கேரளா சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நடிகர், நடிகைகள்..!

கேரளா சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நடிகர், நடிகைகள்..!

தமிழகத்தைப் போலவே கேரளாவில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திரையுலக நட்சத்திரங்களின் பிரச்சாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த முறை தேர்தல் களத்தில் சில நடிகர்களே இறங்கியிருக்கிறார்கள்.

பிரபல நடிகர் முகேஷ் கடந்த முறை தான் வென்ற ‘கொல்லம்’ தொகுதியிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

நடிகரும், தற்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்கும் சுரேஷ் கோபி பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ‘திருச்சூர்’ தொகுதியில் போட்டியிடுகிறார்.

நகைச்சுவை நடிகர் தர்மராஜன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘பாலுச்சேரி’ தொகுதியில் போட்டியிடுகிறார்.

நடிகர் கிருஷ்ணகுமார் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ‘திருவனந்தபுரம்’ சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நடிகர் கே.பி.கிருஷ்ணகுமார் ‘பத்தனாபுரம்’ சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரபல பின்னணிப் பாடகியான தலீமா ஜோஜோ ‘அரூர்’ சட்டப் பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இதே சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல டிவி நடிகையான பிரியங்கா அனூப் சுபேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தொலைக்காட்சி நடிகரான விவேக் கோபன் சவரா’ சட்டப் பேரவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

‘பழ’ என்ற தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் தயாரிப்பாளரும், கதாசிரியருமான மணி சி.காப்பானுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாததால் அவர் அதே தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

மேலும் நடிகர் சுரேஷ் கோபியுடன் நடிகர் தேவனும் பாரதீய ஜனதாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகர் ஜெயராம் இருவரும் பாரதீய ஜனதா கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நடிகர்கள் ஜெகதீஷும், ரமேஷ் பிஷ்ரோடியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இவர்களுடன் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா’ அமைப்பின் செயலாளரான எடவலா பாபுவும், இயக்குநர் மேஜர் ரவியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் டிவென்டி 20 என்ற பெயரில் ஒரு புதிய கட்சி இந்தத் தேர்தலில் குதித்துள்ளது. இந்தக் கட்சிக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில் பிரபல நடிகரான சீனிவாசனும், பிரபல இயக்குநரான சித்திக்கும் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கிடையில் கேரளாவின் பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான மெட்ரோ ஸ்ரீதரனுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீதரனின் மிகச் சிறப்பான செயல்பாடுகளால், திறமையான நிர்வாகத்தினால் பல மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால் அவரைப் போன்றவர்கள் நிச்சயமாக கேரளாவில் பொது வாழ்க்கைப் பணியில் ஈடுபட வேண்டும். அதனால் அவருடைய வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்…” என்று நடிகர் மோகன்லால் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் மோகன்லால் இதனைக் குறிப்பிட்டுள்ளதால் தற்போது அங்கே பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது. கட்சியினர் முணுமுணுப்பும் கூடியுள்ளது. இருந்தும் காங்கிரஸுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிக்கும் இடையே வாழ்வா, சாவா போராட்டம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

 
Our Score