ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் – அர்ஜுன் சர்ஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே ஏதோ ஒரு காரணத்தோடுதான் நடக்கிறது என்பது பொதுவான நீதி. ஒரு நொடி தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். அதே ஒரு நொடி தாமதத்தால் வாழ்க்கையை பெற்றவர்களும் அதிகம்.
ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லாமல் வீட்டில் இருந்து கிளம்பும்போது ஏற்படும் தாமதம் பல பிரச்சனைகளை கொண்டு வரும். அதேபோல் சில வகையான தாமதங்கள் செல்பவரின் உயிரையே காப்பாற்றிக் கொடுக்கும்.
இப்படியான நம்ப முடியாத சில முரண்பாடுகள் நம்முடைய வாழ்க்கையில் நாம் பலமுறை சந்தித்திருப்போம். அப்படி ஒரு நிகழ்வை சந்திக்கும் ஒரு இளம் பெண் அதன் பின்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொள்கிறார் என்பதுதான் இந்த சீதா பயணம் படத்தின் கதைக் கரு.
பெரும் கோடீஸ்வரரன சத்யராஜின் ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். சத்யராஜ் மனைவி ஐஸ்வர்யா சிறு குழந்தையாக இருக்கும்பொழுது ஒரு தீ விபத்தில் இறந்துவிட்டார். இந்த நிகழ்வு ஐஸ்வர்யாவின் மனதில் இப்போது வரையிலும் இது ஒரு இனம் புரியாத வருத்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் கல்யாண வயது கடந்து பின்பும் கல்யாணம் பற்றிய செய்தி சிந்தனையே இல்லாமல் ஒரு உணவு கலைஞராக தனக்கென்று ஒரு தனிப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.
உணவு திருவிழாவிற்காக மதுரைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஐஸ்வர்யாவுக்கு இருக்கிறது. அவர் மட்டுமே காரில் மதுரைக்கு பயணிக்கிறார். அப்போது நடுவழியில் ஐஸ்வர்யாவை சந்திக்கும் நிரஞ்சன், தன்னை போகிற வழியில் திருச்சியில் இறக்கி விட்டு விடும்படி கெஞ்சுகிறார். அவருடைய டீசண்டான தோற்றம் ஐஸ்வர்யாவுக்கு நம்பிக்கை கொடுக்க அவரையும் அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார் ஐஸ்வர்யா.
காரில் போகும்போது நிரஞ்சனை நம்பாமல் அவரை புகைப்படம் எடுத்து அவருடைய ஐடி கார்டுகளை எல்லாம் வாங்கிப் பார்த்து ஒரு மாதிரியாக மனதை தேற்றிக்கொண்டு “இவன் திருடன் இல்லை; கொள்ளைக்காரன் இல்லை” என்று நினைத்துக் கொள்கிறார் ஐஸ்வர்யா.
போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். அதன் பின்பு ஒரு சிறுமியிடமிருந்து தின்பண்டங்களை வாங்கிக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்ச தூரம் சென்றபோது சிறுவன் தன்னுடைய மாட்டையும், கன்னு குட்டியையும் அழைத்து வருகிறான். அது நடுரோட்டில் நின்றிருந்ததால் ஐஸ்வர்யாவின் பயணம் கொஞ்சம் தடைப்பட்டு பின்பு நகர்கிறது.
இதற்கு பிறகும் நிரஞ்சனை அவருடைய ஊரின் அருகே அவரை இறக்கி விட்ட பொழுது “ஊருக்குள்ள வந்துட்டு போங்க” என்று அழைக்கிறார் நிரஞ்சன். ஆனால், ஐஸ்வர்யா அதற்கு மறுக்கிறார்.
நிரஞ்சனை டிராப் செய்துவிட்டு சென்ற ஐஸ்வர்யாவின் பார் ஒரு பெரிய விபத்தில் சிக்கினாலும் சீதா உயிர்த் தப்பி விடுகிறார்.
இந்த நேரத்தில்தான் ஐஸ்வர்யா யோசித்துப் பார்க்கிறார். தான் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் இப்போதுவரையிலும் என்ன நடந்தது என்பதை ரிவேட் செய்து பார்க்கும்பொழுது தான் சற்று தாமதமாக வந்தது தன்னுடைய உயிரையே காப்பாற்றி இருக்கிறது என்று நினைக்கிறார்.
அதனால் தன்னுடைய உயிரை காப்பாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மீண்டும் பயணத்தில் தான் சந்தித்த நிரஞ்சனை அவரது கிராமத்திற்கு சென்று சந்தித்து பேசுகிறார். அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகுகிறார்.
அதன் பிறகு நிரஞ்சனையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய பயணத்தில் தான் சந்தித்தவர்கள் எல்லாம் நேரில் பார்த்து நன்றி சொல்ல கிளம்புகிறார்.
இந்தப் பயணம் சீதாவுக்கு நிறைவை கொடுத்ததா… நிரஞ்சன் இவரது காரில் பயணித்தது திட்டமிட்டதா அல்லது தானாக நடந்ததா… சீதா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாரா… என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த சீதா பயணத்தின் திரைக்கதை.
30 வயதை கடந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் அவருடைய முகத்திலேயே அவருடைய வயது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் அவருடைய உருண்டை முகமும், அழகான கண்களும் ரசிகர்களை ஏதோ ஒன்று செய்கிறது.
