உலக நாயகன் கமல்ஹாசன் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் 4 வேடங்களிலும் ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும் நடித்து இருந்தார்.
இந்தப் படங்களில் கமலின் வித்தியாசமான கதாபாத்திரங்களும், தொழில் நுட்பங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
‘தசாவதாரம்’ படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து கமல்ஹாசன் அதில் தான் நடித்த அனுபவங்களைப் பற்றி மிக நீண்ட கட்டுரையொன்றை தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

இதைப் படித்த மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன், “ஸார், ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘தசாவதாரம்’ படத்தின் காட்சிகளை எப்படி படமாக்கினீர்கள் என்று எனக்கு சொல்லித் தர முடியுமா..? படம் இயக்குவதில் ‘தசாவதாரம்’ பி.எச்.டி. படிப்பைப் போன்றது. ‘மைக்கேல் மதன காமராஜன்’ டிகிரி படிப்பைப் போன்றது” என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், “நன்றி அல்போன்ஸ் புத்திரன். விரைவில் அதை நிறைவேற்றுகிறேன். அந்தப் படங்களில் எவ்வளவு கற்றேன் என்பதை உங்களுக்கு எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இந்தப் படங்கள் வெளியாகி பல வருடங்களுக்கு பிறகு அதை நான் விளக்குவது எனக்கு ஒரு புதிய படிப்பினையை கற்றுக் கொடுக்கும்.’’ என்று கூறியுள்ளார்.