full screen background image

ட்ரீம் கேர்ள் – சினிமா விமர்சனம்

ட்ரீம் கேர்ள் – சினிமா விமர்சனம்

திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞன், இளைஞிகள் அனைவருக்குமே ஒரு கனவு பெண்ணோ.. கனவு ஆணோ.. நிச்சயம் இருப்பார்கள். தாங்கள் விரும்பும் கனவு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் சிந்திக்கலாம். அதேபோல் பெண்களும் தங்களுடைய கனவு ஆண்களை சிந்திப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அது கிடைக்காது.

அதற்குப் பின் கண்ட கனவை ஓரங்கட்டி வைத்துவிட்டு நேரில் வந்த பெண்ணையும், ஆணையும் எப்படி இருந்தாலும் கல்யாணம் செய்து கொண்டு அவர்களுடன் மல்லுக் கட்டுவதுதான் உலகளாவிய மனிதர்களின் வாழ்க்கை முறை.

ஆனால் என்றேனும் ஒரு நாள் நீங்கள் கனவில் கண்ட ஒரு பெண், உங்கள் கண்ணெதிரே வந்து நின்று விட்டால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்கும் நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் இந்த ட்ரீம் கேர்ள் படத்தின் கதைக் கரு.

ஹீரோவான ஜீவா திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தான் எழுதி இருக்கும் கதைக்குப் பொருத்தமான கதாநாயகியை தேர்வு செய்யவும் அலைந்து கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருடைய மனக் கண்ணில் ஒரு பெண் கிடைக்க அந்தப் பெண்ணை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பவர் ஒரு கட்டத்தில் அவள் மீது காதல் வயப்படுகிறார்.

அந்தப் பெண்ணுக்கு படகியாக வேண்டும் என்ற பெரும் ஆசை. அதனால் தன்னுடைய காதலிக்குத் தான்தானே உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து யுவன் சங்கர் ராஜாவிடம் பேசி காதலிக்கு பாடும் வாய்ப்பையும் பெற்று தருகிறார் ஜீவா.

இந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பாய் பிரண்டு இருக்கிறான். அவன் இப்போது இந்தப் பெண்ணை சந்தேகப்படுகிறான். இயக்குநரோடு தன் காதலி ஓடி விடுவாளோ.. நம்மை மறந்து விடுவாளோ என்ற பயப்படுகிறான்.

ஒரு சமயத்தில் அந்தப் பெண் ரயிலில் அடிபட்டு இறந்து போகிறார். செய்தி கேட்டு அதிர்ச்சியாகும் ஜீவா சட்டென்று கண் முழித்துப் பார்க்கும்போது இதுவரையிலும்  தான் கண்டது ஒரு கனவு என்பது புரிகிறது.

தன்னுடைய கனவிலேயே இவ்வளவு தூரம் தன்னுடைய பட வேலையை கொண்டு வந்துவிட்டோமோ என்று நினைத்து சந்தோஷப்படும் இயக்குநர் ஜீவா பின்பு அந்தக் காதலியை நினைத்து வருத்தப்படுகிறார்.

இப்பொழுது நிஜ வாழ்க்கையில் ஜீவா ஒரு தயாரிப்பாளரை தேடிப் பிடித்துக் கதை சொல்ல அந்தத் தயாரிப்பாளர் படம் தயாரிக்க சம்மதிக்கிறார். “நான் ஒரு பெண்ணை ஏற்கனவே பார்த்து வைத்திருக்கிறேன். இந்தப் பெண்ணைத்தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று சொல்லி இயக்குநர் ஜீவாவிடம் அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கிறார்.

வந்த பெண்ணை பார்த்த ஜீவாவுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி. தான் கனவில் பார்த்த அதே பெண்தான் கண்ணெதிரே வந்து இன்றைக்கு நிஜமாக நிற்கிறார் என்பதை பார்த்தவுடன் ஜீவவால் நம்ப முடியவில்லை.

