full screen background image

கால் டாக்ஸி – சினிமா விமர்சனம்

கால் டாக்ஸி – சினிமா விமர்சனம்

கே.டி.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கபிலா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க… அவருக்கு ஜோடியாக  மெர்லின்’, ‘மரகத  காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’,  ‘ஜீவி’, போன்ற  படங்களில்  நடித்த  அஸ்வினி நடித்திருக்கிறார். 

மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன் பாப், இயக்குர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி  கணேஷ், பசங்க’  சிவகுமார்,  முத்துராமன், ‘பெல்லி’ முரளி,  சந்திரமௌலி,  ‘போராளி’  திலீபன்,  சேரன் ராஜ் மற்றும் அஞ்சலி தேவி  ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

நடன  இயக்கம் –  இராபர்ட்,  இருசன், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரிமுருகன்,  படத் தொகுப்பு – டேவிட் அஜய்,  ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை,  பாடல்கள், இசை -பாணன், எழுத்து, இயக்கம் – பா.பாண்டியன்.

நாடு முழுவதும் கால் டாக்ஸி  டிரைவர்கள்  தொடர்ந்து  கொலைகள்  செய்யப்படுவதின்  பின்னணியில்  உள்ள  ஒரு உண்மைச்  சம்பவத்தை  மையமாக  வைத்து,  சஸ்பென்ஸ்  திரில்லர்  கலந்த  திரைப்படமாக இது உருவாகியுள்ளது. 

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார் நாயகன் சரவணன் என்ற சந்தோஷ் சரவணன். நகரில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வரிசையாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாயகனின் காரில் பயணம் செய்யும் நாயகிக்கு, நாயகனின் குணத்தைப் பார்த்ததும் சினிமா காதல் வந்துவிடுகிறது. இந்தக் காதலை ஏற்றுக் கொள்வதா… வேண்டாமா என்ற சில, சில மனத் தாங்கல்களுக்குப் பிறகு நாயகன் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அந்த நேரத்தில் நாயகன் தான் சென்றிருக்க வேண்டிய ஒரு சவாரியை தன்னுடைய இன்னொரு நண்பருக்கு மாற்றி விடுகிறார். அந்த நண்பரை கால் டாக்சியில் பயணித்த கொலைகாரர்கள் கொலை செய்து காரை கடத்திச் சென்று விடுகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட நண்பரின் குடும்பம் அம்போவென்று நிற்பதால் நாயகன் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகுகிறார். தன்னால்தான் அந்த நண்பர் அநியாயமாக இறந்திருக்கிறார் என்பதை உணர்ந்து தூக்கம் வராமல் தவிக்கிறார்.

குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறையில் முயற்சிகளே எடுக்காமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய நாயகன், அந்தக் கொலையைச் செய்தவர்களைக் கண்டறிய அவரே முயற்சிக்கிறார். இடையில் காவல் துறையிலும் இந்தக் கொலையைக் கண்டறிய புதிய டீம் ஒன்றை அமைத்து விசாரிக்கிறார்கள்.

இப்படி நாயகன் சந்தோஷூம், தனிப்படைபோலீஸாரும் இரு வேறு திசைகளில் குற்றவாளிகளை தேடிச் செல்கின்றனர். இறுதியில் குற்றவாளிகளை கைது செய்தார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

டிரைவராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் தனக்கு வந்த அளவுக்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநரும் ரொம்பவும் மெனக்கெடாமல் திரைக்கதைக்கு ஏற்றபடி நாயகனின் நடிப்பைக் காண்பிக்க வைத்திருக்கிறார்.

நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஏற்கெனவே படங்களில் நடித்த அனுபவத்துடன் தனது இன்முகத்தையும், அழகையும் காட்டியிருக்கிறார். இவர் நடிப்பும் சராசரிதான். நடிப்புக்கேற்ற ஸ்கோப்பும் திரைக்கதையில் இல்லாததால் இவரைக் குற்றம் சொல்லவே முடியாது.

நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன்பாப், இயக்குநர் ஈ.ராமதாஸ், கணேஷ், ‘பசங்க’ சிவக்குமார், முத்துராமன், ‘சினிமா லீ’ கார்த்திக், ‘பெல்லி’ முரளி, சந்திரமௌலி, ‘போராளி’ திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி என்று துணை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கூடியிருக்க.. அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பினைக் காண்பித்திருக்கிறார்கள்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் கணேஷ் சம்பந்தப்பட்ட இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் இந்தப் படத்தின் தன்மையை வெகுவாகக் குலைக்கிறது. அதனை எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. நகைச்சுவையும் வரவில்லை. கதைக்குப் பொருத்தமாகவும் இல்லை. இணைப்பாகவும் இல்லை. பின்பு எதற்கு அது..?

வில்லனாக நடித்திருப்பவரின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. ஏதோ வலிந்து நடிக்க வைத்ததுபோல வில்லன் கோஷ்டியின் நடிப்பை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

சின்னப் பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கும் கிடைத்திருக்கிறது. இசையமைப்பாளர் பாணரின் இசையில் ‘கிக்கு செம கிக்கு’ பாடல் ஓஹோ ரகம். இந்தாண்டின் அதிரிபுதிரி மசாலா ஹிட் இந்தப் பாடலாகத்தான் இருக்கும். பாடல் வரிகளும், நடனமும் அசத்தல். பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் இந்தப் பாடலை ‘ஏ’ தரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. ‘உன் வாசமே’ பாடலும் நல்ல மெலடிதான்.

மொத்தமாய் திரைப்படம் ஒரு சராசரி கமர்ஷியல் படமாக அமைந்திருந்தாலும் கார் திருட்டுக் கும்பலின் நடவடிக்கைகள் மொத்தத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கும் அளவுக்கான திரைக்கதை இல்லாததால் படம் நடுவில் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அல்லாடுகிறது.

கார் திருட்டுக் கும்பலின் செயற்கைத்தனமான நடிப்புதான் அந்த வில்லன்களை வில்லன்களாகவே ஏற்க முடியாமல் போகிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியை பட்ஜெட் கருதி சின்னதாக படமாக்கியிருப்பதால் அது மனதில் நிற்கவில்லை. ஆனால் அந்த டிவிஸ்ட் ஓகேதான். அந்த டிவிஸ்ட்டை சொன்னவிதமும் குறைவான இயக்கத்தில் செய்யப்பட்டிருப்பதால் நம் மனதைத் தாக்கவில்லை.

இந்தக் ‘கால் டாக்சி’ சாதாரணமான ஒரு கமர்ஷியல் படம்தான். ஆனால் ஸ்பீடு இல்லை..!

Rate : 3/5

 
Our Score