full screen background image

மலையாள நடிகர் சங்கத் தேர்தல் பெரும் கூச்சல், குழப்பத்துடன் நடந்து முடிந்தது..!

மலையாள நடிகர் சங்கத் தேர்தல் பெரும் கூச்சல், குழப்பத்துடன் நடந்து முடிந்தது..!

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் 2024-2027-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பலத்த கூச்சல், குழப்பத்திற்கிடையே இன்று தேர்வு செய்யப்பட்டனர்.

‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முதலில் மோகன்லால் தலைவராக நீடிக்க விரும்பவில்லை என்று செய்திகள் பரவின. அதேபோல் சங்கத்தில் கடந்த 25 வருடங்களாக செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகர் எடவலா பாபு, தான் இந்த முறை தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.

இதனால் ‘அம்மா’ அமைப்பிற்கு புதிய தலைவர், செயலாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மலையாள திரையுலகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக மோகன்லால் மீண்டும் தலைவராக இருப்பதற்கு சம்மதித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த இடைவெளியில் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலும் தொடங்கிவிட்டது. தலைவர் பதவிக்கு நடிகை குக்கூ பரமேஸ்வரன், நடிகர்கள் அனூப் சந்திரன், ஜெயன் சேர்தலா மூவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

மோகன்லாலின் மனமாற்றத்திற்குப் பிறகு இந்த மூவரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியதால் மோகன்லால் எதிர்ப்புகளே இல்லாமல், போட்டியின்றி ‘அம்மா’ அமைப்பின் தலைவராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல், பொருளாளர் பதவிக்கு நடிகர் உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மற்றைய பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது.

செயலாளர் பதவிக்கு நடிகர் சித்திக், நடிகை குக்கூ பரமேஸ்வரன், உன்னி சிவபால் மூவரும் போட்டியிட்டனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு நடிகர் ஜெகதீஷ், நடிகை மஞ்சு பிள்ளை, நடிகர் ஜெயன் சேர்தலா மூவரும் போட்டியிட்டனர்.

இணைச் செயலாளர் பதவிக்கு நடிகர்கள் பாபுராஜூவும், அனூப் சந்திரனும் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் அனன்யா, அன்ஸிபா ஹாசன், சரயு மோகன், நடிகர்கள் டொவினோ தாமஸ், டினி டாம், வினு மோகன், ஜாய் மேத்யூ, கலாபவன் ஷாஜோன், ரமேஷ் பிஸ்ராடி, ரோனி டேவிட், சூரஜ் வஜ்ரமூடு, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் போட்டியிட்டனர்.

புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை கொச்சியில் கோகுலம் கன்வென்சன் சென்டரில் கூடிய ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 498 உறுப்பினர்களில் 337 பேர் கலந்து கொண்டனர். தேர்தல் முடிந்து சில மணி நேரங்களிலேயே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் சித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக நடிகர்கள் ஜெகதீஷூம், ஜெயன் சேர்தலாவும் தேர்வானார்கள்.

இணைச் செயலாளர் பதவிக்கு பாபுராஜ் தேர்வானார்.

ஆனால் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவை அறிவிப்பதில்தான் சிக்கல் எழுந்தது.

‘அம்மா’ அமைப்பின் சட்ட விதிகளின்படி மொத்தமுள்ள 17 பதவிகளில் 4 பேர் பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் இந்தத் தேர்தலில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை குக்கூ பரமேஸ்வரனும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளையும் தோல்வியடைந்துவிட்டனர்.

இதனால் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட 3 நடிகைகளையுமே தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் செயற்குழுவிற்குப் போட்டியிட்ட நடிகைகள் அன்ஸிபா ஹாசன், சரயூ மோகன் இருவரும் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று பட்டியலில், கடைசி இரண்டு இடங்களைப் பிடித்திருந்ததால் அவர்களைத் தேர்வு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

வாக்குப் பதிவின்படி காலாபவன் ஷஜோன் 294 வாக்குகள். சூரஜ் வஜ்ரமூடு 289 வாக்குகள், ஜாய் மாத்யூ 279 வாக்குகள், சுரேஷ் கிருஷ்ணா 275 வாக்குகள், டினி டாம் 274 வாக்குகள், அனன்யா 271 வாக்குகள், வினு மோகன் 271 வாக்குகள், டொவினோ தாமஸ் 267 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இதனை தேர்தல் நடத்திய அலுவலர் அரங்கத்தில் தெரிவித்தவுடன் கூச்சலும், குழப்பமும் நிலவியது. கூட்டத்துக்கு வந்திருந்த நடிகைகளில் பலரும் “தங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பெண்களுக்கு 4 இடங்கள் கண்டிப்பாகத் தேவை” என்று குரல் எழுப்பினார்கள்.

ஆனால் வெற்றி பெற்றிருந்த மற்றைய நடிகர்களுக்காகப் பரிந்து பேசிய சில நடிகர்கள் “தேர்தலில் தோல்வியடைந்தால் தோற்றது போலத்தான். அவர்களை தேர்வு செய்யக் கூடாது” என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

புதிய செயலாளர் சித்திக்கும், துணைத் தலைவர் ஜெகதீஷூம் இரு தரப்பையும் சமாதானம் செய்தாலும் அரை மணி நேரமாக அந்த அரங்கத்தில் இந்தப் பிரச்சினை சூடு பிடித்து வாக்குவாதமாக மாறியது.

கடைசியாக வெற்றி பெற்றிருந்த நடிகர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக தோல்வியடைந்த நடிகைகளான அன்ஸிபா ஹாசனையும், சரயூ மோகனையும் செயற்குழுவில் சேர்க்கலாம் என்று பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி இத்தேர்தலில் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நடிகைகள் அனன்யா, அன்ஸிபா ஹாசன், சரயு மோகன், நடிகர்கள் சூரஜ் வஜ்ரமூடு, டொவினோ தாமஸ், டினி டாம், வினு மோகன், ஜாய் மேத்யூ, கலாபவன் ஷாஜோன், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் உண்மையாக வெற்றி பெற்றிருந்த நடிகர்கள் ரமேஷ் பிஷ்ராடியையும், ரோனி டேவிட்டையும் செயற்குழுவில் சேர்க்க முடியாமலும் போய்விட்டது.

செயற்குழுக் கூட்டத்தில் 4-வதாக இருக்க வேண்டிய பெண் பிரதிநிதி யார் என்பதை இந்தப் புதிய நிர்வாகக் குழுவின் முதல் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு முன்பாக “பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அம்மா அமைப்பில் வழங்கப்படவில்லை” என்று போர்க் குரல் எழுப்பி சண்டையிட்டு மீடியாவை வரவழைத்து அவர்கள் முன்பாகவே மோகன்லாலிடம் பஞ்சாயத்தெல்லாம் செய்த நடிகைகள் ரேவதியும், பத்மப்பிரியாவும் இன்றைய கூட்டத்திற்கும் வரவில்லை. ஓட்டும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score