இதுவரையிலும் ஐஸ்வர்யா அர்ஜுன் மிகப் பெரிய ஹீரோக்களுடன் நடிக்காமல்விட்டதினாலும், அவருக்கான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காட்சிகளும், திரைக்கதை அமைப்புகளும் அவருக்கு கிடைக்காததால் இன்னமும் இங்கே பிரபலமாகாமல் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஆனால், இந்தப் படத்தில் மிக அழகாக, நிறைவாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதிலும் தன்னுடைய அப்பாவோடு முகம் கொடுத்து பேச முடியாத அளவுக்கு கொஞ்சம் கோபத்தில் இருந்தாலும் கடைசியாக சத்யராஜ் மீது அவர் வைத்திருந்த பாசத்தை காட்டுகின்ற காட்சிகளிலும் ஒரு அருமையான அப்பா மகளாக நமக்கு தெரிகிறார்கள்.
ஐஸ்வர்யாவின் நடிப்பில் செயற்கைத்தனம் எல்லாம் எதுவும் இல்லாமல் மிக, மிக இயற்கையாக நம்முடைய மனதை தொடும் அளவுக்கு நடித்திருக்கிறார். அதிலும் நிரஞ்சனை சந்தேகப்பட்டு கொண்டே காரில் வரும்போதுதான் லேசான புன்னகையை நம்மால் சிந்த முடிகிறது.
இறுதியாக தன்னுடைய மனதில் இருந்த காதலை இளைஞரிடம் வெளிப்படுத்தும்போது “இதுக்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்பதுபோல சத்தியராஜ் அந்த நேரத்தில் காட்டும் நடிப்பையும் பார்க்கும் பொழுது நமக்கே மனம் பூரிக்கிறது. வாழ்க என்று சொல்லவும் வைத்திருக்கிறார்கள் அப்பாவும் மகளும்.
ரொம்ப நாட்கள் கழித்து பிரகாஷ் ராஜ் ஒரு அருமையான கதாபாத்திரத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் தெரிகிறார். அவருடைய உருவமும், தோற்றமும் அவருடைய குரலும், வசன டெலிவரியும்…. மற்ற நடிகர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கிறது. இந்தப் படத்திலும் அவர் தன்னுடைய ஸ்டைலான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் வைத்து நம்மை கவர்ந்து இருக்கிறார்.
இடையில் வரும் ஒரு சண்டைக் காட்சி இவர்களை காப்பாற்றுவதற்காக அர்ஜுனூம், துருவ் ஷார்ஜாவும் சண்டையிடும் கட்சியில் அனல் பறக்கிறது. இப்போதும் விஜயகாந்துக்கு பின்பு சண்டை காட்சியில் ஸ்டைலை காட்டுவது அர்ஜுன் மட்டும்தான்! அதுவும் இந்த சண்டை காட்சிகளிலும் தெரிந்தது.
கோவை சரளாவின் மகனும், மருமகளும் டைவர்ஸ் செய்யப் போவதாக சொன்னவுடன் அவர்களை காரில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைப்பதுபோல நிரஞ்சனும், சீதாவும் தங்களை தம்பதிகளாக காட்டி ஏமாற்றி பேசிக் கொண்டே வருகின்ற அந்த திரைக்கதை சிம்ப்ளி சூப்பர். உண்மையாகவே சிறப்பாக இருந்தது.
வாழ்க்கை என்றால் என்ன என்பதை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் ஒரு நொடி கோபத்தில் எல்லாம் வாழ்க்கையை தொலைத்து விட்டு யாரும் போக மாட்டார்கள். இதைத்தான் இந்தப் படத்தில் ஒரு அழகான இணைக் கதையாக வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவு இந்தப் படம் ஒரு டிராவல் மூவி என்பதால் அதற்கேற்றவாறு அதற்கு தோதான இடங்களில் காட்சிகளை வைத்து படமாக்கி இருக்கிறார்கள். சண்டை காட்சிகளை படமாக்கி இருக்கும் விதமும் அழகு.
அனுப் ருபசிங்கின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் பிரகாஷ்ராஜின் கிராமத்தில் அனைவரும் கொண்டாடும் அந்த பாடலும், இசையும் ரசிக்க வைக்கிறது. அதோடு அந்தக் கட்சியில் ஐஸ்வர்யா ஆடும் நடனமும்கூட மிக அழகு என்று சொல்லலாம்.
அர்ஜுன் தன்னுடைய மகளை முன்னிலைப்படுத்தி அவரை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதனாலேயே மற்றைய கதைகளை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகள்… அதோடு சக மனிதர்களிடையே நாம் காட்டுகின்ற அன்பும், பண்பும், ஆதரவும் நிச்சயமாக நமக்கே ஒரு நாளில் நாம் எதிர்பார்க்காத சமயத்தில் திருப்பி வரும் என்பது போன்ற விஷயங்களை இந்தப் படத்தில் அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த அளவில் இந்த படத்தை உருவாக்கியிருக்கும் அர்ஜுனுக்கு நமது பாராட்டுக்கள்.
எப்போதும் அப்பாக்களுக்கு மகள்களைத்தான் அதிகம் பிடிக்கும். அவர்கள் இடையிலான பாச, பந்தம் அளவிட முடியாதது. அந்தப் பாசமும், புரிதலும் அப்பா, மகள் இருவருக்குமே இருந்தால் அவர்கள்தான் இந்த உலகத்தில் மிக அதிக சந்தோஷத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லலாம்.
அப்படி ஒரு அழகான அப்பா மகளை பார்ப்பதற்காக இந்தப் படத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். படைப்பாக்கமாக முதல் பாதையில் கொஞ்சம் போர் அடிப்பது போல சென்றாலும், இரண்டாம் பாதியில் படம் மிக விறுவிறுப்பாக நகர்ந்து கடைசிவரையிலும் நம்மை ஒரு உணர்ச்சி குவியலோடு பார்க்க வைத்திருக்கிறது.
அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் அர்ஜுனுக்கும், படக் குழுவினருக்கும் நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்..!
RATING : 3.5 / 5









