full screen background image

எனக்கு எண்டே கிடையாது – சினிமா விமர்சனம்

எனக்கு எண்டே கிடையாது – சினிமா விமர்சனம்

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.  

அறிமுக இயக்குநரான விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலா சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி-2’, ‘யாத்திசை’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத் தொகுப்பை வேல்முகனும், கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார்.

ஆக்சன் ரியாக்சன் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

ஓசியில் குடிக்க நினைக்கும் ஒரு வாலிபருக்கும், திருட வந்த ஒரு வாலிபனுக்கும், சபல புத்தியுடன் வரும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் ஒரு வீட்டில் கிடைக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

கார்த்திக் கால் டாக்சி டிரைவர். ஒரு நாள் இரவில் நாயகி ஸ்வயம் சித்தாவை அவரது வீட்டில் டிராப் செய்கிறார். ஸ்வயம் சித்தா இன்று தனது வீட்டில் தன்னுடன் அமர்ந்து ‘கட்டிங்’கிற்கு கம்பெனி கொடுக்கும்படி கார்த்திக்கை அழைக்கிறார். ஓசி கட்டிங்கிற்கு ஆசைப்பட்டு ஸ்வயம் சித்தாவின் வீட்டுக்குள் நுழைகிறார் கார்த்திக்.

அங்கே கார்த்திக்கிற்கு ஓசியில் ‘டக்கீலா’ கிடைக்கிறது. முடிந்தவரைக்கும் குடிக்கிறார் கார்த்திக். கூடவே தொட்டுக் கொள்ள ஸ்வயம் சித்தா, தன்னையே தருகிறார். எதிர்பாராத  இன்ப அதிர்ச்சியில் அதையும் ஏற்கிறார் கார்த்திக்.

வீட்டுக்குக் கிளம்பும் தருணத்தில் ஸ்வயம் சித்தாவுக்கும், கார்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளுமுள்ளாக, சோபாவில் விழுகிறார் ஸ்வயம் சித்தா. விழுந்த அதிர்ச்சியில் மயக்கமாகிறார் ஸ்வயம் சித்தா.

எலெக்ட்ரானிக் லாக் போடப்பட்டிருந்ததால் கார்த்திக்கால் அந்த வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை. பாஸ்வேர்டு கேட்கிறது. கார்த்திக்குத் தெரியாததால் வெளியேற முடியாமல் தவிக்கிறார். அதே நேரம் அதே வீட்டில் வேறொரு அறையில் ஒரு ஆண் இறந்து கிடக்கிறார். இதைப் பார்த்தும் அதிர்ச்சியாகிறார் கார்த்திக்.

இந்த நேரத்தில் விக்ரம் ரமேஷ் முகமூடி அணிந்து கொண்டு அந்த வீட்டிற்குள் திருட வருகிறார். பாஸ்வேர்டு போட்டு உள்ளே வருபவர் வீட்டை சோதனையிடுகிறார். எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ளேயிருக்கும் கார்த்திக்கை பார்த்துவிடுகிறார் விக்ரம் ரமேஷ். இருவரும் முதலில் மோதி பின்பு உண்மை தெரிந்து நட்பாகிறார்கள்.

அந்த நேரத்தில் மூன்றாவது நபராக எம்.எல்.ஏ.வான மஸ்தான் கை நிறைய பணத்துடன், ஸ்வயம் சித்தாவைப் பார்க்க வருகிறார். அவருக்கும் வீட்டின் பாஸ்வேர்டு தெரிந்திருக்கிறது. அவரும் உள்ளே வந்துவிட்டார்.

அவர் வந்த பின்புதான் ஸ்வயம் சித்தா இறந்து கிடப்பதே தெரிய வருகிறது. ஏற்கெனவே உள்ளேயிருக்கும் கார்த்திக், விக்ரம் ரமேஷ் இருவருடனும் மஸ்தானுக்கு மோதல் ஏற்படுகிறது. பின்பு நட்பாகி, எப்படி இந்த வீட்டில் இருந்து வெளியேறுவது என்று யோசிக்கிறார்கள்.

