ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகத்தில் அதிகமாக நகைச்சுவை படங்களும் குறைவான சீரியஸ் டைப் படங்களும் வெளியாகும்.
ஆனால், இன்றைக்கு.. சமீப ஆண்டுகளாக 90 சதவிகிதம் சீரியஸ் டைப் படங்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மலையாளத் திரையுலகத்தின் நகைச்சுவை நடிகர்களே இப்போது சீரியஸ் கேரக்டரிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால் நகைச்சுவைக்கென்றே தனியாகக் கதை செய்வதையும் மலையாள இயக்குநர்கள் நிறுத்திவிட்டார்களோ என்று சொல்லத் தோன்றுகிறது.
மம்முகோயா, இந்திரன்ஸ், சலீம், சூரஜ் வஜ்ரமூடு என்று பிரபலமான நகைச்சுவை நடிகர்களே சீரியஸ் கேரக்டர்களில் நடிக்கத் துவங்கியதால் காமெடி படங்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மலையாள நடிகரான பிருத்விராஜ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் இது குறித்து பேசும்போது, “மலையைளத்தில் தற்போது காமெடியான படங்களை உருவாக்குவதற்கு இயக்குநர்களிடையே ஏகப்பட்ட தயக்கம் காணப்படுகிறது.
காமெடி படங்களுக்கு நிறைய நடிகர்கள் வேண்டும். காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு நிறைய உழைக்க வேண்டும். பெரிய அளவு பட்ஜெட் வேண்டும் என்ற விஷயங்கள் இருப்பதால் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள்.
மக்கள் தியேட்டரில் விசிலடித்து கை தட்டி ஆரவாரம் செய்து பார்க்கும் வகையிலான படங்கள் வெளியாகி சில வருடங்களாகிவிட்டது. தற்போது மிகவும் சீரியஸான கதையம்சம் கொண்ட படங்கள்தான் வெளியாகிறது. திரில்லர் மற்றும் கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் வகைப் படங்கள்தான் அதிகமாக வெலியாகிறது.
ரசிகர்களுக்கு இது போன்ற படங்களும் தேவையென்றாலும் இது மட்டுமே போதாது. சினிமா என்பது எல்லாவிதமான உணர்வுகளின் கலவையாக இருக்க வேண்டும். எனவே ஜனரஞ்சகமான, மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டாடும் நகைச்சுவை அம்சம் கொண்ட படங்களை மலையாள இயக்குநர்கள் உருவாக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.