ஆனாலும், இவளை வைத்துதான் படத்தை இயக்கப் போகிறேன். இவள்தான் தன்னுடைய படத்தை நாயகி என்று உறுதிப்படுத்திக் கொண்டு அந்த பெண்ணையும் வைத்துக் கொண்டு திரைப்பட வேலைகளை துவங்குகிறார்.

போகப்போக இருவருக்கும் காதல் உருவானாலும் ஜீவாவின் சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது எங்கே போய் முடிந்தது இருவருக்கும் திருமணம் நடந்ததா இல்லையா அவர் கனவில் கண்ட பெண் நிஜ வாழ்க்கையில் எப்படி அவரிடம் வந்து சேர்ந்தாள்.. இது போன்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜீவா இயக்குநர் சொல்லிக் கொடுத்தது போலவே நடித்திருக்கிறார். அவருக்கு எது வருமோ அதை மட்டும் சரியாக செய்திருக்கிறார். இயக்குநரும் தன்னால் முடிந்த அளவுக்கு அவரிடம் இருந்து நடிப்பை வரவழைத்து இருக்கிறார். இன்னமும் சிறப்பாக நடித்திருக்கலாம். நடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் நமக்கும் தோன்றுகிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஹரிசுமிதா இப்போதைய  காலகட்டத்துக்கு ஏற்ற மாடர்ன் பெண்ணாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் அவர் அணிந்திருந்த நவீன ஆடைகள்தான். கூடுதலாக நடிப்பும் அந்தக் கண்ணாடியும் அவரை ஹீரோயினாக அங்கீகரித்துள்ளது.

மேலும் படத்தில் மற்றைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துருவன், இந்திரா, பிரபு சாஸ்தா போன்றவர்களும் புதுமுகங்கள் என்பதால் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ் கதை நடக்கும் ஊட்டியை குளுகுளுவாக காட்டி இருக்கிறார். இன்னும் நிறைய இடங்களில் படம் எடுத்திருக்கலாம். ஆனால் எடுத்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் எடுப்பது போன்ற ஒரு சலிப்பு உணர்வை நமக்கு வந்துவிட்டது.

இளமாறனின் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும் அதையும் அழகாக இசைத்திருக்கிறார். ஆனால், வெளியில் வந்தவுடன் மறந்துவிட்டது என்பதும் உண்மைதான். பின்னணி இசையில் மற்ற பிரபல இயக்குநர்களே செய்யாத ஒரு விஷயத்தை சிற்சில இடங்களில் பின்னணி இசை இல்லாமல் செய்து படத்தை நகர்த்தி இருக்கிறார்.

கனவில் வந்தவள் எதிரில் வந்தால் என்ன நடக்கும் என்கின்ற ஒரு வரி திரைக்கதையை வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கும் கதாசிரியர்கள் தமிழரசன், கிருத்திகா தாஸ் இருவரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகளை வைத்திருக்கலாம்.

அது எதுவுமில்லாமல் படம் துவக்கத்திலிருந்து கடைசிவரையிலும் ஒரே பார்மெட்டில் போவது போல தெரிகிறது. அதேபோல் வசனங்களும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அமையாதது இயக்குநரின் துரதிர்ஷ்டம்.

இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் பாரதி காதலில் ஒரு புதுமையான விஷயத்தை சொல்லி இருக்கிறோம் என்கின்ற திருப்தியோடு இந்தப் படத்தை தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத் திறமையினால் இயக்கி கொடுத்திருக்கிறார்.

ஆனால், இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும் அந்தக் காதல் இப்போதைய இளைய தலைமுறையினருக்கு ஓல்ட் ஃபேஷன் என்பார்களே அது போல் உள்ளது.

ட்ரீம் கேர்ள் உண்மையிலேயே ட்ரீம் கேர்ள்தான்!

 RATING : 2 / 5 

Our Score