கார்த்திக் அந்த லாக்கில் பல முறை பல பாஸ்வேர்டுகளை போட்டு முயற்சி செய்ததால் அடுத்த பாஸ்வேர்டு முயற்சியை நாலரை மணி நேரம் கழித்துதான் செய்ய முடியும் என்று தெரிகிறது.

இப்போது வீட்டிற்கு உள்ளே ஸ்வயம் சித்தா மற்றும் ஒரு ஆண் பிணமாகக் கிடக்க.. விக்ரம் ரமேஷ், கார்த்திக், மஸ்தான் மூவரும் உள்ளே சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் யார் தப்பிக்கிறார்கள்…? யார் மாட்டிக் கொள்கிறார்கள்…? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

நடிகர்களில் கார்த்திக், விக்ரம் ரமேஷ். ‘மஸ்தானாக’ நடித்திருக்கும் சிவக்குமார் ராஜூ மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடிப்பதற்கு முன் ஒரு நடிப்பு, குடித்த பின்பு ஒரு நடிப்பு என்று இரண்டு வேறுபட்ட நடிப்பை மூவருமே காட்டியிருக்கிறார்கள். சிவக்குமார் ராஜூ அந்த இருவரைப் பற்றி விசாரிக்கும்போது பல இடங்களில் நகைச்சுவை தெரிக்கிறது.

ஸ்வயம் சித்தா டக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷை செய்து காட்டும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அந்தக் ‘கிக்’கில் கார்த்திக் சொக்கிப் போனதில் ஆச்சரியமில்லைதான். அத்தனை நேரம் பிணமாகக் கிடப்பதென்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஸ்வயம் சித்தா அழகாக அதைச் செய்திருக்கிறார். அவர் படுக்க வைக்கப்பட்டிருக்கும்விதமே ஒரு அழகுதான்..!

ஸ்வயம் சித்தாவின் கணவராக நடித்தவரின் கடைசிக் கட்ட நடிப்பும் அசத்தல். அவரது ஒவ்வொரு அசைவும், படம் பார்ப்போரை அசையவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளது.

ஒரே வீட்டுக்குள் மொத்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது என்பதால் பல முறை திட்டமிடப்பட்டு கச்சிதமாக படத்தை எடுத்திருக்கிறார்கள். இதற்குத் தொழில் நுட்பக் கலைஞர்கள் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரின் கலர் டோனே கண்ணைக் கட்டுகிறது. அத்தனை அழகாய் இரவுக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதில் ஸ்வயம் சித்தாவின் அழகையும்கூட கூடுதல் அழகாக்கிக் காட்டியிருக்கிறார்.

ஸ்டண்ட் மாஸ்டர ஓம் பிரகாஷ் மாஸ்டர் வீட்டுக்குள் நடக்கும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்துள்ளார். இந்த சண்டை காட்சியையும், துப்பாக்கி சுடுதல் சண்டையையும் சஸ்பென்ஸ், திரில்லராகப் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

கலை இயக்குநரின் கை வண்ணத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அத்தனையும் அந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத் தொகுப்பாளர் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் இருக்கும் வண்ணம் தொகுத்தளித்துள்ளார். இசையைவிடவும் பின்னணி இசைதான் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு சின்னக் கதையை வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையில், நடிக்கத் தெரிந்த நடிகர்களை வைத்து மிகக் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துக் காட்டியிருக்கும் இந்த இயக்குநர் குழுவுக்கு நமது வாழ்த்துகள்..!

ஆனாலும் குடியை விதந்தோதுவது போலவும், பெண்களின் குடிப் பழக்கம் மற்றும் கள்ளத் தொடர்புகள் பற்றி, கவலைப்படாத வகையில் திரைக்கதை அமைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறோம்.

கதைகளில் வித்தியாசம் வேண்டும்தான். ஆனால் அது சமூகத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதை இயக்குநருக்கு அறிவுரையாகச் சொல்லிக் கொள்கிறோம்.

ஒரு செமையான சஸ்பென்ஸ், திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புவர்கள் தாராளமாக இந்தப் படத்தைப் பார்த்து மகிழலலாம்!

RATING : 4 / 5

Our Score