full screen background image

COUPLE FRIENDLY – சினிமா விமர்சனம்

COUPLE FRIENDLY – சினிமா விமர்சனம்

யூவி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் அஜய் குமார் ராஜு தயாரிப்பில் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கப்புள் ஃபிரண்ட்லி‘.

இந்தப் படத்தில் சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுவும் காதல் கதைதான். ஆனாலும், கொஞ்சம் மாறுபட்ட கதையாக வந்திருக்கிறது.

வீட்டில் அப்பாவின் அனத்தல் தாங்காமல் சொந்த ஊரான திருச்சியில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார் ஹீரோ சந்தோஷ் ஷோபன். அவர் இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் படித்திருக்கிறார். அதற்கு ஏற்ற வேலையை தேடிக் கொண்டே இருக்கிறார். போகும் இடங்களில் எல்லாம் கெட் அவுட் என்று சொல்லாமல் மரியாதையாக சொல்லி வெளியே அனுப்புகிறார்கள்.

இதே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஹீரோயின் மானசா தன்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலையை ஐடி துறையில் தேடிக் கொண்டிருக்கிறார். அவருடைய தந்தையும் “உடனே கிளம்பி திருநெல்வேலிக்கு வந்து சேர். உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்..” என்று தொந்தரவு செய்கிறார்.

ஒருநாள் ஹீரோயின் ஊருக்கே போகலாம் என்று நினைத்து கிளம்புகிறார். ஹீரோ இப்போதைக்கு பணம் சம்பாதிக்க வேண்டுமே என்பதற்காக டூவீலரில் வாடகைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேலையை செய்கிறார்.

அப்படித்தான் இந்த ஹீரோயினையும் ஹாஸ்டலில் இருந்து பிக்கப் செய்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விடுகிறார். பஸ்ஸில் ஏறிய ஹீரோயின் அடுத்த நிமிடமே இறங்கி வந்து “இன்னொரு ஆபீஸ்ல இருந்து என்னை நாளைக்கி வரச் சொல்லி இருக்காங்க. அதனால மறுபடியும் என்னை ஹாஸ்டலில் விட்ருங்க..” என்கிறார்.

ஆனால் ஹாஸ்டலில் அதற்குள்ளாகவே ஆள் வந்து விட்டதால் வேறு வழியில்லாமல் அன்றைய நாள் முழுவதும் ஹீரோயினை வைத்து கொண்டு சென்னையில் ரவுண்டு அடிக்கிறார் ஹீரோ. எங்குமே இடம் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் ஹீரோ தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். லேட் நைட் ஆனதால் ஹீரோயினும் அந்த பேச்சுலர் வீட்டில் அவரும் ஒரு பேச்சிலராக சேர்ந்து கொள்கிறார்.

இப்போது ஹீரோ, ஹீரோயின் இருவருமே தினமும் வேலை தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள். கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஹீரோவிடம் பேச்சுத் திறமை இல்லை என்பதை ஹீரோயின் கண்டறிந்து அதை போக்கும்விதத்தில் மோட்டிவேஷனாக ஹீரோவிடம் நிறைய விஷயங்களை சொல்லி அவரை உருமாற்றுகிறார்.

ஹீரோயினின் வார்த்தைகளை நம்பி ஹீரோவும் அவர் சொன்னதுபோல வேலை தேடமுதலில் ஒரு சின்ன வேலை கிடைக்கிறது. அதை கச்சிதமாக செய்து முடித்தவுடன், அதற்கு அடுத்து இன்னும் கொஞ்சம் பெரிய வேலை கிடைக்கிறது. அப்படியே இருவரும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். இப்போது ஹீரோ பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

இந்த நேரத்தில் ஹீரோயின் அப்பாவுக்கு இந்தக் காதல் தெரிந்துவிட அவர் இவர்கள் இருவரையும் பிரிக்கும் வேலையை செய்கிறார். காதலை மறக்க முடியாத ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார்? இவர்கள் காதலில் ஜெயித்தார்களா? கல்யாணத்தில் இணைந்தார்களா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ஹீரோ சத்யாவாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன் தெலுங்கு நடிகர் என்றாலும் தமிழ் வசனங்களை அவ்வளவு அழகாக உச்சரித்து இருக்கிறார். இப்போதைய தலைமுறையினர் எப்படி எல்லாம் இருக்க ஆசைப்படுகிறார்கள்.. எப்படி வாழ்கிறார்கள்.. என்பதையெல்லாம் இந்தப் படத்தில் காதலுடன் சேர்த்து இந்த நாயகன் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதற்கேற்ற நடிப்பையும் அழகாக காட்டியிருக்கிறார் ஹீரோ.

அப்பாவின் குத்தல் பேச்சுகளை தாங்கிக் கொண்டு தன்னுடைய அவல நிலையை எண்ணி வருத்தப்படும் ஹீரோ, சென்னை வந்து வேலை தேடும் இடங்களில் எல்லாம் அவமரியாதையே கிடைக்கும்போது ஒரு அப்பாவியாக நம்முடைய பரிதாபத்தை சம்பாதித்து விடுகிறார்.

