full screen background image

‘ஷாட் பூட் த்ரீ’ – சினிமா விமர்சனம்

‘ஷாட் பூட் த்ரீ’ – சினிமா விமர்சனம்

பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் ‘நிபுணன்’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், ‘சீதக்காதி’ இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் அடுத்தப் படம் இது.

இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருணாச்சலம் வைத்தியநாதன தயாரித்து இயக்கியிருக்கிறார்.

சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் பூவையார், பிரணிதி, கைலாஷ் ஹீத், வேதாந்த், அருணாச்சலம் வைத்தியநாதன், சாய் தீனா, கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – அருணாச்சலம் வைத்தியநாதன், திரைக்கதை – ஆனந்த் ராகவ், அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீநிவாசன், இசை – வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை இயக்கம் – ஆறுசாமி, சண்டை இயக்கம் – சுதீஷ், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

“அன்புக்குப் பஞ்சமில்லை..” என்பதுதான் இந்தப் படத்தின் சாராம்சம். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும்.

அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின்  உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான  திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும். பொதுவாக குழந்தைகளை வைத்து படத்தை இயக்குவது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இந்தப் படத்தை தனது இயக்குதல் திறமையால் மிக எளிதாக எடுத்துள்ளார் இயக்குநர்.

இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். அப்படியொரு கதை, திரைக்கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சென்னையில் மிகப் பெரிய பணக்காரர்கள் வசிக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் கைலாஷ், பிரணதி, வேதாந்த் மூவருமே ஒரே வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர்கள்.

கைலாஷின் பெற்றோரான வெங்கட் பிரபுவும், சினேகாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரிகளாக வேலை செய்பவர்கள். மகனுடன் நேரத்தை செலவிடக்கூட முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார்கள்.

இதனால் தனக்கு விளையாடுவதற்குத் தோழனாக ஒரு தம்பியோ, தங்கையோ வேண்டுமென்கிறான் கைலாஷ். பெற்றோர்கள் மறுக்கிறார்கள். “அப்படீன்னா ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொடுங்க…” என்கிறான் கைலாஷ். அதற்கு அம்மாவான சினேகா மறுத்தாலும் அப்பாவான வெங்கட் பிரபு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் நாய்க்குட்டி வீட்டுக்கு வர தாமதமாவதால், கைலாஷ் தானே சென்று ஓரிடத்தில் நாய்க்குட்டியை வாங்கி வருகிறான். சினேகா இதை எதிர்த்தாலும், அப்பாவும், மகனும் கொடி பிடிக்கவே அவரும் ஒத்துக் கொள்கிறார்.

நாய்க்குட்டி வீட்டுக்கு வந்து ஒரு வருடமான நிலையில் நன்கு வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு நாள் சினேகாவும், வெங்கட் பிரபுவும் வெளியூருக்குச் சென்றுவிட்டு இரவே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த நாய் வெளியில் ஓடுகிறது. ரோட்டுக்கு வந்தது வீட்டுக்கு வர மறந்துபோய் அங்கங்கே ஓடிக் கொண்டேயிருக்கிறது. நாயைக் காணாமல் தேடுகிறார்கள் மூன்று பேரும்.

வீட்டுக்குச் சொல்லாமல் நாமளே தேடிக் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லி மூவரும் ரோடு, ரோடாக சென்று தேடத் துவங்குகிறார்கள். விடிந்தால் தீபாவளி என்று ஊரே அல்லலோகப்பட்டுக் கொண்டிருக்க.. இவர்கள் நாயைத் தேடி அலைந்து கொண்டிருக்க.. நாய் கிடைத்ததா..? இவர்கள் தீபாவளியை கொண்டாடினார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

படத்தில் அதிகக் காட்சிகளில் நடித்திருக்கும் பிரணிதி, கைலாஷ் ஹீத், வேதாந்த் மூவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைலாஷ் “எனக்குத் தம்பி பாப்பா வேணும்..” என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் கேட்பதை ரசிக்க முடிந்தது. அதேபோல் நாய் வளர்ப்புப் பற்றிப் பேசும்போது மேட்டிங் பற்றியும் சொல்லிவிட.. பெற்றோர்கள் ஷாக் ஆக, நாமும் சேர்ந்து சிரித்துவிடுகிறோம்.

நாய் வேண்டும் என்ற பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருக்கும் காட்சிகளில் மூவருமே நம் மனதைத் தொடுகிறார்கள். முதலில் தவறாக நினைத்து பேசிவிட்ட லோக்கல் கால்பந்து வீரர்களிடம் பிரணிதி கடைசியாக ஸாரி கேட்பது நெகிழ வைக்கிறது.

செல்போன் திருடனை பிரணிதியின் கிண்டலால் சூடேறிப் போன வேதாந்த் போட்டுத் தாக்குவதும் அலப்பறையான காட்சி. அதேபோல் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது போன்ற அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரசனையானது.

கண்டிப்பான அம்மா கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறது சினேகாவின் நடிப்பு. புன்னகை இளவரசியின் அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்க வேண்டும். வெங்கட் பிரபுவின் சமயோசித அப்பா கதாப்பாத்திரம், எல்லார் வீட்டிலும் நடப்பதுதான். இதனாலேயே இவரை ரசிக்க முடிந்திருக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு கிளைக் கதையில் நடித்திருக்கும் யோகி பாபு, அவரது அம்மா, மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக சுவையானவை. எதிர்பாராதவை. ஒரு முழு நீளப் படமாக எடுக்கக் கூடிய அளவுக்கான ஸ்பேஸ், இவர்களின் வீட்டுக் கதையில் இருக்கிறது.

மற்றும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளைச் செய்யும் பூவையார், நாய் கடத்தலில் பங்கெடுக்கும் சாய் தீனா, பையன்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் கார்ப்பரேஷன் ஆபீஸ் வாட்ச்மேன் கவிதாலயா கிருஷ்ணன் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீநிவாசன். நாய் தேடுதல் வேட்டையில் மாண்டேஜ் காட்சிகளுடனேயே இரவு நேர சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறார்.

ராஜேஷ் வைத்யாவின் இசையில் பாடல் வரிகள் தெளிவாகக் காதில் விழுக.. ரகளையாக இருக்கின்றன பாடல்கள். கலை இயக்குநர் ஆறு சாமி படத்தின் தன்மைக்கேற்ப அபார்ட்மெண்ட்டின் உட்புறத்தையும், நாய்களை அடைத்து வைக்கும் இடத்தையும் வித்தியாசமாக வடிவமைத்து பாராட்டுதல்களைப் பெறுகிறார். சண்டை பயிற்சியாளர் சுதீஷின் தலைவலி வராத ஆக்சன் காட்சிகளுக்காக அவருக்கு நமது நன்றிகள்.

சிறுவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதைப் போல், அவர்களாலேயே ஒரு விஷயத்தை செய்து முடிக்க முடியும் என்ற தைரியத்தைச் சொல்வதைப் போல, இந்த தேடுதல் வேட்டையை அவர்களை வைத்தே நடத்திக் காட்டியிருக்கும் இயக்குநரின் எழுத்துத் திறமையையும், இயக்கத் திறமையையும் மனதாரப் பாராட்டுகிறோம்..!

குடும்பத்துடன் காண வேண்டிய திரைப்படம் இது..! மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4.5 / 5

Our Score