாக விவகாரத்து பெற்ற தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவார்கள். நீ யாரோ.. நான் யாரோ என்றுதான் இருப்பார்கள். வேறு ஒரு திருமணம் செய்துவிட்டால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

ஆனால் இங்கே தமிழ்ச் சினிமாவில் அப்படி விவாகரத்து பெற்ற நட்சத்திர ஜோடி ஒன்று, தற்போது 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ஒருவருக்கொருவர் திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் ஜோடியும் ஒன்று. இவர்கள் இருவரும் ’நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து அதன் பின்னர் இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரஞ்சித் சொந்தப் படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டு பல லட்சம் ரூபாயை இழந்து கடனாளியாகவும் ஆனபோது தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு எழுந்து அது விவாகரத்தில் போய் முடிந்தது.

2014-ம் ஆண்டு இருவருக்கும் இடையே விவகாரத்து ஏற்பட்டு பிரிந்தாலும் குழந்தைகள் மட்டும் அம்மாவான பிரியா ராமனுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்த நேரத்தில் ரஞ்சித் இன்னொரு நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். பழம் பெரும் நடிகையான கே.ஆர்.விஜயாவின் தங்கையும் நடிகையுமான கே.ஆர்.சாவித்திரியின் மகளான நடிகை ராகசுதாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சித்.

ஆனால், இந்த இரண்டாவது திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. ஒரு வருடத்திற்குள்ளேயே இவர்களும் விவகாரத்து பெற்றுவிட்டனர்.

இதையடுத்து தனது மகன்களைப் பார்க்க அடிக்கடி சென்று வந்த ரஞ்சித் மீண்டும் தனது முன்னாள் மனைவி பிரியா ராமனுடன் பேசிப் பழகி வந்தார்.  இறுதியில் இவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நடிகை பிரியா ராமனும் ரஞ்சித்தை தனது கணவர் என்றே சொல்லி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது திருமண நாள் குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் “என் அன்பு தங்கங்களே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும், மகிழ்ச்சியும் தங்கங்களே…” என்று பதிவு செய்துள்ளார்.

இந்தப் பதிவில் அவர் பிரியா ராமனுடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளதை அடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இருவரது நண்பர்களும், ரசிகர்களும் இத்தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.

 
Our Score