“என்னை அறிந்தால் படத்தின் கதையை சொன்னபோது திரிஷாவுக்காக, அனுஷ்கா தன் கதாபாத்திரத்தை விட்டுக் கொடுக்க முன் வந்தார்..” என்று டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
‘தல’ அஜித்குமார் கதாநாயகனாகவும், திரிஷா-அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் செய்திருக்கும் ‘என்ன அறிந்தால்’ படம் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குநரும், தயாரிப்பாளரும் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “என்னை அறிந்தால்’ படத்தின் கதை, ஒரு மனிதனின் வாழ்க்கை பயணம் என்று சொல்லலாம். இந்தப் படத்தில் அஜித்குமார் பல தோற்றங்களில் நடித்து இருக்கிறார்.
அஜீத்தின் ரசிகர்களுக்காகவே படத்தில், நிறைய ‘பஞ்ச்’ வசனங்களை எழுதியிருந்தேன். ஆனால் அதெல்லாம் அளவுக்கதிகமாக இருப்பதாக அஜித் கருதியதால், குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், படம் பார்க்கும்போது ரசிகர்கள் கைதட்டும் வகையில், ‘பஞ்ச்’ வசனங்கள் உள்ளன.
படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்துக்கு, ‘எந்தவாடுகாணி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வகையில், படத்தின் முடிவு அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில், ஒரே ‘கிளைமாக்ஸ்’தான். இரண்டு ‘கிளைமாக்ஸ்’சை படமாக்கவில்லை. அப்படி படமாக்கப்பட்டதாக வெளியான செய்தி வெறும் வதந்திதான். படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி நியூயார்க், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில், திரிஷா-அனுஷ்கா என இரண்டு பெரிய கதாநாயகிகள் இருக்கிறார்கள். என்றாலும், அவர்களால் பிரச்சினை எதுவும் இல்லை. இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மையெதுவும் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்படவில்லை.
திரிஷாவிடம் கதை சொன்னபோது, அனுஷ்கா கதாபாத்திரம் பற்றி விசாரித்தார். ஆனால், திரிஷாவின் கதாபாத்திரம் பற்றி அனுஷ்கா விசாரிக்கவில்லை. ‘உங்கள் கதாபாத்திரம் பற்றி திரிஷா விசாரித்தார்’ என்று அனுஷ்காவிடம் கூறியபோது, ‘வேண்டுமானால், என் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கட்டும்’ என்று அனுஷ்கா விட்டுக்கொடுக்க முன் வந்தார். இரண்டு பேரில் யார் சீனியரோ, அவர் பெயர் டைட்டிலில் முதலில் வரும்” என்றார்.
அப்போ திரிஷா பெயர்தான் முதலில் வரும்..!