அதற்குப் பிறகு ஹீரோயினின் வரவு வந்தவுடன் அவருடைய உதவியோடு மென்மேலும் மேலே வளர்ந்து கொண்டே போகின்றபோது ஒரு கெத்தான தோற்றமும் அதே அளவுக்கான நடிப்பையும் ஹீரோ காட்டியிருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பலமாக சேர்ந்திருக்கிறார் ஹீரோயின் மானசா வாரணாசி. அழகான முகம்.. கேமராவுக்கேற்ற முகம். தன்னுடைய நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். அதே சமயம் இரண்டாம் பாதியில் ரொம்பவே கண் கலங்கவும் வைத்துவிட்டார். இப்படி ஒரு சோகம் எந்த ஹீரோயினுக்கும், எந்த காதலிக்கும் நடக்கவே கூடாது என்று படம் பார்க்கும் ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறார்.

கேரளாவில் இயற்கை காட்சிகளை அனுபவிக்கும் அந்த நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரின் நடிப்பும் நம்மை உச்சுக் கொட்ட வைத்துவிட்டது.

யோகி பாபு சில காட்சிகளே என்றாலும் குபீர் சிரிப்பினை வரவழைப்பதுபோல வசனங்களை பேசி அழகாக நடித்திருக்கிறார். சுனில் ரெட்டி நாம் பொறாமையாக பார்க்கின்ற அளவுக்கு ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். இவருடைய காதலியாக நடித்தவரின் நடிப்பும் சிறப்புதான்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் சென்னை நகரை அலசி ஆராய்ந்து அட்டகாசமாக காண்பித்திருக்கிறார். ஹீரோ, ஹீரோயின் இருவரின் பேச்சிலேயே காதல் எழும் தருணம்… அவர்கள் முதன்முதலில் கூடுகின்ற அந்தக் காட்சியை ஒரு கவிதையாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம்தான். ஆனால் அந்த கிளைமாக்ஸ் பாடல் நம் மனதை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். பின்னணி இசையை   மென்மையாக இசைத்து படத்தின் திரைக்கதைக்கு மிகவும் உதவி இருக்கிறார்.

கலை இயக்குநர் மைக்கேல் வட சென்னையில் கதைக்குப் பொருத்தமான இடங்களை தேடி கண்டுபிடித்து அந்த சின்ன வீட்டின் உட்புறத்தையும் அழகாக்கி பார்க்க வைத்திருக்கிறார். அதேபோல் படத் தொகுப்பும் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம். கொஞ்சம் தவறினாலும் நமக்கு புரியாமல் போகும் காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஆனால் அது எதுவும் நம் கண்ணில் படாமல் போகாத அளவுக்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் காதல் என்பது எதற்காக? ஏன் காதல் கொள்ள வேண்டும்? காதலுக்கு அடுத்தபடி என்ன…? இப்போதைய இளையவர்கள் காதல், திருமணம், குழந்தை… அனைத்தையுமே மிக எளிதாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

காதலர்களின் முதல் நம்பிக்கையே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்றவாறு அவர்களின் பொருளாதார நிலைமை, பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய பெற்றோர்களின் கருத்தும்கூட!!

ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கின்ற பாணியில் இந்தப் படத்தில் இருக்கும் சில காட்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். நிச்சயமாக அந்தக் காட்சிகளை வைத்திருக்கக் கூடாது. மேலும் முத்தக் காட்சிகளும் அளவுக்கு அதிகமாகவே இடம் பெறுவது தேவையில்லாத்து. இதனால்தான் இந்தப் படத்திற்கு ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த்து சரியானதுதான்.

இந்தக் காட்சிகள் இல்லாமல் இந்தப் படத்தைக் கொண்டு வந்திருந்தால் இந்தப் படத்தின் இயக்குநரை மென்மேலும் பாராட்டியிருக்கலாம். மேலும், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பட லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பெற்றிருக்கும்.

இன்னொரு பக்கம் தன்னுடைய காதலனிடம் இருக்கும் ஒரு குறையை சுட்டிக்காட்டி அதை தவிர்த்து எப்படி செய்தால் மேலே வரலாம் என்பதை சொல்லும் ஒரு அறிவுள்ள காதலியை, காதலனுக்கு அடையாளம் காட்டும்விதத்தில் படம் பார்க்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இயக்குர்.

காதலில் எதிர்ப்புகள் வந்தால் அதைப் பேசித் தீர்த்து எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்றுதான் காதலனும், காதலியும் நடக்க வேண்டும். அது இல்லாமல் அவர்களை அழித்துக் கொள்வதெல்லாம் முட்டாள்தனம் என்பதையும் இந்தப் படத்தில் திரை வடிவங்களாக காட்டி இருக்கிறார் இயக்குநர். ஆனால் இதை ஒரு வசனத்தின் மூலமாக நிச்சயமாக சொல்லி இருக்கலாம். இயக்குநர் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.

தாங்கள் வாழ்வில் உயர்வதற்காக எத்தனையோ வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நம்மிடம் இருக்கும் ஏதேனும் ஒரு குறையை சரி செய்துவிட்டு மீண்டும் முயலலாம். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று இந்த படத்தின் ஹீரோயின் ஹீரோவுக்கு சொல்கிறார். அதுதான் இந்தப் படத்தின் மூலமாக நாம் கற்றுக் கொண்ட ஒரு பாடமும்கூட!

‘COUPLE FRIENDLY’ என்று  வைத்திருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

இந்தப் படத்தை காதலர்கள் மட்டுமல்ல; பெற்றோர்களும் நிச்சயமாக பார்க்க வேண்டும்.

RATING : 3.5 / 5

Our Score